இயற்கை அழகு கொஞ்சும் அழகான மலைப் பிரதேசத்தில் , செயற்கையான தொழில்நுட்பத்தின் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில், உலகின் மிக உயரமான பாலமாக செனாப் நதி ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் 272 கி.மீ நீளமுள்ள உதம்பூர்- ஸ்ரீநகர் -பாரமுல்லா ரயில்வே இணைப்பின் ஒரு பகுதியாகும். காஷ்மீர் மாநிலத்தின் நீண்ட கால கனவுத் திட்டமான இது , சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நாளிலிருந்தே தேசிய செய்திகளில் தினமும் இடம்பெறுகிறது.
இந்திய பொறியாளர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலம் , இந்திய கட்டுமானத்தின் அதிசயமாகவும் , இந்தியக் கட்டிடக் கலையின் வலிமையை பறைசாற்றும் வகையிலும் இருக்கிறது. சமீபத்தில் செனாப் ரயில் பாலத்தின் மேல் வந்தேபாரத் ரயில் ஒன்று கடக்கும் போது, அதிலிருந்த பயணிகள் வந்தே மாதரம் கோஷத்தை எழுப்பி தேசத்தின் பெருமையை உணர வைத்தனர். இதன் மூலம் செனாப் ரயில் பாலத்தை தேசிய அடையாளங்களில் ஒன்றாக மக்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகிறது.
இந்திய கட்டுமானத்தின் நம்பிக்கையை உணர்த்தும் இந்த பாலத்தின் திட்டத்தில் ஒரு பெண்மணி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது சமீபத்திய பேசுபொருள் ஆகியுள்ளது. நாட்டின் பெரும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அந்த பெண்மணியை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளனர். அந்த பாராட்டைப் பெற்றவர் செனாப் ரயில்வே பால திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான மாதவி லதா என்பவர் தான்.
யார் இந்த மாதவி லதா?
ஆந்திராவின் மிகவும் பின்தங்கிய பகுதியான எடுகுண்ட்லபாடு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் மாதவி லதா. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு 4 உடன்பிறப்புகள் , அதிலும் இளையவர் தான் மாதவி லதா. கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்த இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் முதல் விருப்பமாக இருந்துள்ளது. ஆனாலும் அவரது குடும்ப சூழலால், மருத்துவம் படிக்க ஏராளமாக செலவாகும் என்பதால், அந்த கனவை கைவிட்டார். அதன் பின்னர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றார்.
1992 ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்ற பின் , தங்கள் கிராமத்தில் முதல் பொறியாளர் என்ற பெருமையை பெற்றார். பிறகு வாரங்கலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(NIT), புவி தொழில்நுட்ப பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்த பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக, அவரது கல்வி கற்கும் திறனை பாராட்டி கல்வி நிறுவனத்தால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டுவாக்கில் மாதவி லதா சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான (ஐஐடி)யில் புவி தொழில்நுட்ப பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) பொறியியல் முதுகலைப் படிப்பையும் முடித்து விட்டு , 2003 ஆம் ஆண்டு முதல் அங்கேயே பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் தொழில்நுட்ப மையத்தின் தலைவராகவும் உள்ளார். செனாப் ரயில்வே பாலத் திட்டத்தில் தொழிநுட்ப ஆலோசகராக 2005 ஆம் ஆண்டு முதல் 2022 இல் முக்கியப் பணிகளில் நிறைவடையும் வரை அவரது பங்களிப்பு இருந்தது.
செனாப் பாலம் அமையும் இடம், புவியியல் ரீதியாக சிக்கலான மண்டலங்களில் ஒன்றான இமயமலைப் பகுதியில் உள்ளது. இங்குள்ள பெரிய டெக்டோனிகல் தட்டுக்கள் நகரும் அபாயத்தை கொண்டிருப்பவை. இதனால் அடிக்கடி நில அதிர்வு அபாயங்களுக்கும் உள்ளாகிறது. கடினமான செங்குத்தான நிலப்பரப்பு, உடைந்த பாறை சரிவுகள், தளர்வான மண் ஆகியவை பாலம் அமைக்க சவாலாக இருந்தன. செனாப் ஆறு வேகமாகப் பாய்ந்து மண்ணரிப்பை தொடர்ச்சியாக ஏற்படுத்தக் கூடியது. சில நேரங்களில் அதிக மண்ணரிப்பு, நிலச்சரிவுகளுக்கு காரணமாக உள்ளன.
