பட்டின் தரம், நேர்த்தி, தோற்றம் தூயப்பட்டு போன்ற காரணங்களுக்காக பட்டுப்புடவை வாங்க நினைக்கும் ஒவ்வொருவரும் பரிச்சயப்பட்ட மற்றும் பிரபலமான கடைகளில் வாங்க நினைக்கிறார்கள். பட்டுப்புடவையின் நேர்த்தியால் எது உண்மையான பட்டு எது போலியானது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. உண்மையான பட்டு நூலை எளிதில் அடையாளம் காண உதவும் 5 எளிய வழிமுறைகள் குறித்து கட்டுரையில் காண்போம்.
1. தொடுதல் சோதனை
உண்மையான பட்டைத் தொடும்போது, அது சற்று குளிர்ச்சியாகவும், மென்மையாகவும் இருப்பதை உணர முடியும். அதுமட்டுமின்றி பிடிப்பதற்கு லேசாக இருக்கும். அதேசமயம் போலி பட்டு பொதுவாக கடினமாக இருக்கும்.
2. எரித்தல் சோதனை
பட்டின் தூய்மையை பரிசோதிக்க விரும்பினால், ஒரு சிறிய நூலை எடுத்து எரிக்கவும். அந்தப் பட்டு உண்மையானதாக இருந்தால், அது எரியும் மற்றும் முடியைப் போல மணக்கும். எரிந்த பிறகு சாம்பல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதேசமயம், போலி பட்டு எரியும் போது, அது ஒரு பிளாஸ்டிக் வாசனையை வெளியிடும். மேலும் அதன் சாம்பல் தடிமனாக இருக்கும்.
3. நீர் சோதனை
உண்மையான பட்டுப் புடவையில் தண்ணீர் ஊற்றும்போது, அது மெதுவாக உறிஞ்சப்படும். ஆனால் போலி பட்டில், தண்ணீர் உடனடியாக வெளியேறும் அல்லது தண்ணீர் துளிகள் சிதறும். இந்த முறை பட்டின் தூய்மையை சரிபார்க்க எளிதான மற்றும் துல்லியமான வழியாகும்.
4. சுருக்க சோதனை
பட்டின் நம்பகத்தன்மையை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், அதை லேசாக அழுத்திப் பாருங்கள். உண்மையான பட்டு இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையைக் கொண்டிருக்கும் மற்றும் லேசான மடிப்புகளை உருவாக்கும். மேலும், அந்த மடிப்புகள் விரைவாக மறைந்துவிடும். அதேசமயம் போலி பட்டில் மடிப்புகள் நீண்ட காலம் நீடிக்கும் அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
5. மோதிர சோதனை
பட்டின் ஒரு மூலையை ஏதாவது ஒரு வளையத்தின் வழியாக அனுப்ப முயற்சி செய்யுங்கள். உண்மையான பட்டு, வளையத்தின் வழியாக எளிதாகக் கடந்து செல்லும். அதேசமயம் போலியான பட்டு அதில் சிக்கிக்கொள்ளக்கூடும்!
மேற்கண்ட 5 எளிய சோதனைகள் செய்வதன் மூலம் பட்டுப்புடவையின் தூய்மையை பரிசோதித்து போலி பட்டு புடவைகளை தவிர்த்து விடலாம்.