வல்லாரையும் குப்புசாமியும்...

அடிக்கடி மறந்து போகுதா? மறதி ஏன் வருகிறது? 2-7-30 விதி சொல்வது என்ன?
memory power tamil story
memory powercredit AI Image
Updated on
mm
mm

குப்புசாமி மனைவி கமலா, ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபடி திகைத்து நின்றாள்.

"என்ன கமலா... ஏன் திகைச்சு நிற்கிறே?"

"என்ன எடுக்க ஃப்ரிட்ஜைத் திறந்தேன்? மறந்திட்டு!"

மறதி எல்லோருக்கும் ஏற்படும் ஒன்றுதான். பத்து நாட்கள் முன்பு, போன ஞாயிறு இரவு என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டால் சொல்வது கடினம். அது குறித்துக்கொள்ள வேண்டாத ஒரு அம்சம்; தேவையுமில்லை. ஆகவே, அந்த விவரம் மூளையில் இருந்து 'டெலீட்' ஆகிவிட்டது... அல்லது சேமிக்கப்படவே இல்லை.

மூளையின் பிரம்மாண்ட சேமிப்பு

மனித மூளையின் சேமிக்கும் கொள்ளளவு 25 லட்சம் ஜி.பி (GB) ஆகும்; அதாவது இரண்டரை பெடா பைட்ஸ்! 125 லட்சம் கோடி (125 டிரில்லியன்) மூளை நரம்பு நியூரான் திசுக்கள் சங்கமித்து, பிணைந்து இயங்குகின்றன. ஒரு சங்கமிக்கும் 'சினாப்ஸ்' எனப்படும் ஜங்ஷன், 4.7 பிட்கள் டேட்டாவைச் சேமிக்குமாம்.

ஒரு மனித மூளையால், ஒரு குத்துமதிப்பில் 60,000 சினிமாக்களை 4K தரத்தில் சேமிக்க இயலுமாம். ஒரு கிராம் டி.என்.ஏ (DNA), 2150 லட்சம் ஜி.பி டேட்டாவைச் சேமிக்கும். புதிய கணினி ஆய்வுகளில் டி.என்.ஏ சேமித்தல் குறித்து ஆய்வு செய்கின்றனர். நம்மிடம் எவ்வளவு டி.என்.ஏ இருக்கிறது தெரியுமா? மொத்த டி.என்.ஏ-க்களை நீட்டினால் 1000 கோடி கி.மீ நீளம் வருமாம். அது 17 முறை புளூட்டோ கிரகத்துக்குப் போய் வரும் தூரம்!

மறதி ஏன் வருகிறது?

முதுமை, சரியான தூக்கமின்மை, ஆர்வமில்லாத விஷயம், மன அழுத்தம், குறைவாகத் தண்ணீர் குடித்தல் போன்றவை ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தும் செயல்பாட்டில் தடையாக இருக்கின்றன. ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் தரும்போது அது மறப்பதில்லை.

2-7-30 விதி:

ஒரு விஷயத்தை 2 நாட்கள், பின் 7 நாட்கள், பின் 30 நாட்கள் என அப்பியசிக்க (Practice), அது நன்றாக மூளையில் வேரூன்றி விடும்.

ஒரு இசைக் கலைஞரின் புதல்வன் எளிதில் வாத்தியம் வாசிப்பான்; அது டி.என்.ஏ-வில் ஏற்பட்ட பதிவு. "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" போது, வாரிசாகிய பிள்ளை செய்ய மாட்டானா?

பெண்களின் அலாதி நினைவாற்றல்!

பெண்கள் அவ்வளவு எளிதில் எதையும் மறப்பதில்லை. குப்புசாமி மனைவி கமலா சொன்னாள்: "நீங்க என்னைப் பெண் பார்க்க வந்தப்போ போண்டா, காபி வச்சோம். போண்டா தின்னுட்டு உங்க அம்மா புடவையில் கை துடைச்சீங்க யாருக்கும் தெரியாமல்... நான் பார்த்திட்டேன்! என் சித்தப்பா உங்க காலேஜ் சீனியர் கிளாஸ்மேட்னு சொல்லித் தெரியுமான்னு கேட்டார்.

நீங்க தலையை ஆட்டிப் பதில் சொன்னப்போ, போண்டா தேங்காய் பல் துகள் தொண்டையில் சிக்கி ஒரே திணறல்! மூச்சு விட சிரமப்பட்டு ஜாடை காட்ட, என் தம்பி தான் உங்க ரெண்டு கையையும் தூக்கி ஆட்டிச் சரி செஞ்சான்."

