Interview: மைக்ரோ சீரிஸ்: கூரைப்பல்லியும் கவிதாவும்! - எழுத்தாளர், இயக்குநர் கீதா இளங்கோவன்!

நாம இல்லனா இந்த குடும்பமே ஓடாதா? – இல்லத்தரசிகளின் 'மாயை'யை உடைக்கும் கூரைப்பல்லியும் கவிதாவும்! எழுத்தாளர் மற்றும் இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களின் Xclusive நேர்காணல்!
Koorai palliyum Kavithavum  director and writer Geetha Elangovan
கூரைப்பல்லியும் கவிதாவும்! - எழுத்தாளர், இயக்குநர் கீதா இளங்கோவன்
Updated on
MM strip
MM strip

பரந்த சினிமா உலகம் நாளுக்கு நாள் பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. சீரியல், சீரிஸ், யூட்யூப் என பல மீடியா இருக்கும் நிலையில், தற்போது மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வரும் ஒரு மீடியாதான் மைக்ரோ சீரிஸ். அந்த வகையில், கரன் தயாநிதி மாறன் அண்மையில் தொடங்கியுள்ள ‘கதை ஷார்ட்ஸ்’ (Kadhai Shorts) செயலி, வெர்டிகல் சீரிஸ் உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்திருக்கிறது.

பெண்களின் வாழ்வியலையும் போராட்டங்களையும் வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் சுருக்கி, பார்வையாளர்களின் மனதைத் தொடுவது எப்படி? சவால்கள் நிறைந்த மைக்ரோ டிராமா உலகிற்குள் வெற்றிகரமாகத் தடம் பதித்து, 'கூரைப்பல்லியும் கவிதாவும்' தொடர் மூலம் பெண்களின் சுய அன்பின் அவசியத்தைப் பேசுகிறார் 'துப்பட்டா போடுங்க தோழி' நூலை எழுதிய எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் கீதா இளங்கோவன். சமூகம், பெண் அரசியல் மற்றும் புனைவு வடிவத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட பிரத்தியேகமான நேர்காணல் இதோ...

Q

தமிழில் vertical series app மாதிரியான பிரத்யேக மொபைல்-சீரிஸ் ஆப்ஸ்கள் வருவதை ஒரு இயக்குநராகவும், மீடியா நிபுணராகவும் எப்படிப் பார்க்கிறீர்கள்? சினிமா, OTT போன்ற நீண்ட வடிவப் படைப்புகள் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் அதே ஆழமான உணர்வுப்பூர்வமான தாக்கத்தை சில நிமிடங்களே ஓடும் இந்த மைக்ரோ-சீரிஸால் கொடுத்துவிட முடியுமா?

A

மைக்ரோ டிராமா, வெர்டிகல் சீரிஸுக்கான ஆப்ஸ் வருவதை தவிர்க்க முடியாத ஒரு பரிணாம வளர்ச்சியா தான் நான் பார்க்கிறேன். ஏன்னா ஒரு சந்தை தான் தீர்மானிக்குது —உற்பத்தியாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என்ன ப்ராடக்ட்டை கொண்டு வர்றதுன்னு. அப்படிங்கிறப்போ, நீங்க விரும்புறீங்களா, விரும்பலையா அப்படிங்கிறதைத் தாண்டி, இந்த மொபைல் ஆப்ஸ் வந்துகிட்டு தான் இருக்கு.

அதை எப்படி பயன்படுத்தப் போறோம் அப்படிங்கிறது தான் ரொம்ப முக்கியமானது. ஸ்டீரியோடைப்பிங்கா பழிவாங்கல் கதை, அப்புறம் பெண்ணுக்கு எதிரான கதைகள்... அதுதான் இப்போதைக்கு, பெரும்பான்மையான மைக்ரோ சீரிஸ், வெர்டிகல் டிராமா இடத்தை உலகளவுல ஆக்கிரமிச்சிருக்கு.

அதைத் தாண்டி, நம்ம வந்து இளம் தலைமுறைமுறையினர்கிட்ட - ஜென் ஸி கிட்ஸ் கிட்ட- எந்த விஷயம் போய் சேரணும்னு நினைக்கிறோமோ, அதை சுவாரஸ்யமாகவும் தரமாகவும் கொடுத்தா, நிச்சயமாக நல்ல வரவேற்பு இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

இது வந்து சினிமா, ஓடிடி கொடுக்கிற ஆழமான தாக்கத்தைக் கொடுத்திட முடியுமா அப்படின்னா... கொடுக்க முடியும் அப்படின்னு தான் நினைக்கிறேன். அந்த சவால் வந்து, அந்த கிரியேட்டர்கிட்ட தான் இருக்கு. அவங்க தான் அதை எதிர்கொள்ளணும்.

