நெசவுக்கு நியாயம் செய்வோம்! (மனசுக்குள் அழுத அனுபவம்)

weaving
weaving
Published on

திருமண நாளை புத்தாடை வாங்கி, உடுத்திக் கொண்டாடும் சம்பிரதாயத்தை நானும் என் மனைவியும் வருடந்தோறும் அனுசரிப்பது வழக்கம். பொதுவாகவே என் வீட்டருகிலோ அல்லது எங்கேனும் போக வேண்டியிருந்தால் அந்தப் பகுதியிலோ இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு துணிக்கடையில் அவ்வாறு துணியோ, ஆடையோ வாங்குவோம். இந்த முறை நெசவாளர்களின் இந்தக் கூட்டுறவு அங்காடியில் வாங்கினால் என்ன என்று தோன்றியது. அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனையகம் என்று ஒரு கடையைப் பார்த்தேன்.

நெசவாளர்கள் தமது கரங்களால் நூலிழைகளை வருடி, வருடி நெய்யும் ஆடை என்பதால் இந்த ஆடைக்குள் நெசவாளரின் ஆத்மார்த்தமான உழைப்பு, அவருடைய வாழ்வாதாரம், ஆண்டாண்டு காலமாக டடக், டடக் என்று ஒலியெழுப்பி நூல்களைக் கோத்து ஆடையாக உருவாக்கித் தரும் தறிக்குத் தரும் மரியாதை என்று உணர்வு பூர்வமான ஆர்வம் என்னுள் எழுந்ததே இந்த யோசனைக்குக் காரணங்கள்.

எனக்கு சட்டை - வேட்டி, என் மனைவிக்கு புடவை என்று வாங்கிக்கொண்டோம். (ஆடி மாதமாக இல்லாவிட்டாலும் அதிகபட்ச விலையில் தள்ளுபடி சலுகையும் கிடைத்தது!)

வீட்டிற்கு வந்த பிறகு மனைவியின் புடவையிலிருந்து விலைப் பட்டியைப் பிரித்தபோது கூடவே ஒரு சிறு அட்டையும் பட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதில், ஆங்கிலத்திலும், தமிழிலுமாக அந்தப் புடவையைப் பற்றிய சிறு குறிப்பு அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டோம்:

‘அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள்.

அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் சுத்தமான பருத்தி நூலைக் கொண்டு சீர்கரை மற்றும் உடல் பகுதி புட்டா வடிவமைப்பில் பாரம்பரிய வண்ணங்களால் சாதாரண தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சேலைகள் சீர்முந்தி மற்றும் புட்டாவுடன் கலந்து நெசவு செய்யப்படுகின்றன. இச்சேலைகள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கைதேர்ந்த கைத்தறி நெசவாளர்களால் 60% கோம்புடு பருத்தி நூல் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.’’

தற்செயலாக அந்த அட்டையின் பின் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தபோது நாங்கள் அப்படியே அசந்துவிட்டோம். அது தந்த தகவல் (ஆங்கிலத்திலும், தமிழிலும்) இதுதான்:

தறியில் நெசவு செய்யும் ஒருவருடைய புகைப்படம் அச்சிடப்பட்டு, அதற்குக் கீழே இந்தக் குறிப்புகள் இருந்தன:

‘‘நெசவாளரின் பெயர்: திரு ஜி. நாராயணன். ஊர்: அருப்புக்கோட்டை. வயது: 61

மேற்காணும் கைத்தறி நெசவுக் கலைஞன் 5.50 மீட்டர் நீளமுள்ள இச்சேலையை உற்பத்தி செய்ய 15,500 முறை கைகளையும், கால்களையும் ஒருசேர அசைத்து நெய்ய வேண்டியுள்ளது. இந்த சேலையை நெய்வதற்கு 2 நாட்கள் ஆகின்றது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நெசவாளர் தன் முகத்தில் புன்னகையை மீண்டும் வரவழைத்ததற்கு உங்களுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்!’’

இதையும் படியுங்கள்:
எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்பட்டால்... ?
weaving

என்ன ஒரு அங்கீகாரம்! ‘யாரோ விற்பனை செய்கிறார்கள், யாரோ வாங்குகிறார்கள், யாருக்கோ விற்பனை லாபத்தில் பங்கு போகிறது. ஆனால் இதற்கெல்லாம் ஆதாரமான நெய்பவர் யார்?’ என்ற இயல்பான கேள்விக்கு அரசு நிறுவனமான கோஆப்டெக்ஸ்தான் எத்தனை ஆக்கபூர்வமாக பதிலளிக்கிறது!

இதே போல தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கோஆப்டெக்ஸ் கடையிலும், ஒவ்வொரு நெசவுப் புடவைக்கும், அதைத் தயாரித்தவரைப் பற்றிய மற்றும் அந்தப் புடவை பற்றிய சிறு குறிப்பை இணைத்துதான் விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது, என் வியப்பு எல்லை மீறியது. நேரடியாக சந்தித்திராத அந்த நெசவாளர்களை உளமாற வணங்கினேன்; அவர்களது வாழ்க்கை மேன்மையடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்.

அதுமட்டுமல்ல, இனி புத்தாடை என்று வாங்குவதானால் இதுபோன்ற நெசவாளர்கள் கூட்டுறவு கடைகளில்தான் வாங்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டேன். என் போக்குவரத்துக்கு வசதியாக எந்தக் கூட்டுறவுக் கடை அமைகிறதோ அங்குபோய் வாங்குவதை வழக்கமாகக் கொண்டேன்.

இந்த வருடம் வேறு ஏதோ வேலையாக புரசைவாக்கம் சென்றிருந்த நான் அதே எண்ணத்துடன் அந்த நெசவாளர் கூட்டுறவு சங்கக் கடையைத் தேடிப் பார்த்தேன், தேடித்தேடிப் பார்த்தேன். காணக் கிடைக்காமல் மனம் நொந்தேன். விசாரித்ததில் அந்தக் கடையில் வியாபாரம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் கடை மூடப்பட்டதாக அறிந்தேன்.

அப்படியே மனசுக்குள் அழுதேன். அந்தக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புடவைகளைத் தயாரித்த நெசவாளர்களுக்கு மானசீகமாக வந்தனம் தெரிவித்துவிட்டு, எழும்பூரிலுள்ள கூட்டுறவுக் கடைக்குச் சென்று புத்தாடை வாங்கி வந்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com