

நாம் ஒரு சில பழமொழிகளிலும், சொலவடைகளிலும், ஏன் ஒரு சில திரைப்படங்களிலும் கூட, “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்”என்ற பழமொழியை கேட்டு இருப்போம். முருங்கையை நட்டவன் வீட்டில் செல்வம் இல்லாமல், கடன் பட்டு நஷ்டத்திற்கு செல்வான் என்பது இதற்கு அர்த்தம் அல்ல!
முருங்கை மரத்திலுள்ள இலை, பூ, காய் ஆகிய மூன்றும் அதிக சத்துக்கள் நிறைந்தவை.
இந்த மூன்றையும் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு குறைந்த பட்சமாவது இரண்டு முறையாவது முருங்கை இலை பொரியலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் எப்போதெல்லாம் சாம்பார் வைக்கிறோமோ அப்போது முருங்கை காய்களை சேர்த்துக் கொள்வதும் நல்லது.
இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து இரத்த சோகையை குணப்படுத்தும்.
கால்சியம் மற்றும் பொட்டாசியம்; கண் பார்வையை மேம்படுத்தும், எலும்பு தேய்மானத்தை தடுக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி; செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கலை தீர்க்கும்.
மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ்; விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்; நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலப்படுத்தும்.
இப்படி முருங்கை இலை, பூ, காய்களில் உள்ள பல்வேறு அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள்; நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், முன்னெச்சரிக்கையாக தடுக்கவும் பயன்படுகின்றன.
முருங்கைப்பூ மற்றும் இலைகளை பொரியல் செய்யலாம். அதேபோல் பூவை சிறு பருப்புடன் சேர்த்து கூட்டு மாதிரி செய்தும் சாப்பிடலாம். முக்கியமாக சூப் செய்தும் சாப்பிடலாம்.
முருங்கைக் காய்களையும் நாம் செய்யும் புளிக்குழம்பு, மீன் குழம்பு, சாம்பார் போன்ற குழம்புகளிலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
“வீட்டிற்கு ஒரு முருங்கை!” இருந்தால் வீட்டில் உள்ள எவருக்கும் இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி வராது என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியிருக்கிறார்.
முருங்கை நமக்கு இப்படி பல வழிகளில் ஊட்டச்சத்துக்களை நம் உடலுக்கு வழங்குவதால்; நம் உடல் புத்துயிர் பெற்று நலமுடன் நாம் வயதான காலம் வரை கைத்தடி துணையின்றி வாழ்வோம்.
முருங்கை இலை, பூ, காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், வயதான காலத்திலும் கூட ஆரோக்கியமாக நரம்பு தளர்ச்சி இல்லாமல் கைத்தடி இன்றி நாம் வாழ்வோம்! என்ற கூற்றைத் தான் நம் பெரியவர்களும், முன்னோர்களும், “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்”என்று கூறியிருக்கிறார்கள்.
முருங்கையை நட்டவன், கடன் பட்டு ஒன்றும் இல்லாமல் போவான் என்று ஒரு சில பேர் இந்த பழமொழியை தவறாக உணர்ந்து இருப்பார்கள்.
ஆனால் முருங்கையை நட்டிவிட்டு, பிறகு அதில் உள்ள கீரைகளை சாப்பிடாமல் இருந்தால் நமக்கு தான் நட்டம். முருங்கையை நடுவது மட்டும் பெரிதல்ல, அதில் உள்ள இலை, பூ, காய்களை உணவில் வாரத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது சேர்த்துக் கொண்டால்தான் நமக்கு முழுமையான பலன் கிடைக்கும்.