மூங்கில் குருத்து (Bamboo shoots) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது, மூங்கில் தாவரத்தின் மேல் நுனியிலிருந்து வெளிவரும் மிகவும் மிருதுவான பாகம். அதில் அடங்கியிருக்கும் நம் உடலுக்கு நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். 'க்ரீன் கோல்ட்' என்றும் அழைக்கப்படும் இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது இதயத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது. இதிலுள்ள அதிக அளவிலான ஃபைடோஸ்டெரால்ஸ் மற்றும் ஃபைடோநியூட்ரியன்ட்ஸ் (Phytosterols & Phytonutrients) இதய நாளங்களில் உள்ள அடைப்பை நீக்கி சுத்தப்படுத்தவும், அங்கு படிந்துள்ள எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்றவும் உதவுகின்றன. இதை கொதி நீரில் போட்டு வேக வைத்து உண்ணலாம். நொதிக்கச் (ferment) செய்தும் சாப்பிடலாம். இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது இதை உண்ணுதல் நலம் தரும்.
இதிலுள்ள அதிகளவு வைட்டமின்களும் மினரல்களும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. குளிர் காலங்களில் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்துப் போராடி நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றன.
ஒரு கப் மூங்கில் குருத்தில் 13 கலோரிகளும் அரை கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளன. அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து இதில் உள்ளது. இவை உடல் எடை குறைப்பிற்கும் சீரான ஜீரணத்துக்கும் உதவுகின்றன.
பாம்பு, தேள் மற்ற விஷ ஜந்துக்கள் கடிக்கும்போது அவற்றின் விஷம் நம் உடம்புக்குள் ஏறிவிட்டால், மூங்கில் ஷூட் (shoot) ஜூஸ் அருந்த, விஷம் முறிந்துவிடும். கடித்த இடத்தில் ஜுஸை தடவ, விஷம் கழுவப்பட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது. இதையெல்லாம் மருத்துவரின் ஆலோசனை பெற்று அவர் மேற்பார்வையில் மட்டுமே செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இதிலுள்ள அதிகளவு வைட்டமின்களும் மற்ற கூட்டுப் பொருள்களும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. சைனீஸ் மருத்துவத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ நேரத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொஞ்சம் மூங்கில் குருத்து உணவை வழக்கமான உணவுடன் எடுத்துக்கொண்டால் பிரசவம் இயற்கை முறையில் நடக்கும் என நம்பப்படுகிறது. இதற்கும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
இதிலுள்ள இனுலின் (Inulin) என்னும் நார்ச்சத்தானது இரத்த சர்க்கரை அளவை குறைக்க வல்லது. இந்த உணவானது பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைத்தும் விற்கப்படுகிறது. இதை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம். இவ்வாறு பற்பல நன்மைகள் கொண்ட மூங்கில் குருத்தை நாமும் உண்டு நன்மை பெறுவோம்.