

தொலைக்காட்சி வரலாற்றில் 'முதன்முறையாக' என்று விளம்பரப்படுத்தப்படும் மெகா தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள், பெரும்பாலும் சேனல்களின் சுயலாபத்திற்காகவும், ரேட்டிங்கை உயர்த்துவதற்காகவுமே (TRP ratings) ஒளிபரப்பப்படுகின்றன. இதற்காகப் பார்வையாளர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்றைய மெகா தொடர்களில் பெரும்பாலானவை லாஜிக்கே இல்லாத கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இதில் பல குடும்பங்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், மூழ்கித் தவிப்பது வருத்தத்திற்குரியது. ஏதோ ஒரு சில தொடர்களில் இந்த அபத்தம் இருந்தால் பரவாயில்லை, ஆனால் இப்போது வரும் அனைத்துத் தொடர்களிலும் அநாகரீகமான விஷயங்களும், முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகளுமே அரங்கேறி வருகின்றன. இது குடும்பத் தலைவிகளையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
உதாரணத்திற்கு, பிரபல தொடர் ஒன்றில் வரும் மாமியார் கதாபாத்திரம் பணப்பேராசை கொண்டதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
முதல் மருமகள் பணக்கார வீட்டுப் பெண் (என்று பொய் சொல்வதால்) அவரைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்.
இரண்டாவது மருமகள், ஏழை வீட்டுப் பெண் என்பதால் அவரை கேவலமாகப் பேசுகிறார்.
மூன்றாவது மருமகள், மாமியாரின் அநியாயத்தைத் தட்டிக் கேட்பதால் அவரிடம் மட்டும் மாமியாரின் ஜம்பம் பலிப்பதில்லை.
தன் மருமகன் தொழில் எதிரியுடன் (வில்லி) சேர்ந்து கொண்டு, அவருக்குத் தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்துவதும், மந்திரம்-மாயம் என்று இறங்குவதும் ஜீரணிக்க முடியாதவை. இத்தகைய காட்சிகள் கூட்டுக்குடும்பத்தின் நெறிமுறைகளையும், அன்பு, பாசம் ஆகியவற்றையும் சிதைக்கின்றன. வசைகளும், ஏகவசனங்களும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
மற்றொரு பிரபல தொலைக்காட்சியில், நாத்தனார் கதாபாத்திரம் தன் தாயுடன் சேர்ந்து கொண்டு சகோதரனின் குடும்பத்தைக் கலைக்கத் துடிப்பது சங்கடமாக உள்ளது.
முன்பு விசு, கே.பாலசந்தர், திருமுருகன் போன்றோர் இயக்கிய மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்ற தொடர்கள் குடும்பப் பின்னணியில் எதார்த்தமாக அமைந்து அனைவரையும் கவர்ந்தன. அவை இன்றும் வரலாறாகப் பேசப்படுகின்றன.
எனவே, அனைத்துத் தொலைக்காட்சிகளும் லாஜிக் மீறிய கதைகளைத் தவிர்த்து, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாகவும், நல்ல நெறிமுறைகளோடும் தொடர்களைத் தயாரிக்க வேண்டும். அதுவே சமூகத்திற்கு ஆரோக்கியமானது!