
ஓர் ஆண் பெண்ணின் உடல் அழகை கண்டு காதலிப்பது இயற்கை. ஆனால் பெண் ஒரு ஆணின் விவேகம், நகைச்சுவை உணர்வு அவன் தரும் பாதுகாப்பு, அக்கறை ஆகியவற்றில் மயங்கிக் காதலிப்பாள். அறிவை மட்டும் வியந்து காதலிப்போரை சேப்பியன் ஃபிலே என்பர். இவர்களுக்குள் வேறு எவ்வித பொருத்தமும் இல்லாமல் போகலாம். இது விதிவிலக்கு.
காதல் தோன்றும் சூழ்நிலைகள்
காதல் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் குறித்து பழந்தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன. முதன் முதலில் காதலின் இலக்கணத்தை எடுத்துக் கூறிய தொல்காப்பியத்தைத் தொடர்ந்து வந்த நம்பியகப்பொருள் என்ற நூல் காதல் தோன்றும் சூழ்நிலைகளை மூன்றாக வகைப்படுத்தி உள்ளது.
'பூவே புனலே களிறே என்று இவை ஏதுவாக தலைப்பாடு இயம்பும்' (177)
(தலைப்பாடு என்றால் சந்திப்பு)
இதனை பூத்தரு புணர்ச்சி, புனல் தரும் புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பர்.
பூத்தரு புணர்ச்சி
ஒரு பெண் தான் ஆசைப்படும் ஒரு பொருளை அடைய முடியாமல் தவிக்கும் போது அதனை ஒருவன் பெற்றுத் தந்தால் அவளுக்கு அவன் மீது காதல் தோன்றும். கன்னிப் பெண்கள் கூந்தலில் பூச் சூட அனுமதிக்காத காலம் அது. அவளுக்கு விருப்பமான பூவை ஓர் ஆண் பறித்துத் தந்து அவள் காதலை பெறுவான். பூக்களை அவள் தலையில் சூடுவான். பூக்களையும் தழையையும் கட்டி கையுறையாக (பரிசாக) வழங்குவான்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே ஆனந்த கும்மி கொட்டுங்களேன் என்ற பாடல் காட்சி வரை பூக்கள் காதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எம்ஜிஆர் நடித்த அன்பே வா படத்திலும் பூ தரு புணர்ச்சி தெளிவாக இடம்பெற்றது.
பூ வைத்தல்
காதலன் திருமணம் பேச வரும்போது பூ வைத்தல் என்ற சடங்கு நிகழும். அன்று முதல் அவள் தலையில் பூச்சூடுவாள். அவன் இறந்ததும் அந்தப் பூ களையப்படும். இதுவே பூத்தரு புணர்ச்சியின் சிறப்பாகும்.
புனல் தரு புணர்ச்சி
ஒரு பெண் வீட்டிலோ வெளியிலோ ஏதேனும் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் போது அவளைக் காப்பாற்றுகின்றவன் மீது அவளுக்குக் காதல் தோன்றும். பழந்தமிழ் இலக்கியத்தில் குறிஞ்சி நிலத்தில் மலையருவி அல்லது காட்டாற்று வெள்ளத்தில் (புனலில்) சிக்கிக் கொள்ளும் பெண்ணைக் காப்பாற்றி அவளது காதலைப் பெறுவான்.
மதுரை வீரன் கதையில் இந்நிகழ்வை காணலாம். ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இளவரசி பொம்மியைச் செருப்புத் தைக்கும் காவல் வீரனான மதுரை வீரன் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் காப்பாற்றுவான். இதனால் இளவரசிக்கு அவன் மீது காதல் தோன்றும். மதுரை வீரன் அவள் பெற்றோர் அறியாமல் அடுத்த ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வான்.
களிறு தரு புணர்ச்சி
இலக்கணம் எழுதப்பட்ட காலத்தில் பெண்கள் காட்டு விலங்குகளால் (களிறு -யானை) துன்பம் தரும் சூழ்நிலையில் சிக்கும் போது அவர்களை விடுவிப்பவன் அவர்களின் காதலைப் பெறுகின்றான். குறிஞ்சி நிலம் காதலுக்கு ஏற்ற குளிர் நிலம் ஆகும். ஒரு தனி யானையிடம் ஒரு பெண் சிக்கிக் கொள்ளும் போது அவளது அச்சத்தை நீக்கி அந்த யானையிடமிருந்து அவளைக் காப்பாற்றுகின்றவன் அவள் காதலைப் பரிசாக பெறுகின்றான்.
இக்காட்சியை வள்ளி - முருகன் திருமணத்தில் காணலாம்.
அன்று தொட்டு இன்று வரை ஒரு பெண் தனக்கு விருப்பமானவற்றை செய்து முடிக்கின்றவனையும் தன்னை இடர்ப்பாடுகளில் இருந்து பாதுகாக்கின்றவனையும் தான் காதலிக்கிறாள். அவனே தனக்கு நீடித்த வாழ்க்கைத் துணையாக இருப்பான் என்று நம்புகின்றாள்.
இன்றைக்கு கல்வி, வருமானம், தனி வாழ்வு என்று பெண்களின் சுதந்திரம் மதிக்கப்படும் காலத்திலும் அவர்கள் தனக்கு உறுதுணையாக இருக்கும் ஆணையே காதலிக்கின்றனர், கரம் பிடிக்கின்றனர்.