தங்கத்திற்கே இணையான விலையில் ஒரு உப்பு!

Korea Bamboo Salt
Bamboo Salt
Published on

சமையலில் உப்பு இன்றியமையாத பொருளாகும். உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதும் உப்பு தான். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி உப்பின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. இன்று மக்கள் பயன்படுத்தும் வழக்கமான உப்பானது, மலிவான விலையில் கிடைக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட தங்கத்திற்கே இணையான விலையிலும் ஒரு உப்பு உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா! அந்த அளவிற்கு விலையுயர்ந்த உப்பு எது? ஏன் இதன் விலை மட்டும் மிக அதிகம்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு, கடல் நீரில் இருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது. உப்பை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இனிப்பு சுவை தரும் சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்; ஆனால் உப்பு இல்லாமல் வாழ்வது கடினம். நாம் சாப்பிடும் உணவின் சுவைக்கு, உப்பும் ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கிறது.

கொரிய நாட்டில் ‘கொரியா மூங்கில் உப்பு’ மிகவும் பிரபலம்.

உலகின் விலையுயர்ந்த உப்பு இதுதான். ஒரு கிலோ கொரியா மூங்கில் உப்பின் விலை சுமார் 400 டாலர்கள் ($) என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.35,000 ஆகும். சாதாரண உப்பா இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த உப்பை உருவாக்குவதற்கு அதிக உடலுழைப்பும், நேரமும் தேவைப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும், சந்தையில் கிடைக்கும் சாதாரண உப்பைப் போலவே, கொரியா மூங்கில் உப்பும் கடலில் இருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால், இதோடு இந்த உப்பை உருவாக்கும் பணி முடிவடையவில்லை. கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உப்பை, தடிமனான ஒரு மூங்கில் தண்டில் அடைத்து களிமண்ணால் மூடி விடுவார்கள். இதனை ஒரு இரும்பு அடுப்பில், அதிக வெப்பநிலையில் பைன் விறகுகளைக் கொண்டு சூடாக்க வேண்டும். பிறகு இந்த உப்பை ஆற வைத்து, மீண்டும் இதே செயலை செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் மொத்தமாக 9 முறை உப்பை மூங்கில் தண்டில் அடைத்து சூடாக்க வேண்டியது அவசியமாகும். கடைசியாக 9 வது முறையில் சூடாக்கும் போது மட்டும், 1000° செல்சியஸ் வெப்பநிலையில் உப்பை சுட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உப்பு சமையலுக்கு மட்டும்தானா என்ன? குளியலுக்கும் தானாமே! கரிக்காதோ?
Korea Bamboo Salt

சிக்கலான செயல்முறையில் உருவாகும் இந்த உப்பானது மூங்கில் தண்டின் சுவையை நன்றாக உறிஞ்றி விடும். இதனால் இறுதியாக தயாரிக்கப்படும் உப்பில் நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளைப் படிகங்கள் காணப்படும். மேலும் காம்ரோஜங் என்ற இனிப்பு சுவையும் இதில் கலந்திருக்கும். ஊதா நிறத்தில் இருக்கும் கொரியா மூங்கில் உப்பை, ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜூகியோம் (Jugyeom) என்றும் அழைக்கின்றனர்.

அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும் என்பதால் கொரியா மூங்கில் உப்பைத் தயாரிக்க கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகும். இதனால் தான் கொரியா மூங்கில் உப்பின் விலை அதிகமாக உள்ளதாம். மேலும் இந்த உப்பு கொரியாவின் பாரம்பரிய மருத்துவத்திலும், பிரபலமான கொரியா உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com