
சாதாரணமாக 'மாற்றாந் தாயின் மனோபாவம்' என்று இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டு வரும் அன்னையைக் குறிப்பிட்டு கூறுவது உண்டு. அப்படி வாழ்க்கைப்பட்டு வரும் பெண்களுக்கு மனதில் ஒரு நெருடல் இருக்கும். காலம் காலமாக அப்படி கூறி வருவதால் நம்மையும் அப்படி கூறி விடுவார்களோ என்று பயப்படுவர். முதல் தாரத்தின் குழந்தைகளும் 'இவர் நம் அம்மாவை போல் பாவிப்பாரா?' என்று ஒரு கேள்விக்குறியோடு அவர்களை பார்ப்பார்கள். இவற்றையெல்லாம் வாழ்க்கையில் அனுபவித்த நெப்போலியன் ஹில் என்ன சொல்கிறார் என்பதை இப்பதிவில் காண்போம்.
நெப்போலியன் ஹில் உளவியல் தொடர்பான பல நூல்களை எழுதியதுடன், சிறந்த ஒரு சொற்பொழிவாளருமாவார். அத்துடன் மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு ஆலோசராகவும் இருந்தவர். இவரது நூல்கள் அனைத்தும் உலக புகழ் பெற்றவை ஆகும்.
இவர் தனது சிறுபிள்ளை பருவத்தைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்:
"நான் எனது அம்மாவை சிறுவயதில் இழந்து விட்டேன். வீட்டில் ஆயாவுடன் தனிமையாகவே பல பொழுதுகளை கழித்துள்ளேன். என் தந்தைக்கு தினமும் விருந்து உபசாரங்கள், உயர் மட்ட நண்பர்களைச் சந்தித்தல் என தினமும் செல்ல வேண்டி இருக்கும். பல தொழிலதிபர்களை தினமும் வீட்டில் சந்திப்பார். இதனால் என்னை எனது தந்தை உட்பட யாரும் கண்டு கொள்வதில்லை. நான் இருக்கிறேனா இல்லையா என்பது கூட என் தந்தைக்குக் தெரியாது.
என் சிறு பிள்ளை பருவம் பல ஏக்கங்களுடன் நகர்ந்தது. பாடசாலையில் நான் ஒழுங்காகப் படிப்பதில்லை. தினமும் சமமானவர்களுடன் வாய்த் தகராறும் கைகலப்பும் தான். பாடசாலையில் ஆசிரியர்களது தண்டனைக்கு உள்ளாவேன். என் தந்தையை அடிக்கடி கூப்பிட்டு பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும் என்னைப்பற்றி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். என் கல்வியில் என் தந்தைக்கு அக்கறையிருந்தது இல்லை. பாடசாலைக்கு வரும்படி அழைத்தால் அதை தவிர்த்தே வந்தார்.
எனக்கோ பாடசாலையிலும் தண்டனை. வீட்டிலும் தண்டனை. பாடசாலையில் நான் கூடாத பையன். வீட்டில் உதவாத மகன். ஆதலால் இரண்டு இடங்களிலும் புறக்கணிப்பு. அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் சிறு பையன் நான்.
ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு பல பிரமுகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். நான் தெருவில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டு இவற்றை வேடிக்கைப் பார்த்தேன்.
என் தந்தை ஆடம்பர உடையில் டாம்பீகமாக வீட்டு வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றார். அவரது கையை பிடித்தபடி ஆடம்பர உடையில் ஒரு பெண். நான் வீட்டுக்குள் வந்தேன். அங்கு இருந்த விருந்தினர்களுக்கு என்னைத் தெரியவில்லை. வீட்டுக்குள் சென்ற நான் ஒரு மூலையில் நின்று ஒரு பார்வையாளரானேன். எனக்குப் பாதுகாவலராக இருக்கக்கூடிய உறவினர்கள் அப்பெண்ணைப் பற்றி நான் வெறுக்கக்கூடிய அளவுக்கு எனக்குக் கூறிக் கொண்டிருந்தனர். எனக்கு வெறுப்பு ஏற்றப்பட்டது.
என் தந்தையின் கையைப் பற்றிய படி நின்ற அந்தப் பெண், 'உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று கூறியிருந்தீர்கள். அவனை ஏன் இன்னும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை?' என்று கேட்டார். என் தந்தை, 'அவன் இப்பொழுது தெருவில் யாருடைய தலையை உடைத்துப் போட்டு எங்கே பதுங்கி இருக்கிறானோ தெரியவில்லை. உன் தலையையும் நீ கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
இப்பதிலைக் கேட்டதும் வீட்டுப் பணியாள் என்னைக் கூட்டிச் சென்று அவர்கள் முன்னிலையில் விட்டார். நான் தலை குனிந்தபடி நின்றேன். அந்தப் பெண் உடனடியாக குனிந்து என் உயரத்துக்கு ஏற்ற தனது முழங்கால்களில் நின்றபடி என் கண்களை நேராக நோக்கி எனது நாடியைத் தனது கரங்களால் தன் முகத்துக்கு நேராக நிமிர்த்தி என் கண்களை உற்றுப் பார்த்தபடி கூறினார் 'நான் உன் அம்மா. நீ அப்படியான பையன் இல்லை, நான் உன்னை நம்புகிறேன்' என்றார்.
என் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. என் அம்மாவின் கரங்கள் என் கண்ணீரைத் துடைத்தன. என்னை வாரி அணைத்துக் கொண்டார். என் அன்னையைக் கண்டேன்! அன்பை உணர்ந்தேன். அரவணைப்பைப் பெற்றேன். என்னை நான் நம்பத் தொடங்கினேன்!"
என்று கூறியுள்ளார் .
உலகப் புகழ்பெற்றவர்கள் அனைவரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதிலும் வசதிப் படைத்தவர்கள் என்றால் அவர்களுக்கு என்ன குறை எல்லாமே கிடைத்து விடும் என்று நாமே நமக்குள் கூறிக் கொள்வோம். இன்னும் சொல்லப்போனால், மேலை நாடுகள் அனைத்தும் நன்றாக வளர்ச்சி அடைந்த நாடுகள். அங்கே யாரும் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள். அடுத்தவரைப் பற்றி பேச மாட்டார்கள் என்றெல்லாம் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம்.
அங்கும் உற்றார் உறவினர்கள் எப்படி மாற்றாந் தாயை குறைவாக மதிப்பிட்டு ஒரு மகனுக்கு வெறுப்பு ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆக எல்லோரும் மனிதர்கள் தானே, உணர்வு மிக்கவர்கள் தானே! பேசும் மொழி வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். மனோபாவம் எல்லோருக்கும் ஒன்று போல் தான் இருக்கிறது என்பதை இது போல் கலை, கலாச்சாரங்களைப் பற்றி படிக்கும் பொழுது தான் புரிந்து கொள்ள முடிகிறது.