
நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு தாவரம் கீழாநெல்லி. அதன் பலன்களை தெரிந்துகொண்டால் பாதுகாத்து வளர்க்கக் கூடிய மருத்துவ மூலிகை என்பதை புரிந்து கொள்ளலாம்.
அற்புத மூலிகையாக கருதப்படும் கீழாநெல்லியானது கீழ்க்காய் நெல்லி, கீழ்பாய நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது குறுஞ்செடிவகையைச் சேர்ந்தது. நீர்நிலைகள், வரப்புகளிலும் வளரும். கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்'எனும் மூலப்பொருள் இருப்பதால் இதன் இலைகளில் கசப்பு சுவை அதிகமாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று.
கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. இதன்வேர் 10 கிராம் எடுத்து இடித்து பால் அல்லது மோரில் கலந்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் கல்லீரலைப் பலப்படுத்தி கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதன் சாற்றை மஞ்சளுடன் கலந்து பூச சொரியாசிஸ் சரியாகும். கீழாநெல்லி செடியை சுத்தப்படுத்திவிட்டு பின் அரைத்து சொறி, சிரங்கு படைகளில் பற்றுபோட்டால் குணமாகும்.
இதன் இலையை எண்ணையில் இட்டு காய்ச்சி, தலைக்கு தேய்ப்பதால் உடல் குளிர்ச்சியாவதுடன் கண்களின் சிவப்புத் தன்மை, எரிச்சலைப் போக்குகிறது. பார்வையையும் தெளிவாக்குகிறது.
கீழாநெல்லியை மென்று, பல் துலக்கி வந்தால் பல்வலி தீரும். சிறுநீர்பாதை எரிச்சலை குணமாக்குகிறது. மஞ்சள் கீழாநெல்லி செடி, கரிசலாங்கண்ணி இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமபங்கு எடுத்து, காய்ச்சிய பால் விட்டு அரைத்து காலை, மாலை இருவேளை கோலிக்குண்டு அளவு சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். மீண்டும் வராது.
மஞ்சள் காமாலையால் ஏற்படும் உடல்சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மையைப் போக்கி கல்லீரல் வீக்கத்தையும் குறைக்கும்.
கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசிவர அரிப்பு, தேமல் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி குளித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
இவ்வாறு பல வகைகளில் பலனளிக்கும் கீழாநெல்லியை சேர்த்து கொள்ள ஆரோக்கியம் காக்கலாம்.