ரயில் பயணமும் வாழ்க்கைப் பயணமும் - வாரியார் சுவாமிகளின் விளக்கம்!

Kirupanandha Variyar
Kirupanandha Variyar
Published on

வாரியார் சுவாமிகள் பயணம் செய்து கொண்டிருந்த ரயில், அந்த ஊர் பெரிது என்பதால், ஸ்டேஷனில் அதிக நேரம் நின்றது! ரயிலில் இருந்தவர்கள் மற்றும் பிளாட்பாரத்தில் நின்றவர்களும் சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற முண்டியடித்தார்கள்! ஒரு வழியாக ரயில் கிளம்பியதும் கூட்டம் குறைய, அந்தப் பெட்டியில் அப்பொழுதுதான் ஏறிய அந்தத் தனவந்தரும், அவர் மனைவியும் சுவாமிகளை வணங்கி அமர்ந்தார்கள்! தனவந்தர், உள்ளூர்க் கோயில் தர்மகர்த்தா என்பதால் சுவாமிகளை ஏற்கெனவே நன்கறிவார்!

தனவந்தரும் அவர் மனைவியும் சோர்ந்து காணப்பட்டதை உணர்ந்த சுவாமிகள், "என்ன? ஏதோ கலக்கத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது! ஏதாவது பிரச்னையா?" என்று கேட்டதுதான் தாமதம்! தனவந்தரின் மனைவி கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்! தனவந்தர் உணர்ச்சிகளை அடக்கியபடி மெல்ல விஷயத்தைக் கூறினார்!

இதையும் படியுங்கள்:
சிங்கத்தின் பிடரிமயிரும் பெரியவரின் மாந்தரீகமும் - (ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதை)!
Kirupanandha Variyar

"நாலாவது பையனுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்தே வீட்ல ஒண்ணு மாறி ஒண்ணு ஏதாவது பிரச்னை சாமி! உறவினர்கள் வீடுகள்ல சில திடீர்ச் சாவுகள்! வந்த மருமகளாலதான் எல்லாம்னு இவ ஒரே பிடிவாதமா அவளையிழுத்துக்கிட்டு வந்து அவங்க வீட்ல விட்டுட்டா! இப்ப... பையனுக்கிட்ட என்ன சொல்லி எப்படிச் சமாளிக்கிறதுன்னு வருத்தப்படறா! ஒரே பிரச்னையா இருக்கு! ஊர்ல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்களேங்கற பயம் வேற!" என்று அவர் ஆதங்கப்பட்டார்!

சுவாமிகள் உடனே தனது பயணச்சீட்டை எடுத்தார்! "இதோ பாத்தீங்களா? இது என்னோட பயணச்சீட்டு! எங்க ஏறினேன் எங்க எறங்கணும்னு தெளிவாப் போட்டிருக்கு! இப்ப நடுவுல.. தெரிஞ்சவங்க நீங்க வந்துட்டீங்க! அதுக்காக என்னோட பயணச் சீட்டு மாறுமா? அதே போலத்தான் ஒங்க பயணச் சீட்டும்! நீங்க ஏறின இடமும் இறங்க வேண்டிய இடமும் தெளிவா அதில இருக்கு! வாழ்க்கையும் இது மாதிரிதாம்மா! நாம பிறந்தப்பவே நம்ம இறப்பும் நிர்ணயிக்கப் பட்டிடுச்சு! இப்ப, நடுவில நீங்க வந்து ஏறின மாதிரித்தான், உங்க மருமகளும்! நடந்த சாவுகளுக்கும், பிற நிகழ்வுகளுக்கும் அவங்க காரணம் இல்லம்மா! எல்லாம் அவங்கவங்க விதிப்படித்தான் நடக்கும்! நீங்க தப்பு செஞ்சிட்டீங்க!" என்று சுவாமிகள் விளக்கவும், அந்தம்மா மேலும் தேம்பினார்!

தங்கள் அகக் கண்ணைத் திறந்த சுவாமிகளுக்கு நன்றி கூறி விட்டு, அடுத்த ஸ்டேஷனிலேயே அந்தத் தம்பதியினர் இறங்கி விட்டனர்... மருமகளை அழைத்துக் கொண்டு வர!

வாரியார் சுவாமிகளின் பயணம் தொடர்ந்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com