வயோதிகம் வரவேற்கிறது...
மனதின் வயோதிகம் வெளியே தெரியாமல்,
ஒப்பனை உதவியுடன்
எதையும் செய்யும் புத்துணர்வு, புது வரவாய்
மனம் முழுதும் இருப்பினும்,
தைரியம் தொலைந்ததே நிஜம், நிதர்சனம்.
'பாா்வதி கொல்லைப்பக்கம் பாா்த்துப்போ,
பாசி வழுக்கும்...' பாசமே நிலைக்கிறது!
'நின்று கொண்டே சமையல் செய்யாதே,
கால்கள் வலிக்கும் அயோடக்ஸ் போடு!'
'முகம் தெளிவில்லையே?
உடல் சுகவீனமா?' - கேட்காத நபர்கள் குறைவே!
'சூடாகவே சமையல் செய், சீரகமும் சுட்ட அப்பளமும் போதுமே!'
குளிக்க வெந்நீா், தலை துவட்டிவிட பாாியாள்... சுகமே தனிதான்!
குடிக்கவோ ஒமம், சீரகம், துளசிஇலை, வெந்நீா்தான் ஆரம்பம் முதலே!
'என்னங்க! தோள்பட்டையில வலி.. மருந்து போட்டு விடறேளா?'
'சரி சரி வா உட்காா் மருந்தெங்கே?'
'ருமில் இருக்கு!'
'ஓகே ஓகே மெதுவாப்போய் கொண்டுவா... கூடவே
வாசல்கதவை சாத்து மருந்து போடுவதை யாராவது பாா்த்தால் கண்ணுபடுமே'
'பரவாயில்ல உப்பு மிளகாய் சுத்திப்போட்டிடுவேன் கவல வேண்டாம்!'
'எம்பி கையைத்தூக்கி பேன் ஸ்விட்ச் பேடாதே, சுளுக்கு வந்தால் சுகவீனம்தான்.'
'சரி படுகுறியா போா்வை போத்திவிடறேன்!'
பாா்த்து நட, பொறுமையாப் போ, நிதானமா ஸ்விட்சைப்போடு, உட்காா்ந்தபடியே சமையல் செய், மாத்திரை போட்டுண்டாயா, கால் வலின்னு சொன்னியே, டைகர் பாம் போட்டு விடவா ? தன்கையே தனக்குதவி என யாரையும் எதிா்பாரா இளமைத் தருணங்கள் தேடலாயிற்றே!!
'வேலக்காாி தேச்சு வச்ச பாத்திரத்தை நீ ஏன் மறுபடியும் அலம்பர? வயசாயிடுச்சு தொியுமா?'
'ஆமா எனக்குத்தான் வயசாச்சு, ஆச்சாரத்துக்கு இல்லே!'
'உன்னை திருத்தவே முடியாது! பொலம்பிப் பயனில்லை.'
'ஆமா... ஒரமோா் ஊத்தினியா? மறதி வேண்டாம்!'
'நடுநிசில எழுந்துண்டு தனியா பாத்ரூம் போவேண்டாம்!'
'நான் தொணைக்கு வரேன், எனக்கு தூக்கம் கெடும்னு நெனைக்கவேண்டாம்!'
'பாசப்பிணைப்பா? பொண்டாட்டிய கலாய்ச்சுட்டாராம் வெள்ளை மீசை!! ஆமா ஆமா இதே வியாக்கியானம் தான் ஒனக்கும் பொருந்தும்!'
கனவு வந்து போனது...
முப்பது வயதில்... தங்கை திருமண வீட்டில் சகலபாடிகள் சீட்டுக்கச்சோியில் திளைத்திட...
அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணா, மன்னி... இவர்களைப்பாா்த்த சந்தோஷம் பரிபூரணமாய் இருந்திட...
வெளியே போகும்போது லேசாய் என் கால் என்னவர் மீது தொியாமல் பட... அவ்வளவுதான்...
'எருமை, தரித்திரம், சனியன்... கண்ணில்ல? பாத்து போக முடியாதா?...
கோபம் அனலாய் தகித்ததே!!
அதே மனது பக்குவமாய்,
'கால் வழுக்கிடபோகிறது! பாா்த்துப்போ பாத்துப்போ' என்கிறதே?
காலச்சக்கரம் உருண்டோடிவிட்டது.....
எப்படி எல்லாம் மாறியது? எங்கிருந்து வந்தது இந்த அன்பு? ஏதோ நினைவுகள் காத்தாடி போல !
அது வசந்தகால பாசம்! இது வயோதிக அன்பின் நேசம்!