ரொம்ப சுருக்கமா ஒரு விஷயத்தைச் சொல்றப்ப, ஆழமாகவும் நம்மளால சொல்ல முடியும். என்ன, அதுக்காக ஒரு கூடுதல் உழைப்பு நமக்குத் தேவைப்படுது. ஒரு ப்ரீ-பிளானிங் தேவைப்படுது.

இன்னும் அதிகமா நம்ம வந்து கூர்மைப்படுத்த வேண்டியது இருக்கு. காட்சிகளையும் சரி, வசனங்களையும் சரி, மொத்த அந்த கன்டென்ட்டையுமே... ஷார்ப் பண்ணிப் பண்ணி கொடுக்குறப்போ, நிச்சயமாக அது சினிமா, ஓடிடி ஏற்படுத்துற தாக்கத்தை ஏற்படுத்தும்னு நான் நம்புறேன்.

Koorai palliyum Kavithavum micro series
Koorai palliyum Kavithavum micro series
Q

koorai palliyum kavithavum micro series நீங்கள் எழுதி இயக்கிய 'கூரைப்பல்லியும் கவிதாவும்' தொடரின் தலைப்பு மிகவும் வித்யாசமாக இருக்கிறது. இதன் பின்னணி மற்றும் மையக்கதை எதைப் பேசுகிறது என்று கூற முடியுமா?

A

கூரைப்பல்லியும் கவிதாவும் - இந்த தலைப்பு வந்து ஒரு குடும்பத்தலைவியின் வாழ்க்கையை பேசுது. கூரைப்பபல்லிய பத்தி ஒரு கதை சொல்லுவாங்க. பார்த்தீங்கன்னா, கூரையில் இருக்கிற பல்லி நினைச்சுக்குமாம், தான் தான் இந்த கூரையை தாங்கி பிடிச்சுட்டு இருக்கோம்னு. அதே மாயையில அது வாழுமாம். என்னைக்கு அது கீழே விழுகுதோ அப்பதான் அதுக்கு தெரியுமாம் இல்ல, நாம இல்லாமையும் இந்த கூரை நிக்குது, எதுவும் பாதிக்கல அப்படிங்கிறது.

சோ, அதை வச்சு தான் 'கூரைப்பல்லியும் கவிதாவும்'னு தலைப்பு வச்சோம். கவிதா வந்து ஒரு இல்லத்தரசி. இவங்க யாருன்னா நம்ம வீடுகள்ல இருக்கிற பெண்களோட ஒரு பிரதிநிதின்னு சொல்லலாம். கவிதா ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஒரு சதவீதத்துல இருக்கிறாங்க.

அப்போ இந்த இல்லத்தரசிகள் வந்து தான்தான் குடும்பத்தை தாங்கிட்டு இருக்கோம், தான் இல்லன்னா குடும்பத்திலே எதுவும் நடக்காது அப்படின்னு ஒரு மாயையில இருக்காங்கன்னு எனக்கு தோணுது. எப்படின்னா, சில விஷயங்கள் அதாவது ஒரு எமோஷனல் சப்போர்ட் கொடுக்கிறதாகட்டும், அவங்களுக்கு வந்து எமோஷனலா அவங்களுக்கு உதவி பண்றதாகட்டும், அதெல்லாம் ரீப்ளேஸ் பண்ண முடியாதது தான். ஆனா, உடல் ரீதியா அவங்க தர்ற உழைப்பு இருக்கு இல்ல, அதுக்கு வந்து ஒரு மாற்று ஏற்பாடு பண்ண முடியும். குடும்பத்தினரே அந்த வேலைகளை பகிர்ந்துக்கலாம். குடும்பத்தினர் பகிர முன் வராதப்ப ஒரு உதவியாளரை வச்சு செஞ்சுக்கலாம்.

சோ, இந்த ரெண்டு ஆப்ஷனையும் அவங்க யோசிக்கணும். யோசிக்க மாட்டேங்கிறாங்க. நிறைய பங்களிப்பு செய்றாங்க, உழைச்சுகிட்டே இருக்காங்க. இதனால என்னாகுதுன்னா, தன்னோட தனிப்பட்ட விருப்பங்கள், இலக்குகள், ஆசைகளுக்கு முக்கியத்துவம் தராம, ஒரு சுய அன்புன்னு சொல்லுவோம் இல்லையா, 'செல்ஃப் லவ்', அதுவே இல்லாம இருக்காங்க. அப்புறம் வாழ்க்கை எல்லாம் முடியிற ஒரு முதிர் காலத்துல 'அய்யய்யோ, எனக்கு பிடிச்ச இதெல்லாம் செய்யாம விட்டுட்டேனே' அப்படின்னு புலம்புறாங்க.

