குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. எப்போதும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பெண் குழந்தைகள் இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் சொல்லக் கூடாத 8 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வேலையை வகைப்படுத்துதல்: எக்காரணம் கொண்டும் இது பெண்ணின் வேலை அல்ல என்று பாலின அடிப்படையில் பிளவுபடுத்தும் வார்த்தையை கூறக் கூடாது. அவரவருக்குப் பிடித்த வேலையை செய்ய வாய்ப்பளிப்பதோடு, பெண் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று விருப்பப்படுகிறார்களோ அதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
2. உடல் எடை: பெண்கள் என்றாலே அவர்கள் ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் அவர்கள் விரும்பிய உணவை சாப்பிட அனுமதிப்பதோடு, ஆரோக்கியத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்க வேண்டும். ‘குண்டாக இருக்கிறாய்’ என்று எந்த ஒரு பெண்ணையும் பார்த்து கேலியாகப் பேசி மனதை கஷ்டப்படுத்தக் கூடாது.
3. உன்னால் முடியாது: உன்னால் இதை செய்ய முடியாது என்ற தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் வார்த்தையை பெண் குழந்தைகளிடம் கூறாதீர்கள். இவ்வாறு கூறுவதால் பெண் குழந்தைகளின் கனவுகள் தடைபடக் கூடும் என்பதால் எப்பொழுதும் அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துங்கள்.
4. தோற்றம்: பெண்கள் என்றாலே பெரிய வகை ஆடைகளை அணிந்து மேக்கப் போட்டுக் கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்று ஏதும் நிர்பந்தம் கிடையாது. அதனால் அவர்கள் ஆண்களைப் போல் முடிவெட்டி கொண்டு ஜீன்ஸ் அணிந்தாலும் அதில் தவறில்லை. அதற்காக அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
5. வயது: ‘சரியான முடிவு எடுக்க இது சரியான வயது இல்லை’ என பெண் குழந்தைகளிடம் பேசாதீர்கள். யாருடனும் ஒப்பிட்டுப் பேசாமல் அவர்களுக்குப் புரியும் வகையில் அறிவுரை கூற வேண்டும். ஏனென்றால் அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு.
6. பேச அனுமதி: பெண் பிள்ளைகளுக்கு அவர்களது கருத்தையும், விருப்பத்தையும் கூற அனைத்து உரிமையும் உண்டு. பெண் பிள்ளைகளைப் பேச அனுமதிக்காமல் இருந்தால் அது நீங்கள் பாலின ஒழுக்கத்திற்கு துணை போவதாக அர்த்தம்.
7. சத்தமான சிரிப்பு: ஆண் பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், பெண் பிள்ளைகள் என்றால் வேகமாக பேசக் கூடாது. மெதுவாகத்தான் பேச வேண்டும் என்று சிரிக்க வேண்டும் என்றும் கூறாதீர்கள். இது காலம் காலமாக நமது சமூகத்தில் கூறப்படும் ஒரு அவலமான கருத்தாகும்.
8. சுதந்திரம்: பெண் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து காரணிகள் குறித்து மட்டும் எடுத்துக் கூற வேண்டும். அன்றாட நடைமுறை வாழ்க்கையிலும் விளையாட்டுகளிலும் கூட பாலின பாகுபாடுகள் காண்பிப்பது மிகவும் தவறு என்பதை எப்பொழுதும் கருத்தில் கொண்டு அவர்களிடம் பேச வேண்டும்.
மேற்கூறிய கருத்துக்களை மனதில் நிறுத்தி பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் வளர்ப்பில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.