
-ஜெயலக்ஷ்மி கோபாலன், சென்னை
அது விநோதமான ஒரு மாயக்கண்ணாடி. பெரியவருக்கு அது பொக்கிஷமாகவே இருந்தது. அதில் அப்படி என்ன விசேஷம்! அக்கண்ணாடியை எந்தப் பக்கத்தில் திருப்பினாலும், அத்திசையில் நிகழும் காட்சியை அது அவருக்குக் காட்டிவிடும். அதாவது திரையில் காட்டப்படும் காட்சிபோல் அவரால் காணமுடியும்!
ஒருமுறை பெரியவர் கண்ணாடியை வறண்ட பாலைவனம் இருக்கும் திசைக்குத் திருப்பினார். அங்கே ஒரு முதியவர், இறைவனிடம், "கடவுளே! எங்களுக்கு மழையை அளியுங்கள். வறட்சியில் வாடி வதங்குகிறோம். கருணை காட்டுங்கள்" என்று பிரார்த்தித்தார்.
மற்றொரு திசையில் கண்டதோ, ஒரு விவசாயியின் விளை நிலம். அங்கே அவன் நிலத்தில் இருந்த கடலைப் பயிரைப் பார்த்தபடி, "சாமி! நல்ல விளைச்சலைத் தா, விளையும் நிலக்கடலைக்கு மிக அதிக கொள்விலை கிடைக்கவும் அருள்புரி" என விண்ணை நோக்கி இறைவனிடம் யாசித்தான்.
பெரியவர், மூன்றாவது திசையை நோக்கி கண்ணாடியைத் திருப்பினார். அங்கே அவர் கண்டது ஒரு கொள்ளைக்காரனின் பயங்கரத் தோற்றம், "எல்லோரும் சொத்து சேர்த்து மகிழ்கிறார்கள். இறைவா! நீ எனக்கு என்ன தந்தாய்? ஒரு காரியம் செய்! சீமான்களிடத்திலுள்ள பொருள்களை நான் கொள்ளையடிக்கப் போகிறேன். யாரிடமும் நான் மாட்டிக்கொள்ளாமல் விலையுயர்ந்த பொருள்கள் எனக்குக் கிடைக்குமாறு வழி செய்யுங்கள்."
என்ன இது! எல்லாப் பிரார்த்தனைகளும் ஏதோ பறவை வடிவிலோ, வண்ணக் கலவையாகவோ விண்ணை நோக்கிச் செல்கின்றனவே. பிரார்த்தனை எதுவானாலும் இறைவனைச் சென்றடையுமோ?
அட! அந்தத் தாய் யாரைத் தேடிச்செல்கிறாள்? பையன்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனைத் தேடி விரைகிறாள். "ஏ! அப்துல்! எங்கே போய் விட்டாய்! பிரார்த்தனை நேரம் வந்துவிட்டது! இதை மறந்துவிட்டு என்ன விளையாட்டு? வா சீக்கிரம்! பிறகு விளையாடலாம்" என்று மகனை அழைக்கிறாள்.
பெரியவருக்கு பரபரப்பு. தாயுள்ளம் இறைவனிடம் எதை வேண்டப் போகிறது? முரண்டு பண்ணிக்கொண்டு வேண்டா வெறுப்பாக, விளையாட்டில் லயித்திருந்த சிறுவனோ, அம்மாவின் அரவணைப்பில் சிறிது கட்டுப்பட்டான்.
அன்னை, தன் மகனை அருகில் அமர்த்தி, அவன் கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து, இந்தப் பிரார்த்தனையைக் கூறினாள்.
''ஹே! பிரபோ! நீ பரம கருணாமூர்த்தி! உன்னால்தான் எங்களுக்கு உண்பதற்கு அரிசியும், சுவையான பழங்களும் கிடைக்கின்றன. எங்களை மகிழ்விக்க நறுமண மலர்களையும் அல்லவா அளித்துள்ளாய். பறவைகள்தான் என்ன இசை பாடுகின்றன! இறைவா! இதுவே எங்களுக்குப் போதும்."
இந்தப் பிரார்த்தனையை அவர் சொல்லச் சொல்ல மீண்டும் திரும்பக் கூறினான் குழந்தை. பிரார்த்தனை முடிந்ததும், "அம்மா! இதற்கா என்னை அழைத்தாய்? பைசா பிரயோஜனமில்லாத பிரார்த்தனை” என்று கூறிவிட்டு, விளையாடுவதற்கு விரைந்து ஓடினான்.
அப்போது அன்னையும் மகனும் அமர்ந்து பிரார்த்தித்த இடத்திலிருந்து ஒரு புறா, விண்ணை நோக்கிச் சென்றது. இறைவனிடம் சென்று சிறுவனின் பிரார்த்தனையை மீண்டும் ஒப்புவித்ததோ!
ஆஹா! இது என்ன, எங்கும் மகிழ்ச்சியும் குதூகலமும். இறைவன் கண் திறந்து பார்த்து விட்டாரா? புத்தொளி ஒன்று இந்த நானிலம் முழுவதும் வந்து இறங்கியுள்ளதே.
வெறும் காற்றுக்கே விலை பேசும் இந்த உலகில், எப்படி எதைப் பிரார்த்திப்பது என்று சொல்லித்தர இதுபோன்ற ஓர் அன்னையால்தான் முடியும்!
கேளாமல் வழங்கும் கருணையாளன் இறைவன் என்பதை உணர்த்திய அன்னையே! உனக்கு, மீண்டும் மீண்டும் வணக்கங்கள்!
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் மே 2010, இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்