தோளில் சாட்டையைப் போட்டுக்கொண்டு அந்தப் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தான். அவளும் கழுத்தில் உறுமியைத் தொங்கவிட்டு தன்னுடைய கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவன் பின்னாடி வந்து கொண்டிருந்தாள். அது காலை நேரம் எல்லோரும் விறுவிறுப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளை. உறுமியை இசைத்துக் கொண்டிருந்தாள். பால்சாமி ஆடிக்கொண்டே சாட்டையை தன்னுடைய உடம்பில் அடித்துக் கொண்டிருந்தான். அத்தோடு பிளேடால் தன்னுடைய கையைக் கீறி அதிலிருந்து வரும் ரத்தத்தை சொட்டவிட்டு கொண்டே ஆடினான். காலை உணவைச் சாப்பிடுவதற்கு போதுமான அளவு காசு கைகூடவில்லை. சிலர் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் எனத் தருகிறார்கள். நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. பசி இருவருக்கும் வயிற்றைக் கிள்ளுகிறது. என்ன செய்வது பாவம்! காசு கைகூடவில்லையே. இந்தக் காலத்தில் இரண்டு பேர் சாப்பிடுவதற்கு 100 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறதே!
ஜக்கம்மாவின் குழந்தை பசியால் அழத் தொடங்கியது. இவள் அந்தப் பேருந்து நிலையத்தின் ஒரு மூலையில் தன்னுடைய குழந்தையை அமர்த்த தொடங்கினாள். குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே, இவளுக்கு பால் சுரப்பு குறைந்துவிட்டது.
இவள் சாப்பிட்டிருந்தால்தானே குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்! இவளும் சாப்பிடாமல் தானே இருக்கிறாள். குழந்தை மீண்டும் அழுதது. அதற்கும் பசி எடுக்கதானே செய்யும். குழந்தை பசியால் அழுவதை அவள் முகப் பாவனையிலிருந்து தெரிந்து கொண்டான் பால்சாமி. இவளும் அவனைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றாள். வசூல் ஆன பணத்தில் கையில் இருந்த 50 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அந்த தள்ளுவண்டி கடைக்கு சென்றார்கள்.
“அண்ணே சாப்பிடுவதற்கு என்ன இருக்கு?”
“மணி 11:45 ஆச்சு ஒன்னும் இல்லப்பா எல்லாம் விற்றுப் போச்சு!”
“சரிங்க ணே!”
ஆசையாக சாப்பிட சென்ற அவனுக்கு பலத்த ஏமாற்றமாக இருந்தது அந்த தள்ளுவண்டிக்காரின் பதில். தன்னிடம் இருந்த அந்தப் பணத்தை வைத்து மனைவிக்காவது ஏதாவது சாப்பிடுவதற்கு வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தால் அதற்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. பிறகு என்ன செய்வது?டீக்கடைக்குச் சென்று டீயும், வடையும் இருவரும் சாப்பிட்டார்கள். காலை நேரப் பசி சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது. குழந்தை மீண்டும் அழுது கொண்டிருந்தது. அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப்பால் குடித்துதான் வருகிறது.
டப்பா பால் கொடுத்தால் அதற்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அதனால் பாலூட்டும் அறைக்குச் சென்று குழந்தையை அமர்த்தினாள். ஒரு வழியாக குழந்தைக்கு வயிறு நிரம்பி விட்டது. நேரம் கடந்து கொண்டே சென்றது. கையில் இருந்த பணம் காலியாய்ப் போனது... மதியவேளை உணவு இருவருக்கும் இல்லை! காசு இருந்தால் தானே சாப்பிட முடியும்!
மெல்ல இருள் சூழ்ந்தது. இருவரும் வழக்கமாக தாங்கள் படுத்து உறங்கும் அந்த பிளாட்பார மூலையில் சென்று உறங்க ஆரம்பித்தார்கள். காலை வேளை எழுந்து வழக்கம் போல தங்களுடைய தொழிலைச் செய்ய ஆரம்பித்தார்கள். குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது…. அவளால் குழந்தையின் பசியைப் போக்க முடியவில்லை!
சாட்டையடி சத்தமும், உறுமிச்சத்தமும் ஓயாமல் அந்த பேருந்து நிலையத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது…. வயிறு பசித்துக்கொண்டே இருக்கிறது… இருவருக்கும் பசியால் தங்களின் குடல் வயிற்றுக்குள் எதையோ உறிஞ்சும் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது… இந்தச் சத்தம் மற்ற மனிதர்களுக்கு கேட்கவில்லை! இந்த கலியுகத்தில்….. இவர்கள் ஏதாவது ஒரு வேளை விரதம் இருக்கலாம். ஆனால் குழந்தையின் விரதம் கொடுமையானது…


