தோட்டக்கலைப் பண்ணையில் சோதனைகளை சாதனைகளாக மாற்றிய பெண் விவசாயி ஜெயந்தி!

Woman Farmer Jayanti Nursery Garden
Woman Farmer Jayanti Nursery Garden

விவசாயத்தில் கூடுதல் வருமானம் பெற உப தொழில்கள் பல உள்ளன. ஏதாவது ஒரு விதத்தில் விவசாயத்தோடு தொடர்பு கொண்ட ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நர்சரி தொடங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்துள்ள கூவம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி செடிகளை உற்பத்தி செய்யும் நர்சரி தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மங்கையர் மலர் சார்பாக இவரை சந்தித்துப் பேசுகையில், சுவாரஸ்யம் நிறைந்த தனது வெற்றிப் பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"நான் ஜெயந்தி. பல ஆண்டுகளாக விவசாயம் சார்ந்த தோட்டக்கலைப் பண்ணையை நிர்வகித்து வருகிறேன். பசுமையை மீட்டெடுக்க நான் மேற்கொண்ட முயற்சி தான் இந்த தோட்டக்கலைப் பண்ணை. தொடக்கத்தில் விற்பனை மற்றும் வியாபாரத்தில் சிறிது சிரமங்களை சந்தித்தேன். ஆனால், இப்போது பலபேர் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

எங்கள் பண்ணை முழுக்க கிராமப்புற மகளிரால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கிராமபுறத்தில் ஆர்வமுள்ள மகளிர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு நிதி வருவாய் அளித்து வருகின்றோம். 1990 ஆண்டு தொடங்கப்பட்ட ஜெயந்தி தோட்டக்கலைப் பண்ணை, தமிழ்நாடு அரசு விவசாயத் துறையின் உரிம அங்கீகாரம் பெற்று, சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி வருகிறது. கடந்த 32 ஆண்டுகளாக எவ்வித லாப நோக்கமுமின்றி சேவை மனப்பான்மையை குறிக்கோளாகவும் கிராமப்புற மகளிர் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டும் திறம்பட செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநிலக் கல்லூரியின் 150 வருட நிறைவு விழா மலர் கண்காட்சி விழாவில் பங்கு பெற்று, பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளோம். மேலும் விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு அனைத்து தாவரங்களுக்கான அறிவியல் பெயர்களுடன் இலவச ஆலோசனை வழங்கி வருகின்றோம். இப்படி சேவை மனப்பான்மை ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குப் பரிசளிக்க பூச்செடிகளைத் தரமாக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கிறோம்.

Jayanti Nursery Garden
Jayanti Nursery Garden

எங்கும் கிடைக்காத அரியவகை மரங்களும், பூஜைக்கு உரிய பூக்களைத் தரும் அரிய வகைச் செடிகளும், நாகலிங்க மரம், வன்னிய மரம், வில்வ மரம், மகிழ மரம், பாரிஜாதம், செண்பக மரம், புன்னை மரம் மற்றும் சரக்கொன்றை ஆகியவற்றின் செடிகள் உற்பத்தி செய்து வளர்க்கப்படுகின்றன . இவை மட்டுமின்றி மர வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மரச் செடிகளும், பழ வகை மரச் செடிகளும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
சைக்கிளை ஏர்க்கலப்பையாக மாற்றிய புதுமை விவசாயி ரமேஷ்!
Woman Farmer Jayanti Nursery Garden

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே பசுமைப் புரட்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாகத் தருகிறோம். இன்று வளர்ச்சி என்ற பெயரில் பலரும் இயற்கையை அழித்து வருகிறார்கள். ஆனால், இயற்கையை காப்பது தான் உண்மையான வளர்ச்சி என்பதை இங்கு பலரும் உணராமல் இருக்கின்றனர். இயற்கையை காப்பதற்காகவே தோட்டக்கலைப் பண்ணையை தொடங்கி நல்ல முறையில் வழிநடத்தி வருகிறேன்." மனநிறைவோடு தனது வெற்றிப்பயணத்தைக் கூறி முடித்தார் ஜெயந்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com