"நம் நாட்டில் ஓர் அழகான பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் எந்தவித பயமும் இன்றி தனியாக நடக்கும் நாளையே உண்மையில் நாம் சுதந்திரம் பெற்ற நாள் என்று கருதுவேன்" என்றார் அண்ணல் காந்திஜி. ஆனால் இன்று பகலிலேயே பெண்கள் அவ்வாறு நடக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான கசப்பான உண்மை.
சமீப காலங்களில் அன்றாடம் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பெண்கள் பொது இடங்களிலும், பேருந்துகளிலும், கல்வி வளாகங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது சமூக ஆர்வலர்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
முற்காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட 'கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ போன்ற சட்டங்களுக்கு திரும்பவும் மறு உயிர் கொடுத்தால் கூட நன்று என்று மக்களை நினைக்க வைக்கிறது. அவ்வாறான சட்டங்கள் நடைமுறையில் இருந்தால், மக்கள் குற்றங்களை செய்யவே தயங்குவார்கள்.
குற்றம் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனையை பெற்றாலும், அவர்களை தண்டிக்க பல்வேறு வழிமுறைகளை சட்டத்துறை, நீதித்துறை, காவல்துறை போன்றவை கடைபிடிப்பதால் குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
‘தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கு சமம்’ என்ற நிலையில் பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடரும் துன்பமும், குற்றவாளிக்கு காலம் கடந்து தண்டனையும் வழங்கப்படுவது சாமான்ய மக்களின் பார்வையில் நியாயமற்றதாகவே கருதப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடிக்கடி சமூகத்தில் ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது உடனடித் தேவையாக கருதப்படுகிறது. ஆய்வுகள் சொல்லும் தீர்வுகளை உடனடியாக அரசு அமல்படுத்தும் போது இப்பிரச்னைகளின் எண்ணிக்கை குறையலாம்.
ஆண்களுக்கு பெண்களைப் பற்றிய பார்வை, குற்றவாளியை தண்டிப்பதில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், தன் படைபலமும் பணபலமும் துணை நிற்கும் என்னும் குற்றவாளியின் நம்பிக்கை, குடும்பங்களில் ஆண்களின் வளர்ப்பு முறை, குடும்பங்களும், கல்வி நிலையங்களும் சகபெண்களை நாகரிகமாக நடத்த கற்றுத்தர மறந்த கல்வி நிலையங்கள், குற்றங்களை தடுக்க போதுமான காவல்துறையினர் மாநிலத்தில் இல்லாதது, குற்றச்சம்பவங்கள் நடக்கும் போது தன் உயிருக்கு பயந்து வெறும் பார்வையாளர்களாகவே தொடர்ந்து மெளனம் காக்கும் பொது மக்கள், திரைப்படங்களில் முறையாக தணிக்கை செய்யப்படாது வெளிவரும் வன்முறை காட்சிகள், சந்தையில் சர்வசாதாரணமாக கிடைக்கும் கஞ்சா, மது போன்றவற்றை இன்றைய இளைஞர்கள் எந்த விதக்கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்துவது, போன்றவற்றில் எதை இக்குற்றச் செயல்களுக்கு காரணமாக சொல்வது என்று தெரியவில்லை. எல்லாமும்தான் என்கிறது எல்லோர் மனமும்.
பொதுவாக சமுகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை குறிப்பாக உருவாகியிருப்பதை நம்மால் உணரமுடிகிறது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை தாண்டியும், நம் சமூகத்தில் காணப்படும் இந்த அவல நிலைக்கு நாம் பிறரைக் குற்றம் சொல்லி தப்பிக்க முடியாது.
வெளியே செல்லும் பெண்கள் கூடியவரையில் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தனிமையாக செல்வதும், இருட்டில் தனியாக செல்வதையும் தவிர்ப்பது நல்லது.
எப்போதும் கையில் வைத்திருக்கும் ஒரு மிளகாய்ப் பொடி பொட்டலம் ஆபத்தான நேரங்களில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கலாம்.
பெண்கள் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொள்வது நல்லது.
அவசர ஆபத்து காலங்களில் காவல்துறையின் உதவியை நாட காவலன் செயலி போன்றவற்றை பயன்படுத்தும் தொழில் நுணுக்கத்தையும், காவல் துறை அவசர உதவி தொலைபேசி எண்களை அறிந்திருப்பதும் நல்லது.
இவை சார்ந்த விழிப்புணர்வு இயக்கங்களை மகளிர் அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் நடத்தலாம்.
அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்களில் அதிக காவல் கண்காணிப்புகளும், கண்காணிப்பு கேமராக்களும் குற்றங்கள் நடைபெறுவதை ஓரளவு குறைக்கலாம்.
இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் போக்சோ தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்றலாம்.
ஒரு தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக இந்த சமுதாயத்திற்கு தனது சுயநலமற்ற பணியினை வழங்கும் பெண்கள் மதிக்கப்படுவது ஒரு நல்ல நாகரிகத்தின் அடையாளம் ஆகும். அது ஒவ்வொரு சமூகத்தின் கடமையாக மாறவேண்டியது அவசர அவசியமாகும்.
இதை எத்தனை முறை சொன்னாலும், எவ்வளவு முறை எழுதினாலும் போதாது. மீண்டும் மீண்டும் சொல்லி, தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றுமே அவசியமாகிறது!