நவராத்திரியில் பெண் தெய்வங்களை ஏன் வழிபடுகிறோம் தெரியுமா?

நவராத்திரி நவ கட்டுரைகள் - 9
Navarathiri Navakanniyar
Navarathiri Navakanniyar
Published on
Mangayar Malar
Mangayar Malar

ன்னெடுங்காலமாகவே நம்முடைய சமுதாயத்தில் பெண்கள் மிகவும் ஆளுமை மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர். புராணங்கள், இதிகாசங்கள் தாண்டி இன்று வரை அந்த ஆளுமைகள் போற்றப்பட்டுதான் வருகின்றன. கூரிய மதிநுட்பம், அமைதி, அடக்கம், சரியாக  திட்டமிடும் திறன், துல்லியமாக கணித்தறியும் திறன், வீரம், பொறுமை இப்படி பல்வேறு குணங்கள் பெண்களுக்கு உரியதாக பார்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால் அவசர காலங்களில் மிகச்சரியாக முடிவெடுப்பதும், நிதானத்தோடு யோசித்து, மதிநுட்பத்தோடு செயல்படுவதும் அவர்களுக்கு உரிய குணநலன்களில் முக்கியமானவை ஆகும். அதனால் சமுதாயத்தில் பெண்களின் ஆளுமை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகத்தான் இதுநாள் வரை இருந்து வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் நம்முடைய சமூக அமைப்பே தாய்வழி சமுதாய அமைப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். பின் நாட்களில்தான் அவை மெல்ல மெல்ல உருமாற்றம் அடைந்து ஆளும் பண்பானது ஆண்களுக்கு உரியதாக மாறியது. இருப்பினும் கூட இன்றளவும் அதிகமாக ஆலோசனைகள் கூறுவதும், திட்டமிடுவதும் பெண்களுக்குரிய மிகப்பெரிய பொறுப்பாகவே  இருந்து வருகிறது.

நவராத்திரி என்பது புதுமையான ராத்திரி. நவம் என்றால் 9. மக்களை ஒன்று சேர்க்கக்கூடிய புதுமை நிறைந்த 9 ராத்திரி. நெடுநாட்கள் தவமிருந்து பிரம்ம தேவனிடம் மகிஷாசுரன் என்ற அரக்கன் அழியா வரத்தை பெற நினைக்கிறான். சற்று சுதாரித்துக் கொண்ட பிரம்மதேவன் அதே வரத்தை வேறு விதமாகக் கேட்குமாறு கூறவே, ஒரு பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று அவன் கேட்க, பிரம்மன் அவனுக்கு அந்த வரத்தை கொடுக்கிறார். அவ்வாறு வரம் பெற்ற  அசுரன் நாட்டையும், நாட்டு மக்களையும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குகிறான். இப்படி பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த அசுரனை அழிப்பதற்கு, அம்பிகை  9 நாட்கள் போரிட்டு பத்தாம் நாளில் அவனை வதம் செய்து நாட்டு மக்களைக் காப்பாற்றுகிறாள்.

Navarathiri Kanni Poojai
Navarathiri Kanni Poojai

இப்படியாக, நவராத்திரி என்பது ஒரு பெண் வதம் செய்ததை  காட்டுவதோடு மட்டுமல்லாமல், பெண் சக்தியை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும் கொண்டாடப்படுகிறது. அதன்படி மும்மூர்த்திகளின் சக்திகளையும் வாங்கிக் கொண்ட மூன்று தேவியர்களும் 9  நாட்களில் 9 வடிவம் பூண்டு அசுரனை  வீழ்த்துகிறார்கள். அசுரனது படைகளை எவ்வாறு அழிக்க வேண்டும், அவ்வாறு  அழிப்பதற்கு முதலில் அழிவை எதிலிருந்து தொடங்க வேண்டும் என்று 9 குண நலன்களை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்க்காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன.

அதன்படி, அமைதியாக திட்டமிட்டு, மிகச்சரியான நேரம் அறிந்து, பொறுமை காத்து, உரிய நேரத்தில் துல்லியமாக செயல்பட்டு, போர்க்களத்தில் பிற உயிர்களுக்கு தீமை நேராமல் கவனமுடன் செயல்பட்டு, எதிராளியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை மிகச் சரியாக அறிந்து, இப்படி ஒரு போர் வீரனுக்கு இருக்கும் அத்தனை குண நலன்களையும் மிக நுட்பமாக அறிந்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு, சாதகமாக காய்களை நகர்த்தி இந்த 9  நாட்களில் மகிஷாசுரனையும் அவன் கட்டமைத்து வைத்த சாம்ராஜ்யத்தையும் அழித்துத் தவிடு பொடியாக்கி 10ம்  நாள் மக்களை  துன்பத்தின் பிடியிலிருந்து விடுவித்து வெற்றி நாளாகக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

அதன்படி நவராத்திரியின் முதல் நாளில் அம்பாள் சைலபுத்திரி வடிவில் தோற்றமளிக்கிறார். இந்தத் தோற்றம் மிகவும் அமைதியான, சாதுவான, ஆரவாரமற்ற, தெளிவான குணத்தை குறிக்கிறது. அதன்படி அசுரனையும் அசுரன் படைகளையும் அழிப்பதற்காக தேவி முதல் நாளில் நன்கு சிந்தித்து கூர்மையான மதியால் திட்டமிடலை மேற்கொள்கிறார்.

