ஆடி வெள்ளி தேடியுன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
என்றவொரு பாடல்
எப்பொழுதும் பிரபலம்!
ஆடிக்கும் காவிரிக்கும்
அசத்தலான நற்பொருத்தம்!
இந்தவொற்றை மாதத்தில்தான்
எத்தனையெத்தனை சிறப்புக்கள்!
ஆடிப் பூரமென்றும்
அசத்தலான ஆடிப்பெருக்கென்றும்
ஆடியமாவாசை ஆடிக்கிருத்திகையென்றும்
அங்காளம்மன் மயானக்கொல்லையென்றும்
ஒவ்வொன்றையும் உலகே
ஒருமித்துக் கொண்டாடும்!
கமண்டலத்தில் காவிரியை
கமுக்கமாய் அடைத்துவைத்த
அகத்திய முனிவரின்
அருமையை நினைந்திடுவோம்!
காவிரித்தாய் கர்ப்பமாய்
கவினுலகில் ஓடுவதால்
பெண்கள் அனைவருமே
பெருமையுடன் கர்ப்பிணிக்கு
முளைப்பாரி கருகமணி
ஊறவைத்த பச்சரிசியென்று
ஒவ்வொன்றாய்ப் பார்த்துப்பார்த்து
பசுஞ்சாணி பிள்ளையார்முன்
பாங்குடனே படைத்திடுவர்!
பொங்கலும் வைத்தே
புளகாங்கிதம் அடைந்திடுவர்!
பதினெட்டின் மகத்துவத்தை
பலரும் அறிந்திடுவர்!
பாரதத்தின் பருவங்கள்18
கீதையின் அத்தியாயங்கள்18
பாரதப்போர் நடந்தநாட்கள 18
ராமாயணப்போர் கடந்தமாதங்கள்18
ஐயனின் படியோ18
தேவர்அசுரர் யுத்தஆண்டுகளோ18
இப்படியேபல 18களை
இன்னுமேநாம் அடுக்கலாம்!
அதனால்தானோ ஆடியிலும்
பதினெட்டாம் நாளை
பவித்திரநாளாக்கி வைத்தார்!
புதுமணத் தம்பதியினர்
பொங்கலிட்டு பக்தியுடன்
புதுத்தாலிக் கயிற்றினையும்
பொன்கழுத்தி்ல் ஏற்றிடுவர்!
கன்னியரோ இன்னாளில்
கவினான வரன்வேண்டி
கும்மியடித்து குப்பிகளை
ஆற்றில் மிதக்கவிட்டு
அதன்மூலம் நம்பிக்கையை
அகத்தில் பதியவைப்பர்!
இம்மாத அமாவாசையன்றோ
மூதாதையர் அனைவருக்கும்
முத்தாய்ப்பாய் பூஜைசெய்து
ஆவிகள் அமைதிபெற
அத்தனையும் செய்திடுவர்!
மயானக்கொல்லை விழாவை
மகிழ்வாய்க் கொண்டாடி
ஆத்ம திருப்தியினை
அனைவருமே பெற்றிடுவர்!
ஆடித் தள்ளுபடி
இல்லாத கடைகளே
இல்லையென்று இன்றாயிற்று!
மாதம் முழுவதுமே
மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்
கொண்டதுதானே ஆடி!
கொண்டாடி நாம்மகிழ்வோம்!
புதுமணத் தம்பதியினரே!
முப்பத்தொரு நாள்தானே!
ஓடிவிடும் விரைவாக…
இரவுக்கும் பகலுக்கும்
இனியென்ன வேலையென்று
அப்புறமாய் நீங்கள்
ஆனந்தமாய்க் கொண்டாடுங்கள்!
ஒருடஜன் மாதத்தில்
ஒற்றையிந்த மாதந்தான்
மக்கள் அனைவரையும்
மகிழ்விக்கும் பெருமாதம்!