இது குப்புசாமிக்கு மொத்தமாக ஞாபகமில்லை. ஆனால், கமலாவின் ஞாபக சக்தி அலாதியானது. சொந்தக்காரக் குழந்தைகள் பிறந்த தேதியை இப்படிக் குறிப்பிடுவாள்: "உங்க தங்கைக்குப் பெரிய பையன் பிறந்தது சிவராத்திரிக்கு அடுத்த நாள்... அன்னிக்கு என் கையால் பொங்கல் வாங்கித் தின்னா ஆஸ்பத்திரிக்கு போகுமுன்!"

நினைவாற்றல் மேதைகள்

மனித மூளைதான் எத்தனை விசித்திரமானது!

  • அமரர் கல்கி அவர்கள் 'பொன்னியின் செல்வன்' எழுதுவதற்காக எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்வதில்லையாம்; எல்லாம் மனதில் பதிந்திருக்குமாம்.

  • டேனியல் டாமெட்: பிரிட்டிஷ் எழுத்தாளர். கணிதத்தில் 'பை' (Pi) மதிப்பின் 22,514 இலக்கங்கள் வரை சொல்லும் ஆற்றல் இவரிடம் இருந்தது.

  • சுவாமி விவேகானந்தர்: ஒருமுறை ஒரு புத்தகத்தைப் படித்தால் முழுவதுமாக அதை அப்படியே ஒப்புவிப்பாராம்.

  • கூரத்தாழ்வார்: இராமானுஜரின் சீடர். 'பிரம்ம சூத்திர' நூலை வார்த்தைக்கு வார்த்தை மிகக் குறுகிய காலத்தில் பயின்று ஒப்புவித்தாராம்.

  • சகுந்தலா தேவி: 201 இலக்க எண்ணின் 23-வது ரூட் விடையை 50 வினாடிகளில் சொன்னவர். வரலாற்றில் எந்த ஒரு தேதிக்கும் என்ன கிழமை வரும் எனச் சொல்லும் திறன் இவருக்கு உண்டு. சைதன்ய மகாபிரபு இந்தச் சக்திக்கு 'ஷ்ருதி தாரா' என்று பெயரிட்டார்.

  • ஸ்டீஃபன் வில்ட்ஷயர்: ஹெலிகாப்டரில் ஒருமுறை பறந்த பின், ஞாபகத்திலேயே ஒரு பெருநகரத்தை அப்படியே வரைந்துவிடுவார்.

வல்லாரையும் குப்புசாமியும்

மறதி மிகவும் மோசமானது; துன்பத்தைத் தரும். வள்ளுவர் 'பொச்சாவாமை' (மறதி கூடாது) அதிகாரத்தில் இதை விளக்குகிறார்.

மறதி நீங்கி ஞாபக சக்தி பெருக 'வல்லாரைக் கீரை' நல்ல மருந்து. கமலா ஒரு கட்டு வாங்கி வரச் சொன்னாள். பெயர் மறந்துவிடும் என ஒரு சீட்டில் எழுதிக் கிளம்பினார் குப்புசாமி. மார்க்கெட்டில் ஒரு பாட்டியிடம், "மறதி அதிகமா இருக்குன்னு ஒரு கீரை சொன்னாங்க..." என்றார். "வல்லாரை... இதோ இருக்கு, கட்டு முப்பது ரூபா," என்றாள் பாட்டி.

இதையும் படியுங்கள்:
சஷ்டியப்த பூர்த்தி முதல் சதமானம் வரை: கொண்டாட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை பாடம்!
memory power tamil story

வாங்கிப் பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். "சாமி... காசு கொடுக்காம போறீங்களே!"

"அடடே... கோவிக்காதீங்க, எவ்வளவு சொன்னீங்க?"

"முப்பது."

ஐம்பது ரூபாய் தந்துவிட்டு மீதி இருபதை வாங்க மறந்தார். பாட்டி நினைவூட்டித் தந்தார். கடைசியில், வல்லாரை கீரை இருந்த கட்டைப்பையையே அங்கேயே விட்டுவிட்டுத் திரும்பினார்! பாட்டிதான் தேடி வந்து வீட்டில் தந்துவிட்டுப் போனார்.

ஆன்மீகமும் நினைவாற்றலும்

மறதி வந்துவிடக் கூடாது என்பதால்தான், இறக்கும் போதும் இறைவனின் நாமாவளியை உச்சரித்தபடி இருக்க ஞானிகள் விரும்புவர். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 'திருவருட்பா'வில் பாடுகிறார்:

"பெற்றதாய் தனைமகன் மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும், நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே!"

logo
Kalki Online
kalkionline.com