இரண்டாவது பிரமசாரிணி அவதாரம். இந்த அவதாரத்தில் அம்பிகை அழகு நிறைந்த பெண்ணாக தன்னை வடிவமைத்துக் கொண்டு சாதுரியமாக அரக்கனின் முன் தோன்றி அரக்கனை தனது  வலையில் விழ வைக்கிறாரள். தன்னிடம் உள்ள அறிவை பயன்படுத்தி அரக்கன் செய்யும் அழிவுகளையும் பொறுத்துக்கொண்டு நிதானமாக, மன உறுதியுடன், கோபத்தை அடக்கி  அழிப்பதற்கான முதல் படியை இங்கு  தொடங்குகிறார். மூன்றாவது நாள் சந்திரகண்டா என்ற அவதாரத்தில் புலி மேல் அமர்ந்து துணிச்சல் மிகுந்த பெண்ணாக வீரத்தை போற்றும் வகையில் போருக்குத் தயாராகிறாள்.

நான்காம் நாள்  கூஷ்மாண்டா அவதாரம் எடுத்து புலி மேல் அமர்ந்து அரக்கனின் படைகளை தன்னுடைய கூரிய மதியை கொண்டு முன் பின் வரும் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்து ஆக்ரோஷமாகப் போர் புரிந்து அசுரனின் படைகளை அளிக்கிறாள். ஐந்தாம் நாளாக ஸ்கந்தமாதா வடிவில் சிங்கத்தின் மீது அமர்ந்து தன்னிடம்  உள்ள பலத்தை எல்லாம் பயன்படுத்தி போர் புரிகிறான். இந்த ஐந்து நாட்கள் போரிலேயே அரக்கனின் படைகளில் முக்கால் வாசி  அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆறாம் நாளில் காத்யாயினி அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக மாறுகிறாள். இந்நாளில்தான் போர் காட்சி உச்சத்தை நெருங்குகிறது. ஏழாம் நாள் காளராத்திரி அவதாரம் எடுத்து  தன்னிடம் உள்ள  அத்தனை ஆக்ரோஷங்களையும் வெளிப்படுத்தி அரக்கனையும், அவனது படைகளையும் அழித்து, எங்கும் மரணம் போல ஒலிக்க தீமைக்கு எதிராக பொங்கி எழுந்து கழுதை மேல் காட்சியளிக்கிறார்.

எட்டாம் நாளில் மகாகௌரி  அவதாரம் எடுத்து பசு வடிவம் கொண்டு மறுபடியும் நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் வகையில் பசுவின் மீது அமர்ந்து அமைதியாக காட்சியளிக்கிறார். ஒன்பதாம் நாள் சித்திதாத்ரி அவதாரம் எடுத்து ஆக்ரோஷத்திலிருந்து  விடுபட்டு மகிழ்ச்சியை எதிர்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு செல்வங்களையும், கொடைகளையும் கொடுத்து மக்களுக்கு தன்னுடைய ஆசிர்வாதத்தையும் அன்பையும் அளிக்கிறாள்.

இதையும் படியுங்கள்:
வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் மகிஷாசுர வதம்!
Navarathiri Navakanniyar

எந்த அளவிற்கு பெண்கள் மென்மையான குண நலன்கள் கொண்டிருக்கிறார்களோ, அதைப் போலவே, நிறைந்த மதி நுட்பமும், கூர்மையான திட்டமிடும் திறனும் கொண்டு எப்படி அசுரனை வதம் செய்து அவன் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுகிறாள் என்பதை உலகிற்கு உணர்த்தும் நாளாகவே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இயல்பிலேயே பெண்கள் சமூகத்தை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றுபவர்கள். எந்த ஒரு விழாவாக இருந்தாலும், அது பெண்கள் இன்றி முழுமை அடைவதில்லை. வைராக்கியம், மன உறுதி, பொறுமை, விடாமுயற்சி,  நிதானம், இரக்கம், தைரியம், ஆரவாரமின்மை, புதுமை, அமைதி, அடக்கம் இப்படி பல வகை குணநலங்களைப் பெற்ற பெண்கள் சமூகத்தை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். இதனாலயே பெண் தெய்வங்களுக்கு நவராத்திரி விழாவின்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவை மட்டுமல்லாது, விழாக்கள் என்றாலே ஒன்றுசேர்வதுதான். எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைத்து கஷ்ட, நஷ்டங்களையும் மறந்து ஒன்று கூடி சிரித்து பேசி பல்வேறு நிகழ்வுகளை நினைவூட்டி மகிழும் தருணங்களை விழாக்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நம்மிடையே இருக்கக்கூடிய உறவுகளுக்கும் நட்புகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும், அவர்கள் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பங்காற்றுகிறார்கள் என்பதையும்  குழந்தைகளுக்கு நேரடியாக கற்றுக்கொடுக்கக் கூடிய ஒரு நல்வாய்ப்பாக விழாக்கள் அமைகின்றன. இதன் மூலம் அடுத்து வரும் சந்ததியினருக்கு வாழ்வியலை எளிதாக எடுத்துக்காட்டி விளக்க முடியும்.

ஆகவே, சமூகத்தில் பெண் சக்தி  என்பது மிகவும் உறுதி வாய்ந்த ஒன்று. ஒரு சமூகத்தை கட்டமைப்பதிலும் நிர்வகிப்பதிலும் ஆளுமை செய்வதிலும் பெண்களின் பங்கு மிகவும் அதிகம். எனவே, அவர்களின் ஆளுமை திறனை போற்றும் வகையிலேயே நவராத்திரி விழாவில் 9 நாட்களும் பெண் தெய்வங்களை  வணங்குகிறோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com