

சும்மா நீங்கள் இருக்கையிலே,
சும்மா பற்றிய விபரங்களை,
சும்மா நானும் சொல்லுகிறேன்,
சும்மா கொஞ்சம் கேளுங்களேன்!
சும்மா நாமும் சொல்லக்கூடாது;
சும்மாவுக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்!
ஒற்றைச்சொல்லுக்கு இத்தனை கருத்துகள்
உலகில் வேறு எந்த மொழிக்கும்
இருப்பதாய் நமக்குத் தெரியவில்லை;
இதுவே நம் தமிழின் சிறப்பேயன்றோ!
கொஞ்சம் சும்மா இருந்திடேன் என்றால்,
அமைதி காத்திடு என்பதே அதன் பொருள்! (Quiet)
போகும் வழியில் கொஞ்சம் சும்மா இருந்து நாமும்
எழுந்து பின்னர் போகலாம் என்றால்,
களைப்பாறிச் செல்லலாம் என்பதே அதன் பொருள்! (Leisure)
எவரைப் பற்றியும் யாரும் பேசுகையில்,
சும்மா சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தாலே,
அவரின் குணமோ அருமை என்றே உணர்ந்திடக் கூடும்! (In fact)
எதைப் பற்றியும் எவரும் கூறுகையில்,
இது என்ன சும்மா கிடைப்பதா என்றிட்டாலே,
இலவசமாய் என்றே பொருள் பட்டிடுமே! (Free of cost)
நண்பன் சொல்லும் நய வார்த்தைகள் இடையே,
சும்மா அளக்காதேடா என்றே அவனைச் சீண்டிடும்போது,
பொய் என்றே பொருள் வந்திடுமே! (Lie)
ஓரமாய்க் கிடக்கும் ஒரு பொருளைக் காட்டி,
சும்மாதான் கிடக்கு அது என்றால்,
உபயோகமற்று உள்ளது என்பதே அதன் பொருள்! (Without use)
சும்மா சும்மா கிண்டல் பண்ணாதே
என்றே அவளும் எழிலாய்ச் சிரித்தால்,
அடிக்கடி என்பதே அதன் பொருளன்றோ! (Very often)
இவன் இப்படித்தான் சும்மா சொல்லிக்கிட்டிருப்பான்
என்பதன் பொருள், எப்போதும் என்பதுதானே! (Always)
ஒன்றுமில்லை, சும்மாதான் சொல்கிறேன்
என்பதன் பொருளோ தற்செயலாக! (Just)
இந்தப்பெட்டியா? சும்மாதான் இருக்கிறது!
என்றே சொன்னால், காலி என்று அர்த்தம்! (Empty)
சும்மா கூறியதையே மீண்டும் கூறுகிறாயா?
என்பதன் பொருள் மறுபடியும் என்பதுதானே! (Repeat)
உறவினர் வீட்டிற்கு உரிமையாய்ச் செல்கையில்,
சும்மா வெறுங்கையோடு செல்வது தவறு! (Bare)
எப்படியெல்லாரும் இருக்கின்றீர்கள்? என்பதற்கு
சும்மாதான் என்றால் சோம்பேறியாய்த்தானே! (Lazy)
அவன் சும்மா ஏதாவது உளறுவான் என்றால்,
வெட்டிப்பேச்சு பேசுபவன் என்பதே அதன் பொருள்! (Idle)
எல்லாம் பேசி இனிதாய் முடிந்ததும்,
எல்லாமே சும்மாதான் சொன்னேன் என்பதன் பொருள்,
விளையாட்டிற்கு என்பதே! (Just for fun)
சும்மா சும்மா இதனைப் படித்து,
சும்மாவே இருந்திட வேண்டாம்!
சும்மா இருந்தால் சோறு வராது!
சுகங்களும் நம்மைத் தேடி வராது!
சும்மா இருக்கையில் நல்லதை நினைப்போம்!
சும்மா சும்மா நல்லதே செய்வோம்!