“பலே பாட்டி!”

Lifestyle articles
ஓவியம்; சேகர்
Published on

-பத்மா, பெங்களூரு

ங்களது குடும்ப நண்பர் ராம சுப்பிரமணியனின் பெண்ணுக்கு (காதல்) திருமணம். பிள்ளை வீட்டார் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். "உங்களது வழக்கப்படியே திருமணத்தை நடத்துங்கள். நாங்களும் என்ஜாய் பண்ணுகிறோம்" என்று சொல்லிவிட்டார்கள்.

அதிகாலை முகூர்த்தம். காலை நான்கு மணிக்கே புரோகிதர், மஞ்சள் சரடில் கோக்க திருமாங்கல்யத்தைக் கேட்க, ராமசுப்புவின் மனைவி கமலா, தாங்கள் தங்கியிருந்த அறைக்கு ஓடினாள். மீண்டும் புரோகிதர், ராமசுப்புவை விரட்ட, அறைக்கு வந்து பார்த்தால் கமலா, கண்ணீர் வழிய கையைப் பிசைந்துகொண்டு திருமாங்கல்யத்தைக் காணவில்லை என்று ராமசுப்புவின் காதில் கிசுகிசுத்தாள்.

அறையைத் தலைகீழாக்கியதுதான் மிச்சம் திருமாங்கல்யம் கிடைக்கவில்லை. சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கும் ராமசுப்புவுக்கு இது பெரிய அபசகுனமாகப்பட்டது. "என்னடா ராமசுப்பு நீயும் கமலாவும் ஒரு மணி நேரமா எதைத் தேடறீங்க?" என்று ராமசுப்புவின் அம்மா, கேட்டாள்.

அவ்வளவுதான். துக்கம் நெஞ்சை அடைக்க, அம்மாவின் இடது காதில் - (வலது காது டமாரச் செவிடு) விஷயத்தைச் சொன்னதும்,

'நீங்க எல்லாம் பெரிய்...ய படிப்பு படிச்சு ஒரு பயனும் இல்லை. பிரச்னைன்னு வந்தா சமாளிக்க வழி தேடாம துவண்டு போயிருவீங்க. இந்தா இதை வெச்சு நிலைமையைச் சமாளி " என்று பதினைந்து நாட்களுக்கு முன்பு நடந்த சதாபிஷேகத்தின்போது அணிந்துகொண்ட பளபளக்கும் இரண்டு மங்கள சூத்திரங்களை தன் கழுத்திலிருந்து கழற்றிக் கொடுத்தாள். குறிப்பிட்ட முகூர்த்தத்தில், ஜாம் ஜும் என்று திருமணம் நடந்து முடிந்தது."

மதியம் விருந்து முடிந்து ஓய்வாக இருந்த சமயத்தில், மாப்பிள்ளையின் அம்மா வந்தார். "என்ன ராமசுப்பு... உங்க பக்க கல்யாணத்தில், பிள்ளையின் கையால் பெண்ணின் கழுத்தில் அணிவிக்கப்படவேண்டிய மிக முக்கிய ஐட்டம் என்று நேற்று என்னிடம் விளக்கம் சொல்லிக் காண்பித்தீர்கள். ஆனால் என் மகன், வேறொன்றை பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டான். இதை மறுபடியும் பெண் எப்போது அணிந்துகொள்வாள்?" என்று தன் கையிலிருந்த திருமாங்கல்யத்தைக் காட்டி படு யதார்த்தமாகக் கேட்டார்.

சம்பந்தியிடம் திருமாங்கல்யத்தைக் காட்டியதும் வேலை மும்முரத்தில் திரும்பப் பெற்றுக் கொள்ளாததும் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நிலைமையை எப் படிச் சமாளிக்கப் போகிறோம் என்று ராமசுப்பு தவிக்க, சுற்றி நின்ற கூட்டம், விஷயம் என்னவென்று புரியாமல் விழித்தது. ராமசுப்புவின் அம்மா, சம்பந்தி முன்பு வந்து நின்றார்.

"எங்கக் குடும்ப வழக்கப்படி முதலில் ஆகிவந்த திருமாங்கல்யத்தைத்தான் முதலில் கட்டுவோம். பிறகு நல்ல நேரம் பார்த்து வயதான சுமங்கலி, புதியதாக வாங்கிய திருமாங்கல்யத்தைப் பெண்ணுக்கு அணிவிப்பார். இதோ இப்போ மிக நல்ல நேரம். இப்போதே மாற்றிக் கட்டிவிடுகிறேன்."

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு...
Lifestyle articles

ராமசுப்புவின் நண்பர், நன்றாக ஹிந்தி பேசத் தெரிந்தவர். அவர், பாட்டி சொன்னதை சரியாக மொழிபெயர்க்க, சம்பந்தி அம்மாவும் சந்தோஷமாகக் கைதட்டி வாழ்த்தினார். கல்யாண பார்ட்டி ஊருக்குப் போனபிறகு விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ராமசுப்பு உட்பட மற்ற இளவட்டங்கள் ஒன்று சேர்ந்து 'க்ரைசிஸ் மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட்' என்ற பட்டம் சூட்டி, பாட்டிக்கு மலர்க்கிரீடம் அணிவித்து கௌரவித்தது.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் பிப்ரவரி 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com