கிடுகிடுக்க வைக்கும் கோட்டை கருப்பர் தெரியுமா?

கோட்டை கருப்பர் கோயில்
கோட்டை கருப்பர் கோயில்

-ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

காவல் தெய்வம்:

ருப்பர், காத்தவராயன், சுடலைமாடன், முனி, வீரன், சடையாண்டி - இப்படிக் கிராமங்களில் அருளுகின்ற காவல் தெய்வங்கள் எல்லாமே உக்கிரமானவை என்று சொல்லப்பட்டாலும், இந்த தெய்வங்கள் எல்லாமே 'நல்லவர்களுக்கு நல்லவர்கள், கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள். அன்போடு பணிந்தால், அரவணைத்துக் கொள்ளும். பித்தலாட்டம் செய்தால், பிய்த்துப் போட்டுவிடும்.

மனதில் தூய பக்தியோடு கிராமத்தை விட்டு வெளியே செல்லும்போது ஒத்தை ரூபாய்க்கு ஒரு கற்பூரத்தை வாங்கி ஏற்றிவிட்டு காவல் தெய்வத்தை வணங்கி சென்றால், எந்தக் காரியத்துக்காக வெளியே போகிறோமே, அது முடிந்து நாம் வீடு திரும்பும் வரை நம்முடன் காவலுக்கு வரும் இந்த தெய்வங்கள். அதோடு, நாம் எந்தக் காரியத்துக்காகச் சென்றோமே அந்தக் காரியமும் ஜெயமாகும்.

கருப்பரின் அவதாரம்:

கருப்பரின் அவதாரம் குறித்து ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு தகவல்களும் கதைகளும் சொல்லப்பட்டாலும், ராமாயணத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. அதாவது, வால்மீகி ஒரு தர்ப்பையைத் தரையில் கிள்ளிப்போட்டு சில மந்திரங்களைச் சொல்லி அதற்கு உயிர் கொடுத்தபோது, அந்த தர்ப்பையே கருப்பண்ணசாமி ஆனதாக ஒரு தகவல் உண்டு.

வீரபத்திரருக்கும் சண்டி தேவிக்கும் பிறந்தவர்தான் கருப்பர் என்று சில நூல்கள் சொல்கின்றன.

பார்த்தாலே மிரட்டுகிற கோட்டை கருப்பண்ணசாமி:

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் வருகின்ற ஊர் வத்தலகுண்டு. இங்கிருந்து பழைய வத்தலகுண்டு செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் கருப்பசாமிக்கு ஒரு பிரத்யேகமான கோயில் அமைந்துள்ளது. கோட்டைக் கருப்பண்ணசாமி என்கிற திருநாமம் கொண்ட இந்த கருப்பர் அருளும் கிராமத்தின் பெயர் விராலிப்பட்டி.

இந்தக் கிராமத்தில் அமைதியான வனப்பகுதியில் மிக ஆர்ப்பாட்டமாகக் கோயில் கொண்டுள்ளார் கோட்டைக் கருப்பண்ணசாமி.

கோட்டை கருப்பர்
கோட்டை கருப்பர்

குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்தாலே மிரளும் வகையில் இவரது சிலை அமைந்துள்ளது. பெரிய மீசை, கனத்த முண்டாசு, விரிந்த வீரக் கண்கள் என்று, சுமார் பத்தடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காணப்படும் இந்தக் கோட்டைக் கருப்பண்ணசாமி, கையில் அருவாள், துப்பாக்கி போன்றவற்றை வைத்துக்கொண்டு தன் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார்.

அமாவாசை திருவிழா:

ஆடி மாத அமாவாசை தினத்தன்று இவருக்கு ஒரு திருவிழா நடக்கும். மூன்று நாட்கள் திருவிழா. விராலிப்பட்டியே அமளிதுமளிப்படும். இந்தத் திருவிழா நடக்க இருப்பதை ஊர்மக்கள் அனைவரும் கூடி முன்னரே தீர்மானிப்பர். எந்த அளவுக்கு இதை விமரிசையாக நடத்த வேண்டும் என்று ஊர் கூடி விவாதிக்கும். இந்தத் திருவிழாவுக்கு திரளுகின்ற பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுமாம்.

