

Dr.காதம்பினி கங்குலி, ஜூலை 18, 1861 அன்று பீகார் மாநிலத்திலுள்ள பாகல்பூரில் பிறந்தார்.
இந்தியப் பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்த காலமாக அப்போது இருந்த போதிலும், பாகல்பூர் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த காதம்பினியின் தந்தை கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, காதம்பினியை பள்ளியில் சேர அனுமதித்தார்.
1883ஆம் ஆண்டு ஒரு காலைப் பொழுதில், ஒரு இளம் வங்காளப் பெண் கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் உயரமான வாயில்களுக்கு வெளியே நின்றாள். அங்கு இதுவரை எந்தப் பெண்ணும் மாணவியாகக் கால் பதித்ததில்லை.
உள்ளே, பேராசிரியர்கள் கடுமையாக வாதாடி கொண்டிருந்தார்கள். கல்லூரியின் முதல்வரோ தயக்கத்தோடு இருந்தார். கல்லூரி மாணவர்களோ, ஒரு பெண் மருத்துவம் படிக்க போகிறாளா என்று ஆச்சரியத்தோடு நம்ப முடியாமல் கிசு கிசுத்து கொண்டிருந்தார்கள்.
மருத்துவக் கல்லூரியின் நுழைவாயிலுக்கு வந்த காதம்பினி, மருத்துவ கல்லூரியில் படிக்க பெண்கள் வரவேற்கப்படுவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்த போதிலும் அதை உடைத்தெறிக்கும் வகையில் விண்ணப்பித்திருந்தார். அன்று அமைதியாக, ஆரவாரமின்றி எடுக்கப்பட்ட அவருடைய நடவடிக்கை, அவரை இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராக்கியது.
காதம்பினி அவர்கள் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பித்தபோது, அந்த நிறுவனம் அவளை சேர்க்க மறுத்துவிட்டது. பெண்கள் அதன் வகுப்பறைகளுக்குள் ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை; பல பேராசிரியர்கள் ஒரு பெண்ணுக்குக் கற்பிப்பது பொருத்தமற்றது என்று வாதாடினார்கள்.
ஆனால் சீர்திருத்தவாதியான துவாரகநாத் கங்குலி பொதுமக்களின் ஆதரவைத் திரட்டினார். செய்தித்தாள்கள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் அவரை கல்லூரியில் சேர்க்கக் கோரினர். அழுத்தம் மிகவும் வலுவாக வளர்ந்ததால் கல்லூரி தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த துவாரகநாத் கங்குலியை தான் காதம்பினி பின்னால் திருமணம் செய்து கொண்டார்.
இந்த போராட்டம், காதம்பினி வகுப்பறைக்குள் நுழைந்த பிறகும் ஓயவில்லை. சில பேராசிரியர்கள் அவளுக்குக் கற்பிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், தேர்வு எழுதவும் மறுத்து விட்டார்கள். இறுதியில், கல்லூரி நிர்வாகம் தலையிட்டு, மற்ற மாணவர்களைப் போலவே அவளை நடத்துமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டது. அவருடைய இந்த மருத்துவ கல்லூரியின் சேர்க்கையானது இந்தியாவில் பெண்கள் கல்விக்கு ஒரு புரட்சியாக திகழ்ந்தது.
1886ஆம் ஆண்டு, காதம்பினி தனது மருத்துவப் பயிற்சியை முடித்து, பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் மருத்துவ பட்டதாரிகளில் ஒருவரானார். பின்னர் அவர் உயர்நிலை பயிற்சிக்காக இங்கிலாந்துக்குச் சென்று, பல மருத்துவத் தகுதிகளைப் பெற்று, மகப்பேறு மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பி வந்த பிறகு அவர், லேடி டஃபெரின் மருத்துவமனையில் மகளிர் மருத்துவ நிபுணராகப் பணிபுரிந்தார், பின்னர் சொந்தமாக தனியார் மருத்துவ பயிற்சியையும் தொடங்கினார்.
எட்டு குழந்தைகளின் தாயாகவும், மருத்துவராகவும் திகழ்ந்த காதம்பினியின் பரபரப்பான வாழ்க்கை, அவர் இந்தியாவின் பெண்கள் உரிமை இயக்கத்தில் பங்கு வகிப்பதைத் தடுக்கவில்லை.
தனது புரட்சிகரமான மருத்துவ வாழ்க்கைக்கு அப்பால், டாக்டர் கங்குலி சமூக சீர்திருத்தத்திற்கான தீவிர ஆதரவாளராக இருந்தார். குழந்தை திருமணம், வரதட்சணை மற்றும் விதவைகள் மீதான அடக்குமுறை போன்ற பழக்கவழக்கங்களை ஒழித்து, பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்து சமூகத்தை நவீனமயமாக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இயக்கமான பிரம்ம சமாஜத்தில் அவர் தீவிரமாக பங்கேற்றார். இந்த இயக்கத்தில் டாக்டர் கங்குலி அவர்களின் ஈடுபாடு சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
1889ல் அவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் குழுவில் ஆறு பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார், மேலும் 1906இல் கல்கத்தாவில் பெண்கள் மாநாட்டை துவங்கவும் ஏற்பாடு செய்ய உதவினார். கிழக்கு இந்திய நிலக்கரி சுரங்கப் பெண் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்த மிகவும் போராடினார். இது மட்டுமில்லாமல், பெண்களுக்கான பல்வேறு இயக்கங்களிலும் அவர் மிகவும் தீவிரமாக போராடினார்.
இறுதிமூச்சு வரை மருத்துவத் தொழிலை மக்கள் சேவையாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்த டாக்டர் காதம்பினி கங்குலி 1923-ல் தன்னுடைய 62வது வயதில் மறைந்தார்.