சிறுகதை - கீரை பாட்டி!

ஓவியம்: லலிதா
ஓவியம்: லலிதா
Published on

-மீரா வெங்கட்

ன் டி.வி.யில் சொன்ன ராசி பலனைக் கேட்டு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்தி கீரை கொடுக்க முடிவு செய்தேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு கடைத்தெருவில்தான் அந்தக் கீரை விற்கும் 75 அல்லது 80 வயது இருக்கும் பாட்டியைச் சந்தித்தேன்.

ஒரு சிவப்பு சின்னாளம்பட்டு புடைவை, கருப்பு ரவிக்கை, நெற்றியில் நாலணா அளவிற்கு குங்குமப்பொட்டு, கருப்பு ஆனாலும் வசீகரமான முக அமைப்பு... அந்தப் பாட்டியிடம் என்னை அறியாமல் அழைத்துச்சென்றது.

முதல் சந்திப்பே ‘அக்னி நட்சத்திரம்’ கார்த்திக் - பிரபுபோல ஒரு சண்டையில் ஆரம்பமானது. பாட்டியா? ஆயாவா? எப்படிக் கூப்பிடுவது? என்ற சந்தேகத்துடன் எங்கள் வீட்டு வழக்கப்படி பாட்டி, “அகத்திக் கீரை இருக்கா?”ன்னு கேட்டேன்.

“இருக்கு ராசா.  முழு கீர, அரக்கீர, பொன்னாங்கண்ணிக் கீர, பருப்புக்கீர எல்லாம் இருக்கு. பாலக் வேணுமா? இதோ இருக்கு” என்றாள் பாட்டி.

“எனக்கு அகத்தி கீரதான் வேணும். மாட்டுக்குப் போடணும்” என்றேன்.

“நல்ல மகராசனா போடு. இந்தா இந்தக் கட்டு நாற்பது ரூபா.”

“நாற்பது ரூபாவா. ஏன் பாட்டி இவ்வளவு வெல சொல்ற. கீரயா, தங்கமா இது?” என்றேன்.

அவ்வளவுதான் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.

“இந்தாய்யா கீர வேணும்னா வாங்கு. தங்கம் வைரம்னு வீணா பேசாதே” என்றாள் பாட்டி.

பாட்டிக்கு இவ்ளோ கோபம் வரும்னா எனக்கு எவ்ளோ வரும்.

“பாட்டி நீ மட்டும்தான் கீர விக்கிறியா? இன்னும் எவ்வளவு கடையிருக்கு. நான் முப்பது ரூபாய்க்கு இதே கீரயா வாங்கிக் காட்டுகிறேன் பார்.” அப்படீன்னு சவால் விட்டுட்டு பக்கத்துலே உள்ள எல்லா கடைகளிலும் அகத்தி கீர விலை கேட்டேன். 50 ரூபாய், 45 ரூபாய் என்றனர். மழை சரியாக பெய்யலையாம். அதனால் எல்லா காய்கறி விலையும் ஏறிடுத்தாம்.

வேற வழியில்லாம 45 ரூபாய் சொன்ன ஒரு அம்மாவிடம் கீரைய வாங்கினேன். ஆனா, பாட்டியோட நேர்மை மட்டும் என்னைக் கவர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் அதிக விலைவைத்து விற்கும்போது, பாட்டி மட்டும் நியாயமா விற்கிறது என் மனதைத் தொட்டது.

இதையும் படியுங்கள்:
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கியமான காரணம் என்ன தெரியுமா?
ஓவியம்: லலிதா

டுத்த வெள்ளிக்கிழமை  சைக்கிள் நேராக பாட்டி கடைக்கு நின்றது.

“வா ராசா... இந்த அகத்தி கீரை” என்று பழசையெல்லாம் மறந்து என்னைப் பார்த்து பாசமாக பேச ஆரம்பித்தாள். 

“மாட்டுக்குத்தான போடற. இந்தா இதையும் போடு” என்று இலவசமாக ஒரு கட்டையும் கொடுத்தாள்.

“டீ சாப்பிடறயா பாட்டி?” என்றேன்.

“வேண்டாம்யா. இப்பதான் ஒரு டீ குடிச்சேன்.”

இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பல வாரங்களைக் கடந்தது. செவ்வாய், வெள்ளி என்றாலே பாட்டியைப் பார்க்கப் போகும் உற்சாகம் என்னைத் தழுவும்.

