

கவிஞர் கண்ணதாசனின் சினிமாப் பாடல்கள் வெறும் காதுக்குத் தேனாய் வந்து போவதோடு நின்றுவிடுவதில்லை; ஒவ்வொரு வரியிலும் ஆழ்ந்த தத்துவத்தையும், சமூக யதார்த்தங்களையும் ஒளித்து வைத்திருக்கும் அற்புதம் அவற்றுக்கு உண்டு. "கல்வியா, செல்வமா, வீரமா?" அல்லது "உலகத்தில் சிறந்தது எது?" என அவர் எழுப்பிய எளிய கேள்விகளுக்குப் பின்னால், ஒரு சாதாரண ஆன்மீக விளக்கம் மட்டுமல்லாமல், ஆச்சரியமூட்டும் வாழ்வியல் உண்மைகளும் பொருளாதார சூட்சுமங்களும் எவ்வாறு புதைந்துள்ளன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தக் கட்டுரை.
சிவாஜியின் கம்பீரமான ஆன்மீக விளக்கமும், நாகேஷ் பாடும் காமெடியான வரிகளுக்குள் இருக்கும் தீவிர பொருளாதார உண்மையும் எப்படிக் கவிஞரால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
கண்ணதாசன் இரண்டு சினிமாப் பாடல்களில் பல்லவியை ஒரு கேள்வி போல எழுதினார்.
கல்வியா, செல்வமா, வீரமா.... அன்னையா, தந்தையா, தெய்வமா...
இது சரஸ்வதி சபதம் படத்தில் நாரதர் சிவாஜி கேட்கும் கேள்வி.
மற்றொரு பாடல்.. உலகத்தில் சிறந்தது எது... ஓர் உருவமில்லாதது எது... ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அனுபவமாவது எது...
இது பட்டணத்தில் பூதம் படத்தில் ஒரு போட்டிக்கான பாடல் பல்லவி.
இதை நாகேஷ், கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் மூவரும் பாடினார்கள்.
ஏ எல் ராகவன், பி.சுசீலா, டி.எம்.எஸ் குரலில்.
இது என்னங்க... அதுதான் பல முறை கேட்டு ரசித்தாச்சே.. .என்ன புதுசா சொல்ல வர்றீங்க..?
அதுக்கு கவிஞர் விடையை எப்படிச் சொல்றார் என்பதுதான் புதுமை.
முதலில் சரஸ்வதி சபதம் படம் பற்றி சில செய்திகள். 1966 ரிலீஸ் அது.
முப்பெரும் தேவியர் சக்தி, சரஸ்வதி, லட்சுமி இவர்களில் யார் பெரியவர் என்ற கேள்வியைக் கிளப்பி விட்டு நாரதர் செய்யும் கலகமே படத்தின் முடிச்சு.
இந்தக் கதையின் மூலக்கதை புதுமைப்பித்தன் அவர்களின் வாக்கும் என்ற கதையின் ஸ்கிரிப்ட் தான்... ஏ பி நாகராஜன் படமாக்க ரைட்ஸ் எதுவும் பெறாமலே எடுத்தார்... புதுமைப்பித்தன் 1948 ல் காலமானார்.
ஆனால் அவர் குடும்பத்தினர் இது சம்பந்தமாக வழக்குக்குப் போகவில்லை. அப்படியே விட்டு விட்டார்கள்.
1951 ல் வெளியான கலாவதி படத்துக் கதையும் இதே தான். காமெடியன் டி.எஸ் துரைராஜ் தான் ஹீரோ.
மகாலட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் யார் பெரியவர் என்ற போட்டி தான் கதை... காமெடி படம் அது. அப்போதே காமெடியன்கள் ஹீரோவாக நடித்து விட்டார்கள். நாகேஷ், தங்கவேலு, கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர்.
ஏபி நாகராஜன் சரஸ்வதி சபதம் என எடுத்தார். ஓடியது நன்றாக.
கிளைமாக்ஸில் யானை புலவர் வித்யாபதியாகிய சிவாஜியை மிதிக்கும் காட்சி. படக்குழுவினர் பயந்தார்கள் யானை ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விட்டால்...
ஆனால் சிவாஜி கவலை வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொன்னார்..நடித்தார் பயமின்றி...டூப் இல்லாமல் தந்திரக்காட்சி இல்லாமல்..
காரணம் சிவாஜிக்கு யானை பாஷை தெரியும். தங்கமலை ரகசியம் படத்தில் அவரை சிறு குழந்தையில் இருந்து காட்டில் யானைகளே வளர்க்கும் என்பதாகக் கதை வரும்.
ஷூட்டிங்கின் போது கேரளா யானைகள் நடித்தன. அந்த யானைப் பாகர்களிடம் யானை பாஷைக் கற்று பயிற்சியும் செய்தார்.
அந்தப் பயிற்சி சரஸ்வதி சபதத்தில் உதவியது... யானை மிதிக்க வரும் போது நில் என படத்தில் வசனம் பேசுவார்... ஆனால் உண்மையில் யானையின் பாஷை பேசி தான் நிறுத்தினார்.
படம் வெற்றி.
சிவாஜி செய்த தான தருமங்கள் அதிகம்.... வெளியில் தெரியவில்லை. பல கோவில்களுக்கு யானை வழங்கினார்... காஞ்சிப் பெரியவரை அவர் தரிசித்த சமயம் பெரியவரும் யானைக் கொடையை சிலாகித்துப் பாராட்டினார் என்பார்கள்.
