கண்ணகி சிலைதான் இங்குண்டு; சீதைக்கு தனியாய் சிலை ஏது?

Kannagi statue and Sita statue
Kannagi statue and Sita statue
Published on

புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது. 'கண்ணகி சிலை தான் இங்குண்டு சீதைக்கு தனியாய் சிலை ஏது?'

தலைப்பைப் பார்த்ததும் 'அட, இந்த வரிகளை நாம் எங்கோ கேட்டிருக்கிறோமே?' என்று தோன்றுகிறதா? ஆம் இது A.R. ரஹ்மான் இசையில் வந்த ஊர்வசி ஊர்வசி பாடலில் வரும் வரிகள் தான்.

உண்மையில் இந்த வரிகளில் தான் எவ்வளவு ஆழமான உண்மை பொதிந்துள்ளது?

நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட அனைத்து அடக்கு முறைகளையும் தகர்த்தெறிய புரட்சிகளால் மட்டுமே இதுவரை முடிந்துள்ளது. சரோஜினி நாயுடு, கிட்டுர் சென்னம்மா, ராணி லக்ஷ்மிபாய், சாவித்ரிபாய் பூலே, ஆனந்திபாய் ஜோஷி, விஜய லட்சுமி பண்டிட்,  கமலா  தேவி  சட்டோபாத்யாய்,  நீதிபதி அன்னா  சாண்டி,  சுசேத்தா  கிரிப்லானி,  கேப்டன்  பிரேம்  மாத்தூர்,  கேப்டன்  லக்ஷ்மி  சாகல்,  அசிமா  சாட்டர்ஜி,  கல்பனா சாவ்லா,  என  பலர்  இன்றும்  சரித்திரத்தில்  நீங்கா  இடம் பித்திருக்கிறார்கள்  என்றால், அது, அவ்வளவு  எளிதாக முடிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆணாதிக்கமே இல்லை என்று நம்மால் இன்றும் முழுமையாக சொல்ல முடிவதில்ல. ஏனென்றால் காலம் காலமாக பெண்களைப் பற்றி கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளில்தான் நமது சமுதாயம் வேரூன்றி வளர்ந்து வந்திருக்கிறது. இன்றும் நமது குடும்பங்களில் வேலைக்கு செல்லும் பெண்ணிற்கான மரியாதை வீட்டை  பார்த்துக்கொள்ளும்பெண்களுக்கு கிடைப்பதில்லை. பெண்கள் சாதித்தே ஆகவேண்டும். மற்றவர்களுக்காக அல்ல அவளுக்காக, அவளின் நலனுக்காக, அவளின் உரிமைக்காக அவள் எல்லா தடைகளையும் ஒழித்து, உடைத்து உயர வேண்டும்.

காவியக் கதைகளில் கூட நாம் பார்க்கலாம். கணவனே கண்கண்ட தெய்வம் என்று கண்ணை மூடிக்கொண்டு 14 வருடங்கள் அவனோடு சென்றதோடு மட்டுமல்லாமல் ராவணன் தன்னை சீண்டாமல் கற்பெனும் வேலியை அமைத்து காத்துக்கொண்ட சீதைக்கு எங்கேனும் சிலை வைத்து கொண்டாடியதுண்டா?

கற்பு நெறி தவறி, ஊரெல்லாம் சுற்றி திரிந்து அனைத்தையும் மாதவி என்னும் ஆடல் நாயகிக்கு பரிசளித்துவிட்டு, ஆண்டியாய் வந்த கோவலனுக்காக நியாயம் கேட்கிறேன் என்று அப்பாவி மக்களை தீயிட்டு எரித்த கண்ணகிக்கு தானே இங்கு சிலையும் உள்ளது? அவளை தானே கற்புக்கரசி என்கிறோம்?

இதையும் படியுங்கள்:
சிறுகதை - கீரை பாட்டி!
Kannagi statue and Sita statue

உள்ளம் கசந்தாலும் இதுதான் பெண்களின் உண்மை நிலை. எனில் பெண்  எப்போதும் தீயாய் புரட்சி செய்தால் தான் அவளை இந்த சமூகம் பெண்ணாகவே பார்க்கிறது. 'மென்மையானவள் பெண்' என சொல்லும் இதே சமூகம் தான்  அவள்  போராடி  சாதிக்கும்போது  அவளது  திமிரையும்  போற்றி  சரித்திரத்தில்  பதிக்கிறது.  வாய்  மூடி  மௌனியாய்  அவள்  இருந்துவிட்டால்  அவளை ஏறி மிதிக்கத்தான் தோன்றும். அதுவே அவள் வாள் எடுக்கும்  வலிமை கொண்டவள் எனக்கண்டால், வாரி மலர்களை  தூவி போற்றிடும் இந்த உலகம்.

பெண்களே கேளுங்கள். தியாகங்களை மட்டுமே செய்து சீதையைப் போல் இருக்காதீர்கள். கயவர்களாய் சுற்றித்திரியும் கோவலன்களை சுட்டு பொசுக்கும் கண்ணகியாய் இருங்கள். குனிந்த தலை நிமிராமல் பெண் என்று நிரூபித்தே வாழ்ந்தது போதும். சற்றே தலை நிமிர்ந்து சுற்றி இருக்கும் உலகைப் பாருங்கள்.

பணிவு, பொறுமை, சாந்தம் இவைதான் பெண்களுக்கு அடையாளம் என்னும் மாயை மறப்போம். துணிவும், திமிரும, வீரமும், யார்க்கும் அஞ்சா நெஞ்சமும் தான் பெண்ணிற்கு அழகாம் என போற்றி வளர்ப்போம் நம் பெண் பிள்ளைகளை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com