இந்தத் திருவிழாவுக்கு வரும் ஊர்க்காரர்கள் உட்பட அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உண்டு.

திருவிழா கட்டுப்பாடுகள் :

கிராமம் என்றாலே, லுங்கியைத் தவிர்க்க முடியாது. ஆனால், கோட்டைக் கருப்பண்ணசாமி திருவிழாவுக்கு வருகிற ஆண்கள் எவரும் லுங்கி அணியக்கூடாது.

இரவு வேளைகளிலும், அதிகாலை வேளைகளிலும் விராலிப்பட்டி எல்லைக்குள் நுழையும் எந்த ஒரு வாகனத்திலும் முகப்பு விளக்குகள் (ஹெட்லைட்) எரியக்கூடாது. அடுத்த ஊர் எல்லை வரை முகப்பு விளக்குகளைப் போட்டுக்கொண்டு வரும் வாகன ஓட்டிகள், விராலிப்பட்டி எல்லை துவங்கிவிட்டால், பயபக்தியோடு ஹெட்லைட்டை அணைத்துவிடுவார்கள்.

அதையும் மீறி, ஒரு வருடத் திருவிழாவின்போது வீம்பாக ஹெட்லைட்டை எரியவிட்டு ஊருக்குள் வந்த ஒரு பஸ் டிரைவருக்கு அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே விபத்து ஏற்பட்டு விட்டதாம்.

சதா சீரியல், சீரியல் என்று டி.வி.யிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள், திருவிழா துவங்கி விட்டால், வீட்டில் டி.வி. பார்க்க மாட்டார்களாம்.

திருவிழா காலத்தில் வேறு எவர் வீட்டிலும் ஒலிபெருக்கிகள் வைக்கக்கூடாது ; ஒலிக்க விடவும் கூடாது.

இதையும் படியுங்கள்:
மூங்கில் குருத்தில் இருக்கும் முத்தான நன்மைகள்!
கோட்டை கருப்பர் கோயில்

திருவிழா முடியும்வரை உள்ளூர்க்காரர்கள் கடும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.

ஏதாவது வேலையாக பக்கத்து ஊருக்கோ டவுனுக்கோ செல்லும் விராலிப்பட்டிவாசிகள், இரவுக்குள் இல்லத்துக்குத் திரும்பி விட வேண்டும். எக்காரணம் கொண்டும் வெளியூரில் தங்கக் கூடாது.

ஆடி அமாவாசைக்கு முதல் தினமும்,  அடுத்த தினமும் நடக்கும் திருவிழாவில் பெண்கள் எந்த நேரத்திலும் வந்து வழிபடலாம். ஆனால், ஆடி அமாவாசை அன்று இரவு மட்டும் பெண்கள் ஆலயம் பக்கம் வரவே கூடாது.

ஆடி அமாவாசை அன்று இரவு ஆலய பூசாரி ஒரு குட்டிப் பன்றியைப் பிடித்தவாறு ஊரில் வலம் வருவார். இவருடன் ஒரு சில பக்தர்களும் வருவார்கள். அப்படி இவர்கள் ஊரை வலம் வரும்போது ஊரில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு விடும். ஊரே இருள் மயமாக இருக்கும். ஊரைச் சுற்றி வலம் முடித்து, ஆலயம் வந்தபிறகு பன்றி பலியிடப்படும். அதைத் தொடர்ந்து ஆலயத்துக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள் அனைத்தும் பலியிடப்படும். விழாவில் கலந்து கொள்ளும் ஆண்கள் மட்டும் இவற்றை  சாப்பிடுவார்கள்.

இப்படி எல்லாம் கட்டுப்பாடாக இருந்து இந்தக் கோட்டைக் கருப்பண்ணசாமிக்கு அனைவரும் வியக்கும் வகையில் திருவிழா எடுக்கிறார்கள் ஊர்மக்கள்.

நன்றி : மங்கையர் மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com