படத்தில் யார் சிறந்தவர் என்பதைக் கண்ணதாசன் விளக்கிய விதம் ஆன்மீகத் தத்துவத்தின் எளிமையான விளக்கம்.
வேதப் பொருளையும் பாமரன் விளங்கிக் கொள்ளும் படி சொல்வது சிரமம். அதில் கண்ணதாசன் வல்லவர்.
அந்த யார் பெரியவர்... எது பெரியது கல்வியா செல்வமா வீரமா..
அந்த இரண்டாவது அடியில் இருந்தே விடையை வெளிப்படுத்துவார்.
அன்னையா, தந்தையா, தெய்வமா
அன்னை தான் கல்வி.. ஒரு பிள்ளையின் முதல் ஆசிரியர் தாய்தான். தாயிடம் இருந்தே அது உலகைக் கற்றுக் கொள்ளும்.
செல்வத்துக்கு தந்தை தான் காரணம்... அவரே பொருள் ஈட்டுபவர்.. பொருள் இலார்க்கு ஏது இவ்வுலகம்.
ஓகே... வீரத்துக்கு தெய்வத்தினை ஏன் சொன்னார்..?
சின்ன ஆன்மீகக் கதை சொல்கிறேன்.. நீங்க பல முறை கேட்டது தான்.. இப்போ சொன்னா வாதம் எடுபடும்.
அஷ்ட லட்சுமிகளும் ஒருவன் தவத்தைப் பாராட்டி எங்களில் யாராவது ஒருத்தர் துணை கேள் என்றார்கள். அவன் செல்வ லட்சுமி ஆகிய தன லட்சுமியைக் கேட்கவில்லை... தானிய லட்சுமியைக் கேட்கவில்லை, மற்றும் ஆதி, விஜய, சந்தான, கஜ, வித்யா லட்சுமிகளைக் கேட்கவில்லை. தைரிய லட்சுமி மட்டும் அருளினால் போதுமென்றானாம்.
அவ்வருள் பெற்றவுடன், மற்ற லெட்சுமிகள். தைரியம் இருக்குமிடத்தில் தான் நாங்களும் இருப்போம்... என வந்து விட்டார்களாம்.
தைரியமாகிய வீரம் தெய்வத்தின் பிம்பம். இதையே கண்ணதாசன் அன்னையா தந்தையா தெய்வமா எனப் பாடினார்.
முடிவு சொல்ல இப்படி எழுதி விடை தந்தார்... "ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது, அது ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது.... ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது... மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது"
ஃபில்டர் டிகிரி காபியில் பால் டிகாக்ஷன் சர்க்கரை மற்றும் சூடு போல.
*********
பட்டணத்தில் பூதம் படத்தில் போட்டிப் பாட்டில் உலகத்தில் சிறந்தது எது என்பதற்கு நாகேஷ் வட்டி என்பார்...
கே ஆர் விஜயா காதல் என்பார்.
ஹீரோ ஜெய்சங்கர் தாய்மை என்பார்.
அதை ஒப்புக் கொண்டு தாய்மை பற்றிச் சொன்ன ஜெய் வெற்றி எனச் சொல்வார்கள்.
ஓகே.. இதி்லென்ன.. புதுமை எல்லோரும் தாய்மை சிறப்பை ஒப்புக் கொள்வார்கள் தானே..
அங்கே தான் கண்ணதாசன் நிற்கிறார்.
நாகேஷ் பாடிய உலகத்தில் சிறந்தது... எது. ஓர் உருவமில்லாதது எது... வட்டி என்பது சாமான்யக் காமெடி விஷயம் அல்ல.
உலகத்தின் முதுகெலும்பு.
கவிஞர் நகரத்தார் வம்சம்.
வட்டியின் இலக்கணம் முழுசும் அறிந்தவர்.
மனிதன் தூங்குவான்.. ஆனால் வட்டி தூங்காது...
அப்புறம்.. குட்டி வேறே போடும்.
இதெல்லாம் காமெடியாக நாகேஷ் பாடினாலும் யதார்த்த வாழ்வில் பொருளாதாரத்தின் அச்சாணி வட்டி தான்.
மக்கள் வங்கியில் போடும் டெபாசிட் பணம் என்பது வங்கி வட்டிக்கு மக்களிடம் பெற்ற கடனே....
அதை.. தொழில் செய்வோருக்கு கொஞ்சம் அதிக வட்டிக்குத் தந்து பெறும் வட்டி, தரும் வட்டி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமே அதன் வருவாய்.
அதில் சம்பளம், நிர்வாகச் செலவினங்கள் போக மீதமே நிகர லாபம்.
இது வங்கி மட்டுமல்ல.. எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும்.
இதை விளக்க ஆரம்பித்தால் கல்லூரி எகானாமிக்ஸ் கிளாஸ் ஆகி கொட்டாவி வரும் என்பதால்.... முடிவுக்கு வந்திடுவோம்.
கண்ணதாசன் ஒரு எக்கானமிஸ்ட்... பொருளாதாரத்தை சுருக்கமாய்ச் சொல்லிவிட்டார் ஒற்றை வரியில் என்பதே சரி.
காதலுக்கும், தாய்மைக்கும் வட்டி சற்றும் சளைத்தது அல்ல என நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
திரைப்படப் பாடல்களை வெறும் கேளிக்காகப் பார்க்காமல், அவற்றுள் புதைந்திருக்கும் ஆழமான வாழ்க்கை முறைகள், தத்துவங்கள் மற்றும் பொருளாதார உண்மைகளை எளிதாகப் புரிந்து கொண்டு உங்கள் சிந்தனையை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.