-டாக்டர்.ஆர்.வி.அபராஜிதா
தற்காலக் குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சினைகள் குறிப்பாக பல் சொத்தைப் பிரச்சினையானது மிக அதிக அளவில் காணப்படுகிறது.
குழந்தைகளின் பல் பாதுகாப்பு என்பது அவர்களின் முதல் பால் பல் (Primary Tooth) முளைக்கும் முன் இருந்தே துவங்க வேண்டும். குழந்தைகளின் வாயில் முதலில் முளைக்கக் கூடிய பற்களை 'பால் பற்கள்' அல்லது விழும் பற்கள் அல்லது டெசிடுயஸ் பற்கள் (Milk Teeth / Temporary / Decidous Teeth) என்று அழைக்கிறோம். ஒரு குழந்தையின் நான்கு முதல் ஆறு மாத வயதில் அவர்களின் வாயில் முதன் முதலில் பற்கள் முளைக்கத் துவங்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு பல் சொத்தைப் பிரச்சினை உள்ளதா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். இந்த பதிவில் பல் சொத்தைப் பிரச்சினைகளைத் தவிர்க்க சுலபமான பத்து வழிகள் தரப்பட்டுள்ளன.
1. குழந்தைகளுக்கு தினமும் பற்களைத் துலக்கும் வழக்கத்தை உருவாக்க வேண்டும். குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் பொம்மைகள் வடிவத்திலான பல்துலக்கிகள் மற்றும் வண்ணமயமான பல்துலக்கிகளை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
2. குழந்தைகளுக்கு பால்பாட்டிலில் பாலைக் கொடுத்துவிட்டு அப்படியே உறங்கச் செய்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகள் அடிக்கடி நினைத்த நேரங்களில் நொறுக்குத்தீனி சாப்பிடுவதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
4. எந்த உணவை சாப்பிட்டாலும் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீரில் வாயைக் கொப்பளித்துச் சுத்தம் செய்யப் பழக்க வேண்டும்.
5. இனிப்பு வகைகளை அதிகம் தருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக உறங்கச் செல்லும் முன்னர் சாக்லெட் முதலான இனிப்புகளைத் தரவே கூடாது.
6. சர்க்கரை மற்றும் ஒட்டும் தன்மையுடைய (Sticky Foods) உணவுகளைக் குறைத்து சாப்பிட்டால் பற்கள் சொத்தையாவதைத் தவிர்க்கலாம்.
7. சாதாரண சுவிங்கத்தை மெல்லுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக சைலிடால் Xylitol (Anti Carries Agent) சேர்க்கப்பட்ட சுவிங்கத்தை பல்மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.
8. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடப் பழக்க வேண்டும். வைட்டமின் கே மற்றும் சி அதிகம் உள்ள கீரைகள் மற்றும் பழவகைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி சாப்பிட வைக்கலாம்.
9. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல்மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
10. தற்காலத்தில் பிட் & ஃபிஷ்ஷர் சீலண்ட் (Pit & Fissure Sealants), ப்ளுரைடு வார்னிஷஸ் (Fluoride Varnishes) போன்றவற்றை பயன்படுத்தி சொத்தை வராமல் தடுக்கும் நவீன வழிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன. பல்மருத்துவரை நாடினால் அதற்கான வழிமுறைகளைக் கூறுவார்.
இந்த சிறு சிறு விஷயங்களைச் செய்தால் போதும். நாம் நம் குழந்தைகளின் அழகான பற்களை சொத்தை எனும் கருப்பு அரக்கனிடமிருந்து காப்பாற்றி விடலாம்.