'காதறாக் கள்ளன்' களக்காடு ராபின் ஹுட் ஜம்புலிங்கம் - உண்மை சம்பவம்!

பணக்காரர்களைக் கொள்ளையடித்து ஏழைகளுக்கு அள்ளிவழங்கிய தமிழகத்தின் வீரமிக்க நிஜ நாயகனின் வரலாறு.
ஜம்புலிங்கம் | Kalakkadu Robin Hood Jambulingam
ஜம்புலிங்கம் | Kalakkadu Robin Hood JambulingamAI Image
Updated on
MM strip
MM strip

நெல்லை மாவட்டம் களக்காட்டுப் பகுதியில் ஆங்கிலேய போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய களக்காடு ராபின் ஹுட் ஜம்புலிங்கத்தின் முழுமையான வரலாற்றுத் தகவல்கள்.

நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதிகளில் 1920 களில் ஜம்புலிங்கம் என்பவர் தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார். 

இவர் செல்வந்தர். பணக்காரர்களிடமிருந்து கொள்ளை அடித்து அதனை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வந்தார். எனவே ஏழை எளிய மக்களுக்கு இவர் ராபின் ஹுட் போல செயல்பட்டு வந்தார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உள்ள போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தார். 

 ஜம்புலிங்கமும் இவரது கூட்டாளிகளும் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். களக்காடு சிதம்பரபுரம், மூங்கிலடி, மஞ்சு விளை போன்ற காட்டு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். 

இவர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1920 களில் செங்கல் தேறி மலைப்பகுதிகளில் தனது சாம்ராஜ்யத்தை வைத்து இருந்தார். களக்காடு மலையின் மேலே உள்ள செங்கல் தேறி என்ற ஒரு பெரிய உயர்ந்த பாறையில் இருந்து கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். 

இன்றும் அந்த உயரமான பாறை ஜம்புலிங்கம் பாறை என அழைக்கப்படுகிறது. இந்தப் பாறையில் இருந்து தூத்துக்குடி கலங்கரை விளக்கின் ஒளியை பார்க்க முடியும். 

ஆரம்பத்தில் பணகுடியில் கருப்பட்டி வியாபாரி ஆக இருந்தபோது, தன் மேல் சுமத்தப்பட்ட வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக இலங்கை, மலேசியா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு இறுதியாக களக்காடு மலைப்பகுதியை தனது புகலிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். 

ஒருமுறை இவரும் இவரது கூட்டாளிகளும் திருவாங்கூர் போலீஸ் போல உடை அணிந்து கொண்டு காவல் நிலையத்தில் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் கொள்ளை அடித்து சென்று விட்டனர். 

இதையும் படியுங்கள்:
Shin Gi Tai: வாழ்வை மேம்படுத்தும் ஜப்பானிய மனநிலையான ஷின் கி தை பற்றித் தெரியுமா?
ஜம்புலிங்கம் | Kalakkadu Robin Hood Jambulingam

இவர் மறைந்து உள்ள இடங்களை கண்டுபிடிப்பது கஷ்டம். வேட்டை நாய் உதவியுடன் போலீஸ் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பயணம் செய்யும் செல்வந்தர்கள் தான் இவரது இலக்கு. அவர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கி வந்தார். அக்காலத்திலேயே இங்குள்ள மக்கள் இவரைப் பற்றி பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். 

அக்காலத்தில் உள்ள சில ஆங்கில பத்திரிகைகள் இவரை ராபின் ஹுட் என ஒப்பிட்டு எழுதினார்கள்.

அக்காலத்தில் பெண்கள் பாம்படம் அணிந்து கொள்வது வழக்கம். 

சில திருடர்கள் அந்தப் பெண்களின் பாம்படத்தை காதுடன் சேர்த்து அறுத்து விடுவார்கள். ஆனால் ஜம்புலிங்கம் அவ்வாறு செய்ய மாட்டான். ஒருபோதும் பெண்களின் பாம்படத்தை திருடுவது இல்லை. அதனால் இவனுக்கு 'காதறாக் கள்ளன்' என்ற பெயர் வந்தது. (அந்தக் காலத்தில் கல்கியில் கூட காதறாக் கள்ளன் என்ற பெயரில் ஒரு கதை வெளிவந்தது.) 

ஜம்புலிங்கம் | Jambulingam and his children
ஜம்புலிங்கம் | Jambulingam and his childrenAI Image

நிஜத்தில் ஜம்புலிங்கம் திருடனாக மாறியது அவனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்த பின்னர்தான்.1945 இல் ஜம்புலிங்கம் என்ற திரைப்படம் வெளிவந்து சக்க போடு போட்டது. நாங்குநேரி பகுதியில் ஆதரவற்ற ஆசிரமம் நடத்தி வந்த எமி கார் மைக்கேல் என்ற பெண்மணி தற்செயலாக ஜம்புலிங்கத்தை செங்கல்தேறி பகுதியில் சந்திக்க நேர்ந்தது. அவர் ஜம்புலிங்கத்தின் மூன்று குழந்தைகளையும் தன் ஆசிரமத்தில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக கூட்டி சென்று விட்டார். 

அதன் பின்னர் ஜம்புலிங்கம் இந்த ஆசிரமத்திற்கு ரகசியமாக வந்து செல்வது வழக்கம். 1923 இல் எமியை பார்க்க வரும்போது போலீசார் பின்தொடர்ந்து ஜம்புலிங்கத்தை சுட்டுக் கொன்று விட்டனர்.

இதனால் எமி மிகுந்த மன வருத்தம் அடைந்தார். இவர் ஜம்புலிங்கத்தின் கதையை ராஜ் தி பிரிகண்ட் என்ற நூலில் பதிவு செய்தார். 1927-ல் லண்டனில் வெளியிடப்பட்ட இந்த நூலில் ஜம்புலிங்கம் வரலாறும் அவரது புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் 312 பக்கங்களைக் கொண்டது. 

இதையும் படியுங்கள்:
Yu Youzhen: கோடீஸ்வர துப்புரவுத் தொழிலாளி யு யூஷென் - சந்திப்போமா?
ஜம்புலிங்கம் | Kalakkadu Robin Hood Jambulingam

அதன் பின்னர் 1951ல் எமி காலமானார். இவர் நிறுவிய ஆசிரமம் மற்றும் பள்ளி ஆகியவை இன்றும் களக்காடு அருகில் உள்ள டோனாவூர் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. 

ஜம்புலிங்கம் பற்றி பிபிசி ஒரு ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது. 

ஜம்புலிங்கம் பயன்படுத்திய துப்பாக்கி இன்றும் வேலூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்ததற்கு பின்னால் வந்த கொள்ளையர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்தார் இந்த ஜம்புலிங்கம். இன்றும் களக்காடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இங்குள்ள மக்கள் ஜம்புலிங்கத்தை பற்றி கதை கதையாக கூறுவதை கேட்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com