இது போன்ற மிகவும் சிக்கலான பிரதேசத்தில் 359 மீட்டர் உயர எஃகு வளைவுடன் கூடிய பாலத்தைக் கட்ட விரிவான புவியியல் திட்டமிடலும் ஆலோசனையும் தேவைப்பட்டது. மாதவியின் பணியாக திட்டத்தின் வரைவு , புவியியல் ரீதியாக இடத்தின் தன்மை, பாலத்தை நிலை கொள்ள செய்ய தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல், இயற்கையின் இடர்களை சமாளிக்கும் வகையில் பாலத்தின் ஆயுளை மேம்படுத்தி, அதற்கான முன் கூட்டிய திட்டமிடல் என பல இருந்துள்ளன.
பாலத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான அதன் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் அடித் தளங்களுக்கான புவி தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளை வடிவமைத்தல் ஆகியவற்றிலும் அவரது பங்கு அதிகமாக இருந்தது. இந்த பணியில் அறிவு ரீதியாக திட்டமிடல் மட்டுமில்லாமல் உடல் ரீதியான கடுமையான உழைப்பையும் மாதவி கொட்டியுள்ளார். மலைச் சரிவுகளில் அவர் அடிக்கடி ஏறி இறங்க வேண்டிய சூழல் இருந்தது. கடினமான மலைப் பிரதேசத்தில் , அடிக்கடி மாறும் காலநிலைகளும் மாதவியை அதிகம் சோதித்து உள்ளன. பல பணிகளுக்கு மாதவியின் ஆலோசனை தேவைப் பட்டதால் அவர் அடிக்கடி மலையில் நகர வேண்டி இருந்தது .
மிகவும் உயரமான இடங்களில் எந்திரங்களை மேற்பார்வையில் கொண்டு செல்லவும் சவாலாக இருந்துள்ளது. அதில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியும் இருந்தது. எந்திரங்களை நகர்த்துதல், அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வேலையை தொடங்குதல் போன்ற பணிகளின் திட்டமிடலுக்காகவும் பல இரவுகளை அவர் தூக்கமில்லாமல் கழித்துள்ளார். 17 ஆண்டுகள் அவரின் கடின உழைப்பின் பலனை நாட்டு மக்கள் அனுபவிப்பார்கள்.
மாதவி லதா சிறந்த கல்வியாளர் , பொறியாளர் , புவியியல் திட்ட ஆலோசகர் என்பதை தாண்டி , பெண்களின் அடிப்படை உரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர் என்கிற சிறப்புடையவர். புவி தொழில்நுட்ப பொறியியல் கட்டிடத்தில் ஆண்களுக்கு மட்டுமே கழிவறைகள் இருந்தபோது, தனி கழிவறை கேட்டு போராடி , புவி தொழில்நுட்ப பொறியியல் கட்டிடத்தில் பெண்களுக்கான தனி கழிவறைகளை கட்ட வைத்தவர். இந்த வகையில் அவர் ஒரு சமூக செயல்பாட்டாளராகவும் இருந்துள்ளார்.
மாதவியின் பணிகளைப் பாராட்டி 2021 ஆம் ஆண்டில், இந்திய புவி தொழில்நுட்ப சங்கம் அவருக்கு சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் என்ற விருதை வழங்கியது. 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் She is Steam என்ற பெருமைப் படுத்தும் பட்டியலில் இந்தியாவின் சிறந்த 75 பெண்களில் மாதவியும் இருந்தார். மாதவி தனது மருத்துவ கனவு நிறைவேறாமல் வேறு பாதையில் பயணித்து வெற்றி பெற்று பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உதாரணமாக இருக்கிறார்.
சூழலின் காரணமாக விரும்பிய கல்வியை பெற முடியாதவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வேறு கல்வியில் மாதவி போல சாதித்து பெயர் பெற வேண்டும்.