அன்று கடைத்தெருவிற்கு 6 மணிக்கே சென்றேன். பாட்டி அப்போதுதான் கடையைத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஒரு பாய், ஒரு பெரிய மரப்பெட்டி. இவ்வளவுதான் கடை. (‘சந்திரமுகி’ கட்டிலை அநாயாசமாக தூக்குவதுபோல்) அந்தப் பெரிய மரப்பெட்டியைத் தூக்கி முன்னாலே வைத்து அதில் கோயம்பேட்டிலிருந்து வாங்கி வந்துள்ள காய்கறி மற்றும் கீரை வகைகளை அடுக்கினாள். பின்பு எல்லாவற்றிலும் தண்ணீர் தெளித்தாள். என்னைப் பார்த்ததும் “என்ன ராசா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்றாள்.

“அது இருக்கட்டும் பாட்டி. நீ ஏன் தனியா கஷ்டப்படறே. உன் வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எங்கே?” என்றேன்.

“அதையேன் கேட்கற ராசா. என் புருசன் நல்லவருதான். கல்யாணம் ஆன புதிசுல என்ன அப்படி பாத்துப்பான். (பொக்கை வாயில் வெட்கம்) ஆனா பாரு... அப்புறம் வேற ஒருத்தியோட குடுத்தனம் நடத்தப் போயிட்டான். அவளும் இவன்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் வாங்கிட்டு அம்போனு நடுத்தெருவில விட்டுட்டா. பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாம திரும்ப என்கிட்டேயே வந்து விழுந்தான். இதுல குடி வேற. என்ன பண்றது?

நான் காய்கறி வித்து வரக் காசுல என் ஒரே பொண்ணு திருவண்ணாமலைல இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் அனுப்புறேன். மீதிய நானும் வுட்டுக்காரரும் கஞ்சி குடிக்க வச்சுக்குவோம். அப்பப்ப குடிக்கவும் அவனுக்கு பணம் குடுக்கறேன். போயிட்டு போறான். நம்மதான் இப்படி வெய்யில்லயும் மழைலயும் பாடுபடறோம். அவனாவது குடிச்சிட்டுக் கவலையில்லாம இருக்கட்டுமே” என்றார்.

எனக்கு இப்போது பாட்டி இளங்கோவடிகளின் கண்ணகியைப்போல் தோன்றினாள்.

“அப்புறம் ராசா, என் பொண்ணுக்கு ஒரே பையன். கான்வென்ட்ல படிக்கறான். இங்கிலிசு நல்லா பேசறான். போன லீவுக்கு போய்ப் பார்த்தேன். Grandma comeன்னு ஏதேதோ சொல்லுது. எனக்குத்தான் ஒண்ணும் புரியல. கொழந்தை நல்லா இருக்கணும். என் உயிரே அவன்தான். என் கதைய வுடு. இந்த அகத்திக்கீரை” என்று கீரைக்கட்டை நீட்டினாள். கூடவே இலவச கட்டும் இருந்தது.

பல வாரங்கள் கடந்தன. ஒருநாள் நான் சற்று லேட்டாகக் கடைக்குச் சென்றேன். அங்கே பாட்டி வழக்கமான சிரிப்புக்குப் பதிலா ரொம்பவும் பதற்றமாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள்.
“என் ராசா வந்துட்டயா. உனக்கு கீரைய குடுத்துட்டுதான் ஊருக்குக் கிளம்பணும்னு இருக்கேன்.”

“ஏன் பாட்டி என்ன ஆச்சு?” என்றேன்.

“அதையேன் கேட்கற. நேத்து புள்ளைய ஸ்கூல்ல வுட சைக்கிள்ள போன என் பொண்ணு மேலே ஒரு லாரி மோதிட்டான். பொண்ணும் பேரனும் பக்கத்துல இருந்த பள்ளத்தில் விழுந்து ரொம்ப அடியாம். பொண்ணு இப்ப பரவாயில்லையாம். ஆனா, குழந்தைதான் இன்னும் கண்ணு முழிக்கலையாம். ராசா தலைல நல்ல அடியாம். திருவண்ணாமலை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுனா நான் எப்படி உயிரோடு இருப்பேன்? இந்த ராசா கீரை புடி. நான் கிளம்பறேன்...” என்றாள்.

பாட்டியின் இந்த நிலைமையிலும் வாடிக்கைக்காரரை மதிக்கும் உயர்ந்த எண்ணம் என்னை உலுக்கியது.

“கொஞ்சம் இரு பாட்டி... இப்ப எப்படி திருவண்ணாமலைக்கு போவ?” என்றேன்.

அழுகையுடன் “இப்ப 1ஆம் நம்பர் பஸ் வரும். அதுல ஏறி கோயம்பேடு போயி அங்கேருந்து 122 பஸ் புடிச்சு போயிடறேன்” என்றாள்.

