

ஒரு விமானத்தை இயக்குவது என்பது பலரது நம்பிக்கைக்கு பாத்திரமாகி , பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிகளின் உயிருக்கும் பொறுப்பாக இருந்து, அவர்களை பத்திரமாக இலக்கில் கொண்டு சேர்ப்பதுதான். விமானம் ஓட்டுவது கடும் சவால்கள் நிறைந்த பணியாக இருந்ததால் ஆரம்ப காலத்தில் ஆண்கள் மட்டுமே விமானியாக பயிற்சி பெற்று பணியேற்றுக் கொண்டனர். சவால்கள் நிறைந்த இப்பணியை பெண்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று பலரும் நினைத்தனர்.
அந்த காலக் கட்டத்தில், துணிச்சலான இந்தியப் பெண் ஒருவர் முதன்முதலில் விமானத்தை ஓட்டி தன் தைரியத்தை நிரூபித்தார். அவரது சாதனை பல இந்தியப் பெண்கள் விமானிகளாக மாறுவதற்கு ஊக்கமாக இருந்துள்ளது. அந்த துணிச்சல் மிக்க பெண்ணின் பெயர் சர்ளா துக்ரால் என்பதாகும்.
1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் சர்ளா துக்ரால். சிறு வயதில் இருந்தே சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், விமானத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.
அவரது இளம் பருவத்தில் இந்தியாவில் விமானங்களை பார்ப்பதே மிகவும் அரிய விஷயமாக இருந்துள்ளது. இந்தியா பிரிட்டிஷால் அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டி வழித்து எடுத்த காலக் கட்டம் வேறு. அப்போது அவரது கனவு எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று யூகிக்கவும் முடியவில்லை. ஆனால், ஒருவரின் கனவுகளுக்கு எல்லை இல்லை.
சர்ளா, லாகூர் ஃப்ளையிங் கிளப்பிற்குச் சொந்தமான விமானத்தை ஆயிரம் மணிநேரம் விடாமுயற்சியுடன் ஓட்டி சாதனை செய்தார். 1936 ஆம் ஆண்டு தனது 21 வயதில் ஜிப்சி மோத் விமானத்தில் தனியாக விமானம் ஓட்டும் உரிமத்தைப் பெற்றார்.
அவரது விமானத்தின் மீதான ஆர்வத்திற்கு, அவரது குடும்பமும் ஒரு காரணமாக உள்ளது. சர்ளா 16 வயதில் விமானி குடும்பத்தை சேர்ந்த பி.டி.ஷர்மாவை மணந்ததும் அவரது கனவுகள் நனவாக தொடங்கின. அவரது கணவரின் குடும்பத்தில் அப்போது 9 விமானிகள் இருந்துள்ளனர்.
அவரது கணவர் பி.டி. சர்மா, இந்தியாவில் அஞ்சல் விமான விமானி உரிமம் பெற்ற முதல் இந்தியர் ஆனார். வெளிநாடுகளில் சில பெண்கள் மட்டுமே பறக்கத் துணிந்த காலத்தில் சரளா வரலாற்றைப் படைத்தார். சரளா A உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்களில் ஒருவரானார். சரளாவிற்கு பறப்பது பற்றி பல கனவுகள் இருந்தாலும் அவரது கணவரின் தீடிர் மறைவு அவருக்கு பின்னடைவாக இருந்தது. 1939 ஆம் ஆண்டு அவரது கணவர் பி.டி.சர்மா விமான விபத்தில் இறந்தார்.
அதன் பிறகு குடும்பத்தின் பொறுப்பை சர்ளா ஏற்றுக் கொண்டார். சில காலங்களுக்கு பின் அவருக்கு வணிக விமானி ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் , அது இரண்டாம் உலகப் போரின் மோசமான காலக் கட்டம், அப்போது சிவில் விமானப் பயிற்சி நிறுத்தப்பட்டது. கணவரின் துயர மரணம் மற்றும் இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட சவால்கள் இருந்தபோதிலும், அவர் தனது உறுதியால் ஊக்கமளிக்கும் வகையில் வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
சர்ளா தனது குழந்தையை வளர்க்கும் பொறுப்புகளால் கனவுகளுக்கு விடை கொடுத்தார். ஆயினும் அவர் எங்கும் சோர்ந்து விடவில்லை. வேறு வகையில் தனது கனவுகளை தொடர்ந்தார். மீண்டும் லாகூர் சென்ற சர்ளா, அங்கு மேயோ கலைப் பயிற்சி பள்ளியில் சேர்ந்து கலைகளை கற்றுக் கொண்டார். மேலும் அவர் அங்கு வங்காள ஓவியப் பள்ளியில் பயிற்சி பெற்று, நுண்கலைகளில் டிப்ளோமா பெற்றார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் டெல்லிக்கு திரும்பிய சர்ளா வெற்றிகரமான தொழிலதிபராக தொடர்ந்தார். பின்னர் ஆர். பி. தக்ரலைச் 1948 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். ஆடைகள் மற்றும் நகைகள் வடிவமைப்பில் சிறந்து விளங்கினார்.