

'ஒப்பந்தம்' — இது ஓர் அழகான வார்த்தை. இடத்திற்குத் தகுந்தபடி இதன் அர்த்தம் மாறிப்போகும். இரு மனங்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு ஏற்படுவது ஒரு வகை ஒப்பந்தம்; அதற்குப் பெயர் காதல். அந்த ஒப்பந்தத்திற்குள் ஐக்கியமாகாதவர்கள் வெகு சிலரே. இந்த ஒப்பந்தம் அழகானது; இன்றும் நிரந்தரமாக உள்ளது.
ஆனால், சில தற்காலிக ஒப்பந்தங்கள் இன்று அதிக விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. அதில் ஒன்றுதான் 'மகளிர் தின ஒப்பந்தம்'.
மகளிர் தினத்தன்று (Women's day) அனைவரும் வரிந்துகட்டிக்கொண்டு, மகளிரைப் போற்றுகிறோம் என்ற பெயரில் பட்டிமன்றங்களை ஒளிபரப்புவார்கள். இதற்காகப் பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர்களிடம் தற்காலிக ஒப்பந்தம் போடப்படும். அவர்கள் பேசுவதற்கான தலைப்புகள் அநேகமாக இப்படித்தான் இருக்கும்:
"பெண்களுக்குப் பிடித்தது தாய் வீடா... மாமியார் வீடா?"
"அலுவலகத்தில் பெண்கள் போற்றப்படுகிறார்களா... தூற்றப்படுகிறார்களா?"
ஒவ்வொரு வருடமும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. யாருமே மாற்றி யோசிப்பதில்லை. சமீபத்தில் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பட்டிமன்ற நிகழ்வு ஒன்றை யூடியூப்பில் பார்த்தேன். அதில் ஒருவர், எதிரணியில் இருந்த பெண்ணைக் குறிப்பிட்டு, "அவர் தன் கணவரை மதிக்கிறாரா அல்லது மிதிக்கிறாரா என்று எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது" என்றார். பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பேசப்படும்போது, பட்டிமன்றத் தலைப்புகளின் கண்ணியம் சிதைந்து போகிறது. மகளிர் தினச் சிறப்புப் பட்டிமன்றம் இத்தகையப் போக்கில் நடந்தால், அது பெண்களுக்குச் செய்யும் மரியாதையாக எப்படி இருக்கும்?
பெண்கள் குறித்த சந்தேகம் இன்னும் சமூகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது; அதனால்தான் பழைய தலைப்புகளே மீண்டும் வலம் வருகின்றன. காமெடிப் பேச்சாளர்களோடு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால், பெண்கள் விண்வெளி வரை சென்று சாதனை படைத்துவிட்டார்கள்.
வசந்தகுமாரி: தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுநர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் பெண் ஓட்டுநராகச் சில காட்சிகளில் நடித்திருப்பார்.
ரோஷனா பேகம்: தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் பெண் கவிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 'குடியிருந்த கோயில்' படத்தில் இடம்பெற்ற "குங்குமப் பொட்டின் மங்கலம்" பாடலை எழுதியவர் இவரே. 60-களிலேயே ஒரு முஸ்லிம் பெண் கவிஞரை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இருப்பினும், ரோஷனா பேகம் வேறு பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்பதும், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சாதனையாளர்களைத் தேடித் தேடி நாம் சிறப்பிக்க வேண்டும்.
நிரந்தர ஒப்பந்தம் பூண்டவர்கள்
ஒரு சிலர் மட்டுமே தன் கொள்கையோடு நிரந்தர ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.
தூய்மைப் பணியாளர் பத்மா: ஆரம்பத்திலிருந்தே நேர்மையோடு ஒரு நிரந்தர ஒப்பந்தம் போட்டுள்ளார். தான் கண்டெடுத்த நகையின் மதிப்பு என்ன என்பதைப் பற்றி அவர் யோசிக்கவில்லை; அந்த நகை உரியவரிடம் போய்ச் சேர வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. பலரும் அவரை அழைத்து இன்று பாராட்டுகிறார்கள்.
சுதா சந்திரன்: தனது நம்பிக்கையோடு ஒப்பந்தம் போட்டவர். பரதநாட்டியக் கலைஞரான இவர், விபத்தில் ஒரு காலை இழந்தாலும், செயற்கைக் கால் பொருத்தித் தனது கலையைத் தொடர்ந்தார். 'மயூரி' திரைப்படம் இவரது சொந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
தீபாவளி நமக்கான பண்டிகை. அன்றைய தினம் அனைவரும் சந்தோஷமாக இருப்போம். அந்த நாளில் தீபாவளியை விமர்சிப்பது போல ஒரு பட்டிமன்றத் தலைப்பைத் தேர்ந்தெடுப்போமா?
மகளிர் தினமும் தீபாவளியைப் போல ஒரு பண்டிகைதான். நம் வீட்டில் இருக்கும் அன்னை, தங்கை, அக்கா, மருமகள் என அனைவருக்குமான நாள் அது. அன்றைய தினம் அவர்களை விமர்சனம் செய்வது போன்ற தலைப்புகள் தேவையா? தற்காலிக ஒப்பந்தம் போடும் முன்பு சிந்தித்துப் பாருங்கள்.
இத்தகைய மகளிர் தின ஒப்பந்தங்களில் பணத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது; பெண்கள் அங்கே இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். மேடையில் காமெடி சபையில் விழுகிறது, அரங்கம் அதிர்கிறது; ஆனால் பெண்களுக்கான அங்கீகாரம் வழக்கம் போல ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது.
மகளிர் தினக் கொண்டாட்டம் என்பது ஒரு நாள் கூத்திற்குப் போடப்படும் வேஷமல்ல. அதை உணர்ந்து செயற்கைத்தனத்தை நாம் உதறித் தள்ள வேண்டும்.