பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

அக்டோபர் – 18 - உலக மெனோபாஸ் தினம்!
October – 18 - World Menopause Day!
menopause dayImage credit - pixabay
Published on

அக்டோபர் – 18 - உலக மெனோபாஸ் தினம்!

மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான சிக்கல்கள் ஏற்படும். அவை என்ன, அவற்றை  எப்படிக் கையாள்வது, தேவையான குடும்பத்தினரின் ஆதரவு போன்றவற்றை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.  

உடல் மற்றும் உள ரீதியான சிக்கல்கள்:

மெனோபாஸ் ஏற்படும் காலகட்டத்தில் பெண்களுக்கு அடிக்கடி இரவில் கடுமையாக வியர்க்கும். தூங்கவிடாமல் தொந்தரவு தரும். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் வெப்பத்தால் முகம், கழுத்து, உடல் முழுவதும் சிவந்து, எரிவது போன்ற உணர்ச்சியை தரும். உடல் வலி, சோர்வு போன்றவை இருக்கும். தூங்குவதில் சிரமம் மற்றும் பகல் நேரத்தில் துக்க கலக்கமாக இருப்பது, எடை அதிகரித்தல் குறிப்பாக வயிற்றுக் கொழுப்பின் அதிகரிப்பு காரணமாக உடல் பருமன் ஏற்படுதல், ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அடிக்கடி எரிச்சல், பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படும். நினைவாற்றல் குறைபாடு, கவனம் செலுத்துவதில் சிரமம், மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி அல்லது விறைப்பு, முடி உதிர்தல், முடி மெலிதாதல், சரும வறட்சி, சருமம் நெகிழ்ச்சியாதல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, அடிக்கடி ஒற்றைத் தலைவலி, விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும். இவை ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம். 

குடும்பத்தினரின் ஆதரவு:

மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு குடும்பத்தினர் முழுதாக ஆதரவு அளிக்க வேண்டும். மெனோபாஸ் பற்றி பெண்கள் தெரிந்து கொள்வது எத்தனை அவசியமோ அதே போல, ஆண்களும் இந்நிலைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். அதன் செயல்முறை, அறிகுறிகள், உணர்ச்சி மற்றும்  தாக்கங்கள் பற்றி தெளிவான புரிதல் வேண்டும். குடும்பத்தினர் உடல் மற்றும் மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் சிரமங்களை உணர்ந்து அவர்களிடம் கருணையோடும் அன்போடும் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் எரிச்சல்பட்டால் கூட இது மெனோபாஸின் அறிகுறி என்று புரிந்து கொண்டு அவர்கள் மனநிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

உதவிகள்:

சீரான சத்தான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, தூக்கம், நடைப்பயிற்சி போன்றவறையும், யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தை நிர்வகிக்கும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஹாட் ஃபிளாஷ்கள் ஏற்படும் என்பதால் அவர்களுக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளிலும் உதவி தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பப்பை இறக்கமா? கர்ப்பப்பை அகற்றாமலே கர்ப்பப்பையை பாதுகாக்கலாம்... சிகிச்சை என்ன தெரியுமா?
October – 18 - World Menopause Day!

ஊக்கம், தோழமை:

அவர்களுக்கு ஊக்கம் மற்றும் நேர்மறை வலுவூட்டலை குடும்பத்தினர் வழங்க வேண்டும். அந்தப்பெண் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து தோழமை உணர்வுடன் நடத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் எதிர்மறையான உணர்வுகள் தோன்றும் என்பதால் அவற்றை மாற்றும் வண்ணம் நேர்மறையான பேச்சு, ஆதரவான சூழல் போன்றவற்றை உருவாக்கித் தர வேண்டும். அந்த பெண்ணுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். தனக்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். 

புரிதல்:

பொதுவாக இந்த மெனோபாஸ் காலகட்டத்தில்தான் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பனிப்போர் நடக்கும். உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றங்களின் காரணமாகத்தான் 50 வயதில் உள்ள ஒரு பெண்மணி எரிச்சல்படுகிறார், கோபம் கொள்கிறார் என்பதை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொண்டு, நிறைய விட்டுக்கொடுத்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவளுக்கு போதுமான ஓய்வு தரப்பட வேண்டும்.

மெனோபாஸ் தொந்தரவுகள் அதிகம் இருந்தால் அதை குறிப்பிட்ட நிபுணர்களின் உதவியுடன் சரி செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com