

யாழினி புகுந்த வீட்டினரையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் மிகவும் ரசித்தாள்.
அவள் அம்மா வீட்டிற்கு நேர் எதிராக இங்கு எல்லோரும் பழகும் விதம் மிகவும் பிடித்துப் போனதால், கூட்டுக் குடும்ப வாழ்க்கை கூட வெகு சுவாரஸ்யமானதாகவே இருந்தது அவளுக்கு.
பல நாட்கள் டேபிளில் எல்லோருமே சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள். மாமியார் பரிமாறுவார். சில சமயம் வீட்டுப் பெண்களை எல்லாம் உட்கார வைத்து, ஆண்களே பரிமாறுவார்கள்.
முதல்ல ஆம்பளைங்கதான் சாப்பிடனும்ங்கற சட்டமெல்லாம் இங்கே அறவே கிடையாது. 'யாருக்கு பசிக்குதோ அவங்க சாப்பிட வேண்டியது தானே ஒருத்தர் சாப்பாட்டை ஒருத்தரா சாப்பிடப் போறோம்' என்று அவள் மாமியாரே சொல்லுவார்.
அவரவர் சாப்பிட்ட தட்டை அவரவரே எடுத்துப்போய் கழுவி வைத்து விடுவார்கள். எந்த பேதமும் பார்ப்பதில்லை. எல்லோருமாக உட்கார்ந்து அரட்டை அடிப்பது மட்டுமல்ல, கயிறு இழுக்கற போட்டி, கண்கட்டி விளையாடறது என்று போலி மரியாதை எல்லாம் பார்க்காம வெகு இயல்பா இருக்கிறார்கள்.