

பழைய பேப்பர், இரும்பு, பிளாஸ்டிக் சாமான்களை தெரு தெருவாக அலைந்து வாங்கி, அதை கடையில் போட்டு, அதில் வரும் வருமானத்தை ஈட்டுவது தான் சண்முகத்தின் தொழில்.
ஐம்பத்தைந்து வயதில், முப்பது வருடங்களாக அவன் அலைந்து திரிந்ததில், சென்னை வெய்யில் அடிக்கடி சோர்வடைய செய்த போதும், அவன் உள்ளம் இயங்கிக் கொண்டே இருந்தது. அதில் குடும்பம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம்... இப்படி தொழிலின் அவசியத்தை, கண்ணாடி பிம்பமாக அவன் முன் காட்டியது.
தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டியும் தன்னால் முடிந்த வரை, அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதிலும் அவன் உள்ளம் உறுதியாக இருந்தது போல், கடின உழைப்பும் அவனிடம் இருந்தது.
அன்று 'பழைய பேப்பர்' என்று கூவிக்கொண்டு தெருவில் வந்தான் சண்முகம்.
அப்போது கமலா என்ற பெண், "ஏம்பா, பழைய பேப்பர், இங்கே வா" என்று கூப்பிட்டாள்.