
தனது பாடல் வரிகளால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கவிஞராக அறியப்படுபவர். 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் இன்றும் பிரபலமாக உள்ள 'ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல்தான் இவரை திரையுலகில் அறிமுகம் செய்த பாடல். இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தாலும், தமிழ் மீது கொண்ட தீராத காதலால் நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். தமிழ் மீது கொண்ட ஈர்ப்பால், தமிழ் மொழியில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், தனது பாடல் வரிகளுக்கு, இது வரை 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
ஆரம்பகாலத்தில் இவர் எழுதி இளையராஜாவும் அதிகளவு பாடல்களை எழுதியிருந்தாலும், ஏ ஆர் ரகுமானுக்கும், வைரமுத்துவிற்கும் இருக்கும் நெருக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஏஆர் ரகுமானின் எல்லா திரைப்படங்களிலும் ஏறத்தாழ 85 சதவீதத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளது வைரமுத்து தான்.
எக்ஸ்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் வைரமுத்து அண்மையில் பதிவிட்ட பதிவு ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்களின் தலைப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடல் வரிகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 40 ஆண்டுகளாக தமிழ் திரைவுலகில் தன் பாடல் வரிகளால் மக்களை கட்டிப்போட்ட கவிஞர் வைரமுத்து, தன் பாடல்களை படத்தின் தலைப்பாக பயன்படுத்துபவர்கள் அதற்காக தன்னிடம் மரியாதைக்கு கூட அனுமதி கேட்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே,
என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை; காணும் இடங்களில் கேட்டதுமில்லை என்று கூறியுள்ள வைரமுத்து, 'ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள்?' என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் 'என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நான் இசையமைத்த படத்தின் பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாக கூறி இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தனது பாடல் வரிகளை அனுமதி இல்லாமல் தலைப்பாக வைத்திருப்பதாக வைரமுத்து தற்போது தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரமுத்துவின் இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் சிலர் இவரின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.