
ஒரு மனிதன் வெற்றிபெற வேண்டும் என்றால், அவன் தோற்றம், நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் என அனைத்திலும் மற்றவர்களைவிட ஒரு படி அதிகம் வித்தியாசம் இருக்க வேண்டும்.
ஒரு சிலரைப் பார்த்தால் அதிபுத்திசாலி போல் பேசுவார்கள். ஆனால் தோற்றத்தை பார்த்தால் நம்மால் நெருங்கி சென்று பேச முடியாத தடை ஏற்படுத்தும். அதேபோல் சிலர் மிடுக்காக தோற்றம் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் பேசும்போது நமக்குள் அதிக பிரசங்கித்தனமாக பேசுவதுபோல் தோன்றும்.
பொதுவாக உளவியலின் (psychology)படி புத்திசாலியாகத் தோன்றுவது நடத்தை, தொடர்பு மற்றும் தன்னம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உருவாகும் அம்சம் எனப்படுகிறது. நம்மை புத்திசாலிகள்போல காட்டிக்கொள்ளவும் வேண்டும். அதே சமயம் மற்றவர்களிடம் நம்பிக்கையும் பெறவேண்டும்.
இதோ உளவியல்படி வெற்றிக்கு உதவும் புத்திசாலியான தோற்றம் பெறத்தேவையான டிப்ஸ்…
'ஆள் பாதி ஆடை பாதி' என்பார்கள் முதலில் ஒருவரது பார்வையில் படுவது நமது அறிவுத்திறன் அல்ல. நமது தோற்றமே, என்பதால் நமது தோற்றத்திற்கு ஏற்ற உடை உடுத்துவது நமது புத்திசாலித்தனத்தின் அடையாளமாகும். அந்தந்த சூழலுக்கு ஏற்பவும் நமது உடல்வாகுக்கு பொருந்தும் வகையில் பொருத்தமான உடைகளை நேர்த்தியான முறையில் அணிவது முக்கியம்.
அடுத்து. அவசியத்தேவை தன்னம்பிக்கையான உடல் மொழி. நமது தோற்றம் பார்ப்பவர் பார்வையில் பதித்து மனதில் நம்பிக்கை தந்தாலும் நமது உடல் மொழியையும் எதிரில் உள்ளவர்கள் கவனிப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தன்னம்பிக்கையான உடல் மொழியை நாம் கடைபிடிக்க வேண்டும். அதாவது நேராக நிமிர்ந்து நடப்பது, கூன் போடாமல் நாற்காலியில் அமர்வது, கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது மற்றும் சீரான வகையில் மிதமாக புன்னகைப்பது போன்ற விஷயங்கள் நம்மை புத்திசாலியாகவும் அதேசமயம், நம்பிக்கையானவராகவும் காட்ட உதவும்.
மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டுவது பெரும்பாலும் நமது சிந்தனைமிக்க கேள்விகளே எனலாம். குறிப்பாக தெரியாதவற்றை பேசி தடுமாறுவதைத் தவிர்த்து நாம் நன்கு அறிந்த தலைப்புகளைப் பற்றி நம்பிக்கையுடன் பேசுவது நம்மை மேலும் புத்திசாலியாகக் காட்டும்.
அதேபோல் எதிரில் இருப்பவரின் பேச்சை கவனத்துடன் கேட்பதும் அதற்கு தகுந்த அறிவுடன் பதிலளிப்பதும் நம்மை மேலும் புத்திசாலியாகவும், அதிக ஈடுபாட்டுடனும் காட்டும். புதிய தலைப்புகளைக் கற்றுக்கொள்வதிலும் ஆராய்வதிலும் நமது உண்மையான ஆர்வத்தைக் காட்டுவது புத்திசாலியான தோற்றம் தரும்.
அறிவு சார்ந்த விஷயமாக நாம் பேசும் கருத்துகளே வரையறுக்கப்படுகிறது. ஒரே விஷயம் பல தொனிகளில் புரிந்து கொள்ளப்படும். ஆனால் சொல்ல வந்ததை தெளிவாகவும், நம்பிக்கையுடனும், அதிகார உணர்வுடனும் பேசுபவர்களை மக்கள் பெரும்பாலும் அதிக புத்திசாலிகளாகக் கருதுகிறார்கள். இவர்களையே தலைவர்களாகவும் ஏற்கிறார்கள்.
பேச்சிலும் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாம் விவாதிக்கும் தலைப்புகளில் பயிற்சியுடன் நன்கு தயாராக இருப்பது நமது நம்பிக்கையை அதிகரிப்பதுடன் கேட்கப்படும் எதிர் கேள்விகளுக்கு தயங்காமல் தகுந்த பதிலளிப்பது நம்மை மேலும் புத்திசாலியாகக் காட்டும்.
வளவளவென பேசாமல் எண்ணங்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசத்தெரிவது புத்திசாலித்தனத்தைப் பற்றிய கருத்துக்களை மேம்படுத்தும். சில நேரத்தில் எல்லாவற்றையும் உடனடியாக ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக இருப்பது, அல்லது சற்று நேரம் எடுத்து யோசித்து பேசுவது நம்மை புத்திசாலியாகவும், நிதானமாகவும் காட்ட உதவும்.
இவைகளுடன் தவறுகளை ஒப்புக்கொள்வது, எப்போதும் புதிய ஒன்றை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பது, அறிவார்ந்த புத்தகங்களை வாசிப்பது, சான்றோர்கள் தொடர்பு போன்ற அனைத்தும் நமது புத்திசாலித்தனத்தின் அடையாளங்கள். மேலும் "புத்திசாலி" என்று தோன்றுவது சூழல் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது என்பதையும் புரிந்து நடந்தால் வெற்றி நமக்கே.