
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சில நிறங்களை அடையாளமாகக் கொண்டு வெளியாகின்றன. இந்த நிறங்களைக் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பின் தன்மையினை நாம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாகவே, ஒவ்வொரு பருவ காலங்களிலும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகளில் ஒன்று தான் அலர்ட்.
பருவ காலங்களில் அலர்ட்கள் குறித்த அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வரும். அதுவும் குறிப்பாக வரவிருக்கும் வானிலை நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தீவிரம் குறித்து மக்களுக்கு தெரிவிக்க நிறத்தின் அடிப்படையில் எச்சரிக்கைகள் வெளியிடப்படும். மழைக் காலங்களில் விடுக்கப்படும் ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட் என்றால் என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. அன்று முதல் கனமழை தொடர்பாகவும், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த நான்கு நாள்களாக தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளன.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்ச் (Red Alert, Orange Alert, Yellow Allert) என்ற நிறங்களில் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதன் விளக்கம் குறித்து காணலாம்.
1. 'ரெட் அலர்ட்’ (Red Alert):
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கைகளிலேயே மிக அபாயகரமானது ரெட் அலர்ட் எனும் சிவப்பு எச்சரிக்கை ஆகும்.
வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரத்தில் 20 செ.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் பட்சத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படும். மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விடுக்கப்படும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும்.
தீவிரம்: மிகப்பெரும் கனமழை, பலத்த காற்று, பரந்த அளவிலான வெள்ளம்.
அபாய நிலை: கடுமையான வெள்ளம், நிலச்சரிவு, கட்டமைப்புகளில் சேதம்.
2. ‘ஆரஞ்ச் அலர்ட்’ (Orange Alert) :
ஆரஞ்சு அலர்ட் என்பது 115 மி. மீ. முதல் 204.5 மி. மீ வரை மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டால் அப்போது கொடுக்கப்படும். ஆரஞ்சு அலெர்ட் என்பது, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கும் எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால், மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைக்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த நேரங்களில் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
3. ‘மஞ்சள் அலர்ட்’ (Yellow Alert):
வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது மஞ்சள் அலர்ட் ஆகும். அதாவது 6 செ.மீ முதல் 20 செ.மீ மழை வரை அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவது ஆகும்.
இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது. மேலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும்.
4. ‘பச்சை அலர்ட்’ (Green Alert):
பச்சை அலர்ட் வந்தால் மக்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஏதாவது எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே இந்த பச்சை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுவிக்கும். இதற்கு இந்த விதமான ஆலோசனையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.