
ஆஃப்ரிக்காவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஓர் இளம் தம்பதியர் வசித்து வந்தனர். அந்தக் கணவனுக்கு மனைவியை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எனவே, அவன் பணி முடிந்து வீடு திரும்பும்போது மிகவும் தாமதமாகவே வருவான். மனைவியுடன் அவன் மகிழ்ச்சியாக இருப்பதோ, பேசுவதோ கிடையாது.
மற்றபடி அவன் மிகவும் நல்ல மனிதன். எனவே, அவனது மனைவி அவனை மிகவும் விரும்பினாள். தனது கணவன் தன்னுடன் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக அவள் தனது பிறந்த கிராமத்துப் பெரியவரைக் காணச் சென்றாள்.
அவர் அவளது பிரச்சனையைப் பொறுமையோடு கேட்டு அறிந்துகொண்டார்.
“உங்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள்தானே ஆயிற்று! நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்... ஆனால், இப்போது நீ கூறுவதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்ற அவர், “சரி, என்ன செய்யலாம் என்று நீயே சொல். உனக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யட்டுமா?”
“இல்லை, என்னுடைய கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடன் வாழ விரும்புகிறேன். நீங்கள் அதற்கு வேண்டியதைச் செய்தால் போதும். என் கணவர் என்னுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதேனும் வசிய மருந்து செய்து தாருங்கள்.”
அந்தப் பெரியவர் மாந்தரீகம் செய்யக்கூடியவர். எனவே, அவர் வசியத் தைலம் செய்து தருவதற்கு சம்மதித்தார்.
“ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வசியத் தைலம் தயாரிப்பதற்கு அடிப்படையான ஒரு மூலப் பொருள் என்னிடம் இல்லை. இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டதால் அதை என்னால் தேடிக் கொண்டு வரவும் இயலாது. அந்தப் பொருள் இருந்தால்தான் வசிய மருந்து செய்ய இயலும்.”
“அது என்ன பொருள் என்று சொல்லுங்கள். நான் அதை வாங்கி வருகிறேன்.”
“அது அப்படி கிடைக்கக் கூடியது அல்ல. நாம்தான் அதை எடுத்து வர வேண்டியிருக்கும்.”
“சரி, நானே எடுத்து வருகிறேன். என்ன பொருள் அது?”
“உயிருள்ள சிங்கத்தின் பிடரி மயிர்.”
அதைக் கேட்டதும் அந்தப் பெண் ஒரு கணம் ஆடிப் போனாள்!
இருந்தாலும் அவள் தளரவில்லை.
“சரி, நான் அதை எப்படியாவது கொண்டு வந்து தருகிறேன்” என்றுவிட்டு கிளம்பினாள்.
அவள் வாழ்க்கைப்பட்டிருந்த ஊருக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதியில் சிங்கம் ஒன்று நடமாடிக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். தினமும் அது ஆற்றில் தண்ணீர் குடிக்க அந்த இடத்திற்கு வரும். எனவே, அவள் மாமிசத் துண்டுகளை எடுத்துக்கொண்டு சிங்கம் வரக்கூடிய இடத்தில் மறைந்திருந்து காத்திருந்தாள். பல மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அவள் தூரத்தில் மறைந்திருந்து மாமிசத் துண்டுகளை வீசினாள். சிங்கம் அதைக் கவ்வித் தின்றுவிட்டு சென்றுவிட்டது.
தினமும் அதே போலச் சென்று சிங்கத்திற்கு மாமிசத் துண்டுகளை வீசினாள். ஓரிரு தினங்களுக்குப் பிறகு லேசாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். சிங்கமும் தூரத்திலிருந்து அவளைப் பார்த்தது. ஆனால், தினமும் தனக்கு மாமிசம் போடுவது அவள்தான் என்பதை உணர்ந்துகொண்ட அது, அவளை எதுவும் செய்யாமல் மாமிசத் துண்டுகளை சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
அடுத்தடுத்த நாட்களில் அவள் முழுமையாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு, ஒரு சில தப்படிகள் முன்னே வந்து சிங்கத்துக்கு மாமிசத் துண்டுகளைப் போடத் தொடங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக சிங்கத்துக்கும் அவளுக்குமான இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வந்தாள்.
சுமார் இருபது தினங்கள் ஆகியிருக்கும்போது அவள் சிங்கத்துக்கு அருகேயே சென்று மாமிசத்தைக் கொடுக்கிற அளவுக்கு நெருங்கிவிட்டாள். சிங்கமும் அவளோடு சகஜமாகப் பழகியது.
ஒரு மாதம் ஆகியிருந்த சமயத்தில் அவள் சிங்கத்தின் உடலைத் தொடவும் தைரியம் அடைந்துவிட்டாள். ஒரு நாள் சிங்கத்துக்கு மாமிசத் துண்டுகளைப் போட்டு விட்டு - சற்றே நடுக்கத்தோடு எனினும் - வேண்டிய அளவு பிடரிமயிர்க் கற்றையை வெட்டி எடுத்துக்கொண்டாள். சிங்கம் மாமிசத் துண்டைத் தின்றுவிட்டு வழக்கம் போல சென்றுவிட்டது.
அவள் தனது பிறந்த கிராமத்திற்கு வந்து மாந்தரீகரிடம் சிங்கத்தின் பிடரி மயிரைக் கொடுத்தாள். அதைக் கண்டு பேராச்சரியப்பட்ட அவர், “இது எப்படி உனக்குக் கிடைத்தது?” என்று கேட்டார். அவள் விவரம் தெரிவித்தாள்.
“பெரும் துணிச்சலோடு அசகாய சூரத்தனம் செய்துவிட்டாய்!” என்று அவர் பாராட்டினார்.
“சரி, எனக்கு அந்த வசியத் தைலத்தை உடனே செய்து கொடுங்கள்.”
“இனி உனக்கு வசியத் தைலம் தேவையில்லை. ஆனானப்பட்ட சிங்கத்திடமே நெருங்கிப் பழகி, அதன் பிடரி மயிரை எடுத்து வந்து விட்டாய். உனக்கு எதற்கு இனி வசியத் தைலம்? உன்னுடைய கணவனிடம் இதே போல நெருங்கிப் பழகு. அவனுடைய பிரச்சனை என்ன என்பதைக் கேட்டு அறிந்து கொள். ஆறுதலாகவும் அன்போடும் அவனோடு பேசு. அவன் மேல் உனக்கு இருக்கும் அன்பை அவனுக்குக் காட்டு. அப்போது அவனும் அந்த சிங்கத்தைப் போல மெல்ல மெல்ல மாறி, உன்னிடம் அன்பாகிவிடுவான்” என்று கூறி அவளை வழியனுப்பி வைத்தார்.
அவளும் அவர் சொன்னவாறே தனது கணவனிடம் நடந்து கொண்டாள். அவன் அவளது பேச்சைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தான். அவனது பிரச்சினைகளைக் கூறவும், அவளோடு கலந்து பேசவும் தொடங்கவே, அவள் அவனுக்கு ஆறுதலும் ஆலோசனைகளும் வழங்கினாள். அதிலிருந்து அவன் வேலை முடிந்ததும் எல்லோரையும் போல நேரத்தோடே வீட்டுக்கு வரலானான். மேலும், சில நாட்களிலேயே அவளை ஏறெடுத்துப் பார்க்கவும் இயல்பாகப் பேசவும் தொடங்கினான். ஓரிரு வாரங்களிலேயே அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக ஆயிற்று.