“கொஞ்சம் இரு பாட்டி” என்று சொல்லி பாக்கெட்டில் கையை விட்டேன். ஒரு 100 ரூபாய்தான் இருந்தது. நல்லவேளை எச்.எப்.டி. டெபிட்கார்டும் கூடவே இருந்தது. பக்கத்தில் இருந்த ஏடிஎம்மில் 5000 ரூபாய் எடுத்தேன். ஓலா ஆப்பில் ஒரு கேப் புக் பண்ணி கோயம்பேடுக்கு பாட்டி சீக்கிரம் செல்ல ஏற்பாடு செய்தேன்.

“பாட்டி இதை வச்சுக்கோ. இப் ஓலா வரும். அதுல எத்திவுடறேன். உன் பேரனுக்கு ஒண்ணும் ஆவாது. திருவண்ணாமலை அருணாசலம் பாத்துப்பார். நீ கவலை படமா போயிட்டு வா” என்றேன்.

பாட்டி கண்களில் தாரைதாரையாக கண்ணீர். என் கண்களிலும்தான். எப்படியோ பாட்டியை ஓலாவில் ஏத்திவிட்டு ஒடிபியை டிரைவரிடம் சொல்லி பாட்டியை பத்திரமாக அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.

அப்புறம் மூன்று, நான்கு வாரங்களுக்கு பாட்டியைக் காணோம். பேரனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. பாட்டியை பார்க்காத ஏக்கம் வேறு. கடைத்தெரு எனக்குப் பாலைவனமாகத் தோன்றியது.

டுத்த வாரம், பாட்டி கடையைத் திறக்காமல் ஓரமாக நின்றுகொண்டு நான் வருகிறேனா என்று பார்த்தவாறு இருந்தாள். பாட்டியைக் கண்ட மகிழ்ச்சியில் சைக்கிளை வேகமாக ஒட்டி பாட்டியிடம் சென்று நிறுத்தினேன்.

நான் பேசுவதற்குள் பாட்டி பேசினாள். “ராசா உன் புண்ணியத்தால பேரன் உயிர் பொழைச்சுட்டான். நீ சொன்ன அண்ணாமலை என்னைக் கைவுடல. நா போய் ஆஸ்பத்திரி நிக்கவும் பேரன் கண் முழிச்சி, பாட்டி வந்துட்டாயான்னா கேட்கவும் சரியா இருந்தது ராசா. நேரத்துல எனக்கு உதவி செஞ்சியே. இந்தா உன் பணம். ஊர்ல ஒரு பழைய மாட்டு வண்டி இருந்தது. அத வித்துத்தான் உன் பணத்தை ரெடி பண்ணி கொண்டாந்திருக்கே. இந்தா பிடி. இப்பவும் நான் திருவண்ணாமலைக்குத்தான் என் புருஷனையும் இட்டுக்குனு போறேன். என் பொண்ணு கூடவே இருந்து பேரனைப் பாத்துக்கப் போறேன். உன்னப் பாத்து சொல்லிட்டுத்தான் போணும்னு நின்னிருக்கேன். வரேன் ராசா. ஒனக்கு எவ்வளவு பெரிய மனசு. 5000 ரூவாவ முள்ளங்கி பத்த மாதிரி எடுத்துக் கொடுத்து பேரன போயி பார் பாட்டீன்னியே.

இதையும் படியுங்கள்:
பேச்சில் நேர்மையை கடைப்பிடியுங்கள்!
ஓவியம்: லலிதா

யார் ராசா அப்படி பண்ணுவா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும் ராசா. இதோ 1 நம்பர் பஸ் வருது. நான் வரேன்.”

பாட்டி பஸ்சில் ஏறும்போது என் கையில் இருந்த அந்த 5000 ரூபாயை பாட்டி கையில் திணித்தேன். “இது என் ஞாபகமா வச்சுக்கோ” என்றேன்.

“எனக்கு எதுக்கு ராசா இவ்வளவு பணம்?” என்றாள்.

“பேரனுக்கு நல்ல டிரஸ் வாங்கிக் குடு. விளையாட பொம்மை இந்த மாமா வாங்கி தந்ததா சொல்லி வாங்கிக்கொடு.”

பாட்டி புடவை தலைப்பால் கண்களை துடைப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. என் மனம் அமைதியின்றி தவித்தது. எத்தனையோ பிரிவுகளை சந்தித்த மனம் பாட்டியின் பிரிவை ஏன் ஏற்க மறுக்கிறது? பாட்டிக்கும் எனக்கு என்ன தொடர்பு. ஏன் இந்த நட்பு? புரியவில்லை.

காஞ்சி பெரியவரின் பொன்மொழி மட்டும் ஞாபகத்திற்கு வந்தது. “ஈஸ்வரன் நமக்கு சம்மந்தம் இல்லாது பலவற்றுடன் நம்மைச் சம்மந்திப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com