

தக்காளி பழ வகையா? காய் வகையா என்று சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில் அது ஆரம்பத்தில் விஷச்செடியாக கருதப்பட்டது என்று தெரிய வந்தால் எப்படி இருக்கும்?
ஆச்சர்யம்தான்!
மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து வழியாக இந்தியாவிற்கு வந்த இந்த தக்காளியைப் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் எந்தக் குறிப்புகளும் இல்லை, அப்படியெனில் தக்காளி இந்தியக் காய்கறி அல்ல என்பது உறுதியாகிறது. அன்றைய மக்களிடையே புழக்கத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவற்றைப் பற்றி ஏதேனும் புறநாநூற்றுப் பாடல்கள் புனையப் பட்டிருக்கப் கூடும். அப்படி பாடல்கள் இல்லை எனும் போது தக்காளி சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்பது புலனாகிறது.
தக்காளி மெக்சிகோவில் இருந்து கடல் வழியாக ஆங்கிலயேர் மூலம் இந்தியாவிற்கு வந்த காய்கறியே என்பதை இப்போது நாம் நம்பலாம்தானே! அப்படி தக்காளியை நமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் தான் ஆரம்பத்தில் தக்காளி சார்ந்திருக்கும் தாவரக் குடும்பத்தின் குணங்களைக் கண்டு அலறி அவற்றை வெறுமே அலங்காரச் செடியாக மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ஏனெனில் தக்காளி சார்ந்திருக்கும் தாவரவியல் குடும்பத்தில் மற்ற செடிகள் எல்லாம் விசத் தன்மை வாய்ந்த மூலக்கருக்களைக் கொண்டவை என்பதால் தக்காளியை பல காலங்களாக உண்ணக் கூடிய பொருட்கள் லிஸ்ட்டில் ஆங்கிலேயர்கள் சேர்க்கவே இல்லை. அந்தக் காலங்களில் அங்கெலாம் வெறும் அலங்காரச் செடியாக மட்டுமே தக்காளி மதிக்கப்பட்டுள்ளது. குரோட்டன்ஸ் செடிகளை அவற்றின் இலைகளின் மாறுபட்ட ஈர்க்கும் நிறக் கலவைக்காக தோட்டங்களின் முன் பகுதிகளில் வைத்து அழகு பார்க்கிறோமே அப்படித் தான் அன்றைக்கு தக்காளியும் இருந்து வந்தது.
முன்பே ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்காரர்கள் தக்காளியை விசமில்லை என்று நிரூபித்து உணவில் சேர்த்துக் கொண்ட போதும் கூட ஆங்கிலேயர்கள் அமெரிக்கர்கள் தக்காளியை உணவுப் பொருளாக மதிக்கத் தொடங்கிய பின்புதான் தக்காளியை உணவில் சேர்க்க ஆரம்பித்தார்களாம்.
தக்காளி இயல்பில் பழமாக இருந்தாலும் கூட அமெரிக்க உயர்நீதி மன்றம் 1893 இல் தக்காளியை காய்கறி வகைகளில் சேர்க்க ஆணையிட்டது, வணிகக் காரணங்களுக்காக இந்த ஆணை ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவிலும் தக்காளி காய்கறி லிஸ்ட்டில் இருந்தாலும் தாவரவியல்படி தக்காளி பழ வகைதான்.
காதலை தூண்டும் சக்தி தக்காளிக்கு இருப்பதால் இதை "லவ் ஆப்பிள் " என்றும் அழைக்கிறார்கள். தக்காளியின் சிவப்பு நிறத்தினால் அதற்கு இப்படியொரு பெயர் தன்னிச்சையாக வழங்கப்பட்டிருக்கலாம்.