ஆண்களே கேளீர்!

Men
Men

- மரிய சாரா

பெண் என்றாலே மோகம் என சில ஆண்களின் மொத்த எண்ணமும் இருப்பதன் காரணம் என்ன என பலமுறை நான் யோசித்ததுண்டு. சில நேரங்களில் அடங்காத கோபமும் வந்ததுண்டு. அவ ஒல்லியா இருந்தா ஒரு பட்டம், குண்டா இருந்தா ஒரு பட்டம், அவ வெள்ளையா இருந்தா ஒரு விமர்சனம், அவ கலர் கம்மியா இருந்தா ஒரு விமர்சனம், உயரமா இருந்தா, உயரம் கம்மியா இருந்தா, பல் எடுப்பா இருந்தா, அவ இந்த டிரஸ் போட்டா இப்படி, அந்த டிரஸ் போட்டா அப்படி....

இப்படி எத்தனை எத்தனை? அவளின் அங்கங்களை ரசிக்கவும், கட்டிலில் அவளை களவாடவும் மட்டும்தான் ஆண் படைக்கப்பட்டானா? அவளின் உடலை மட்டுமே தீண்ட நினைக்கும் ஆணுக்கு உண்மையில் ஆண்மை இல்லை என்பதே நிதர்சனம். ஆண்கள் பார்க்கும் அவளின் அங்கங்கள் அடங்கிய அந்த உடலின் உள்ளே அழகான உள்ளம் எனும் ஊர் உள்ளது. உலகில் உள்ள 75% ஆண்கள் அந்த ஊருக்கு செல்வதில்லை. அட, செல்ல முயற்சிப்பது கூட இல்லை.

அப்படி அவளின் அந்த ஊருக்குள் சென்ற எந்த ஆண் மகனும் அவளை ஒரு போகப்பொருளாக மட்டுமே பார்க்க மாட்டான். உடலை தீண்டும் முன் அவளின் மனதை திருடும் ஆண் தான் உண்மையில் பாக்கியசாலி. அவன் எதிர்ப்பார்ப்பதை விட திகட்டிடும் அன்பை அவன் பெற்று அவளை ஆளலாம். ஆனால் இந்த அறிவு உண்மையில் ஆண்களுக்கு இருப்பதே இல்லை.

பேருந்தில் தடவல்கள், தியேட்டரின் சீண்டல்கள், பணி செய்யும் இடத்தில் பார்வை தீண்டல்கள், ரயிலின் பயணத்தில் உரசல்கள், ஆடை விலகலில் விழியால் கற்பழிப்புகள், அப்பப்பா இன்னும் எத்தனைதான் அவள் தாங்கி தவிப்பாள்? போதும்.

இதையும் படியுங்கள்:
சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்க்கை சாத்தியமாவது எப்படி?
Men

பெண்களை பாதுகாப்பதே ஆணின் கடமை என சொல்லிச்சொல்லி வேலியே பயிரை மேய்கின்ற கொடுமைகள் இனி நிற்கட்டும். எம்மை யாரும் பாதுகாக்க வேண்டாம். எம்மை யாரும் போற்றி பாட வேண்டாம். எம்மை யாரும் உயர்த்தி வைக்கவேண்டாம். எம்மை எம் வாழ்வை வாழவிடுங்கள் போதும். எமது உரிமையைப் பறிக்காது இருங்கள் போதும். எம் சுதந்திரத்தைப் பறிக்காது இருங்கள் போதும். எம்மீது பரிதாப பார்வைகள் வீசாமல் இருங்கள் போதும்.

அவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என கூட்டினுள் அடைத்து, வரையறைகள் வகுத்தவன் ஆண்மகன்தான். அவளை கூட்டிலிருந்து வெளியில் கொண்டுவந்து அழகுபார்த்ததும் ஆண்மகனில் ஒருவன்தானே? இந்த இருவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? முதலாமவன் தன்னை ஆண்மகன் என நினைத்துக்கொண்டிருப்பவன். இரண்டாமவன் உண்மையான ஆண்மகன்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் அவள் அனுதினமும் அனுபவிக்கும் வலிகள் ஆறாத காயங்களாக அவள் சாகும்வரை மனதில் ரணமாய் இருக்கும். பாதுகாத்தது போதும். எங்களை நாங்களாய் வாழ விட்டுவிடுங்கள். காலம் கடந்தும் காவியங்களாய் நிற்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com