சோ, இந்த இல்லத்தரசிகளுக்கு, 'உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யுங்க, முழு நேரமும் உங்களோட உழைப்பை குடும்பத்திற்கு மட்டுமே தரணும்னு அவசியம் இல்லை' அப்படின்னு சொல்றது தான் இந்த கதை. அது வந்து சுவாரசியமாவும் தரமாவும் வந்திருக்கு. பார்க்கிற பெண்கள் எல்லாம் 'என்னையே நான் வந்து பார்க்கிறேன் இதுல', 'எங்கேயோ நான் இருக்கேன்' அப்படின்னு சொல்றது இந்த தொடருக்கான வெற்றியா நான் நினைக்கிறேன்.

Q

'மாதவிடாய்', 'ஜாதிகள் இருக்கேடி பாப்பா' போன்ற அழுத்தமான ஆவணப்படங்கள் மற்றும் 'துப்பட்டா போடுங்க தோழி' போன்ற புத்தகங்களுக்குப் பிறகு, திடீரென இந்த 'மைக்ரோ டிராமா' வடிவத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

A

தொழில்நுட்ப வளர்ச்சியோட பயணிக்கணும் அப்படிங்கிறது ஒரு முக்கியமான காரணம். அப்படி பயணித்தாதான் அடுத்த தலைமுறைக்கிட்ட, இளைஞர்கள் கிட்ட நம்ம கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க முடியும். அதுவும் அவங்களுக்கு பிடித்த வடிவத்துல நாம அதை சொல்றப்போ, இன்னும் எளிதாக அதை கொண்டு போய் சேர்க்க முடியும்னு நினைக்கிறேன்.

மைக்ரோ டிராமா அப்படிப்பட்ட ஒரு வடிவம் தான். எல்லாரும் போன்லேயே பார்க்கலாம், எளிமையா அவங்களால புரிஞ்சுக்க முடியும், புனைவா இருக்கிறதுனால சுவாரசியமாக இருக்கும். சோ, இளைஞர்கள் கிட்டயும், போன் யூஸ் பண்ற எல்லார் கிட்டயும் நம்ம கருத்துக்களை புனைவு வடிவுல கொண்டு போய் சேர்க்கிறதுக்கு அப்படின்னு நான் நினைக்கிறேன். அதனாலதான் இதை தேர்ந்தெடுத்தேன்.

Q

தீவிரமான சமூக அரசியல் பேசும் ஒரு படைப்பாளிக்கு, 1-2 நிமிட எபிசோடுகளைக் கொண்ட இந்த அதிவேக வடிவம் ஒரு சவாலாக இருந்ததா அல்லது உங்கள் கருத்துக்களை இன்னும் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாகத் தெரிந்ததா?

A

ஆரம்பத்துல சவாலாகத்தான் இருந்தது. ஏன்னா நம்ம வந்து ஒரு காட்சியைப் பொறுமையா, நிதானமா பார்த்தே பழகினவங்க, வசனங்களை எல்லாம் நிறைய கேட்டுப் பழகினவங்க அப்படிங்கிறப்போ அது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது.

ஆனா, ரெண்டு நிமிடத்துக்குள்ள நம்ம அதை கொண்டு போய் சேர்க்கணுங்கிறப்போ, சுருக்கமா, கூர்மையா, கவனத்தோடு ஒவ்வொன்னையும் செய்யறப்போ அதுவே ரொம்ப ஒரு சுவாரசியமான பயணமாக ஆயிருச்சு. ரொம்ப மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருந்தது. தேவையில்லாம எவ்வளவு விஷயங்களை நம்ம வந்து சுத்தி சுத்தி சொல்றோம் அப்படிங்கிறதையும் புரிஞ்சுக்க முடிந்தது.

அதனால, அந்த சவாலான பணிங்கிறது சுவாரசியம் மிகுந்ததாகவும் மகிழ்ச்சியான ஒரு பணியாகவும் மாறிடுச்சு. மைக்ரோ டிராமாவுக்கு எழுதுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

Q

சினிமாவுக்கான 16:9 லேண்ட்ஸ்கேப் ஃபிரேம்களுக்கும், மொபைல் போனுக்கான 9:16 வெர்டிகல் ஃபிரேம்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. 'கூரைப்பல்லியும் கவிதாவும்' தொடரை இயக்கும்போது கேமரா ஆங்கிள்கள், நடிகர்களின் இயக்கம் மற்றும் காட்சிகளை வடிவமைப்பு செய்தது சிரமமாக இருந்ததா?

A

வெர்டிகல் டிராமாவுக்கு அதற்கான சிரமங்கள் இருக்கத்தான் இருக்கும். வைட் ஷாட் (Wide Shot) வைக்க முடியாது. அப்புறம் ஒரு குடும்பத்துல ஆறு பேர் இருக்காங்கன்னா, ஆறு பேரையும் ஒரே பிரேம்ல நீங்க காட்ட முடியாது.

