பெண்களே சமையலறையில் அதிக நேரம் நிற்க வேண்டாம்: மருத்துவர் எச்சரிக்கை!

Woman cook in kitchen
Woman cook in kitchenImg Credit: Freepik

கோடை வெயில் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்தே பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கி மே 28 ஆம் தேதி முடியவுள்ளது. இப்போதே வெயிலின் கொடுமையால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இப்படியான சூழலில் வெளியில் செல்வதற்கே பலரும் பயப்படுகின்றனர். இது கதிரவனுக்கான காலம் என்பதால், கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகமாகத் தான் இருக்கும்.

வெயில் காலங்களில் அதிக சிரமத்தை எதிர்கொள்ளும் வயதானவர்கள் முற்றிலும் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நலம். மேலும், சமையலறையில் அதிக நேரத்தை செலவிடும் பெண்களும் வெயிலின் தாக்கத்தை அதிகளவு எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

காலை முதல் இரவு வரை சமையலறையில் சமைக்கும் பெண்கள், வியர்வை குறையும் வகையில் அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டும் என மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவின் துறைத் தலைவர் கீதாஞ்சலி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கோடையில் அதிக வெப்பத்தினால் உடலில் சோடியம் அயனி குறைவு, நீர்ச்சத்துக் குறைவு, இதய அடைப்பு, மூளை செயலிழப்புத் திறனால் குழப்பம் போன்றவை ஏற்படலாம். சில பெண்களுக்கு மயக்கம் மற்றும் படபடப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கோடை வெப்பத்தால் உடல் அதிகளவில் சோர்வடைவதை படபடப்பு, மன அழுத்தம் மற்றும் செய்யும் வேலையில் கவனமின்மை போன்ற அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இச்சமயங்களில் உடலை கவனிக்க வேண்டியது அவசியமாகும். அதிகமான வெயிலில், வெப்பம் நிறைந்த அறையில் அமர்ந்திருந்தோமா மற்றும் கடைசியாக எப்போது சிறுநீர் கழித்தோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

வேலை செய்யும்போது அடிக்கடி உடலுக்கு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும். இதற்கு எலுமிச்சை பானம் அல்லது உப்பு நிறைந்த மோர் அல்லது இளநீரை உடனடியாகப் பருக வேண்டும். குளிர்ந்த தண்ணீர் மற்றும் செயற்கை குளிர்பானங்களை கண்டிப்பாக குடிக்கக் கூடாது.

அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். உடலின் வெப்பநிலையில் திடீரென வெப்பம் மற்றும் குளிர்ச்சி என மாறும் வகையில் உடலை வருத்திக் கொள்ளக்கூடாது.

இதையும் படியுங்கள்:
தீமையை நன்மையாக்கிய இந்தியன்! என்ன நன்மை? யார் இவர்?
Woman cook in kitchen

உடல் சோர்வினால் உண்டாகும் உடல் அழுத்த பிரச்சினைகளை கவனிக்காமல் விட்டால் பிரச்சினை பெரியதாகி விடும். ஆகவே, அவ்வப்போது உடலுக்குத் தேவையான ஓய்வை பெண்கள் கொடுக்க வேண்டியது அவசியம்.

மதிய நேரங்களில் வெளியில் செல்வதையும், பயணம் மேற்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சமையலறை மிகவும் காற்றோட்டமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அங்குள்ள வெப்பத்தை எளிதில் வெளியேற்றும் வகையில் 'சிம்னி' அல்லது 'எக்ஸாஸ்ட் பேன்’ இருக்க வேண்டும்.

தொடர்ந்து அதிக நேரம் சமையல் வேலையில் ஈடுபட்டால் அதிக வியர்வை வழிந்து படபடப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க அவ்வப்போது வெளியில் வந்து காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com