சோ, அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நம்ம கொஞ்சம் மாத்தி யோசிச்சுதான் எடுக்கணும். ஆனா எனக்கு பெருசா சிரமம் தெரியல. இந்த வடிவம் இப்படித்தான் அப்படிங்கிறதுனால, அதற்குத் தகுந்த மாதிரி காட்சிகளையும், நடிகர்கள் நிக்கிற அந்த பொசிஷன், ஸ்டேஜிங் எல்லாம் பண்ணிட்டோம்னா சரியாகத்தான் இருக்கும்னு தோணுச்சு.

Q

மைக்ரோ டிராமாக்களில் ஒவ்வொரு எபிசோடும் 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மேலும் ஒன்றிரண்டு எபிசோட்களிலேயே hook points வைத்து பார்வையாளர்களைக் கட்டிப்போட வேண்டும் . ஒரு எழுத்தாளராக, மிக நீளமான கதையாடலை விடுத்து, இவ்வளவு சுருக்கமான காட்சிகளுக்குள் திரைக்கதை எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?

A

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ரொம்ப சுவாரசியமாகத்தான் இருந்தது. என்னன்னா, நீங்க ஒவ்வொரு எபிசோட் முடிவுலயும் ஒரு 'கிளிஃப் ஹேங்கர்'னு சொல்லுவாங்க இல்லையா, ஒரு குட்டி சஸ்பென்ஸ் மாதிரி வச்சு, அடுத்ததை கொண்டு போகணும் அப்படிங்கிறப்போ அது ரொம்ப சீரியஸான விஷயமா இருக்கணும்ங்கிறது இல்லை. கொஞ்சம் எளிமையா, நகைச்சுவையா, ஒரு சின்ன ஒரு பிளசண்ட் சர்ப்ரைஸா (Pleasant surprise) இருக்கலாம். சோ, அந்த மாதிரி எல்லாம் வைக்கிறப்போ, அந்த கதை வந்து சுவாரசியம் கூடுது.

அது வைக்கிறதுல ஒரு சின்ன சேலஞ்ச் (Challenge) இருக்கு. என்னன்னா, கதையை விட்டு ரொம்ப விலகிப் போயிடக்கூடாது. அதே சமயம், ரொம்ப நம்ம வந்து சுத்தி சுத்தி சொல்றோம் அப்படிங்கிறதும் வந்திடக்கூடாது. அதுக்கு இடையில அந்த கதை எவ்வளவு அனுமதிக்குதோ, அதுக்குள்ள அந்த கிளிஃப்ஹேங்கர் வைக்கிறது அப்படிங்கிறது ரொம்ப ஒரு சுவாரசியமான சவாலாக இருந்தது. ஆனா, அதை நான் ரசிச்சு செஞ்சேன். எனக்கு அது பிடிச்சிருந்தது.

Q

இப்போது முழுநேர இயக்குநராக உங்கள் முதல் கதையை இயக்கியுள்ளீர்கள். அடுத்தடுத்து உங்களின் திரைப்பயணம் எத்திசையில் இருக்கும்?

A

ஒரு முழுநேர இயக்குநராக இந்தத் தொடரை இயக்கியது எனக்கு மிகவும் நிறைவான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இது உருவான விதம், இது பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கும் தன்மை மற்றும் அதைப் பார்த்தவர்கள் கூறும் கருத்துக்கள் எனக்குப் பெரும் திருப்தியைத் தந்துள்ளன.

மைக்ரோ ட்ராமா பத்தி இன்னொனு சொல்லனும். ஒரு திரைப்படம் எடுக்கனும்னா நம்ம preproductionக்கு ஒரு 3 months and shooting-க்கு 2 months and post production -க்கு 3 to 4 months அப்டினு மாதக் கணக்குல பயணிக்க வேண்டியதா இருக்கும். ஆனா மைக்ரோ ட்ராமா பாத்தீங்கனா இதுக்கு எல்லாமே திரைக்கதை எல்லாமே ரெடி பண்ணிட்டு, ஒரு மாதத்துலையே ஷூட்டிங்க் முடிச்சு, post production முடிச்சு வெளியீட்டு பார்வையாளர்கள்கிட்ட அந்த கருத்துக்களையும் வாங்குறது என்பது மகிழ்ச்சி அடிக்கக்கூடிய பயணமாக இருந்தது. அதான் மைக்ரோ ட்ராமாவோட பெரிய scuccesனு நினைக்கிறேன்.

அடுத்து, திரைப்படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எனினும், மைக்ரோ டிராமாவும் தொடர்ந்து கண்டிப்பாய் செய்வேன்.

logo
Kalki Online
kalkionline.com