
பெண் குலத்தைப் போற்றும் நவராத்திரி பண்டிகை
காளையர்க்கு ஓர் இரவு சிவ ராத்திரி – ஆனால்
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவ ராத்திரி
துர்கா, லஷ்மி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரைப் போற்றி வழிபடும் பண்டிகை நவராத்திரி. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்தப் பண்டிகையின் முக்கிய அம்சம் 3, 5, 7, அல்லது 9 படிகள் அமைத்து, அவற்றில் பொம்மைகள் வைத்து, வழிபாடு செய்வது. ஆகவே, நவராத்திரிப் பண்டிகையை ‘பொம்மை கொலு’ என்று தமிழிலும், ‘பொம்மல கொலுவு’ என்று தெலுங்கிலும், ‘பொம்பே ஹப்பா’ என்று கன்னடத்திலும் கூறுகிறார்கள்.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் கொலு ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலு பற்றிய குறிப்பு, பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்கண்டேய புராணத்தில் உள்ளது.
எதிரிகளை அழிப்பதற்கான உபாயத்தை அருளும் படி, மகாராஜா சரதா, தன்னுடைய குரு சுமதாவிடம் ஆலோசனை கேட்கிறான். அவர் கூறிய அறிவுரையின் படி, பரிசுத்தமான ஆற்று மணலைக்கொண்டு காளிதேவியின் ரூபத்தைச் செய்கிறான். காளி ரூபத்தை அலங்கரித்து, உண்ணா நோன்பிருந்து வழிபாடு செய்கிறான் அரசன். அவனுடைய பூஜையில் மகிழ்ந்த அம்பிகை, அரக்கர்களை அழித்து புது யுகத்தை ஆரம்பிக்கிறாள். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் கொண்டு என்னை பூஜிப்பவருக்கு வேண்டும் வரன் தருவேன் என்கிறாள் அம்பிகை. அதனால், பொம்மைகள் கொண்ட கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.
நவராத்திரி பண்டிகை பற்றி மஹிஷாசுரன் என்ற அசுரன் கதையும் உண்டு. பிரம்மாவின் பக்தனான மஹிஷாசுரன், சாகாவரம் வேண்டி பிரம்மனை நோக்கித் தவமிருந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, அவன் கேட்டுக் கொண்ட படி, “ஆண்களால் நீ கொல்லப்பட மாட்டாய்” என்று வரமளித்தார். தன்னை அழிக்கும் வல்லமை படைத்தவர் யாருமில்லை என்ற அகந்தையால், மஹிஷாசுரன், மூவுலகையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கினான். மலைமகள், அலைமகள், கலைமகள் மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து துர்கா என்ற சக்தியை உருவாக்கினர். மும்மூர்த்திகளும் தங்கள் சக்தியை துர்காவிற்கு அளிக்க, துர்கா தேவிக்கும், அசுரனுக்கும் ஒன்பது நாட்கள் யுத்தம் நடைபெற்று, பத்தாவது நாள் மஹிஷாசுரன் வதம் செய்யப்பட்டான். சக்தியிழந்த மும்மூர்த்திகள் சிலையாக மாறினர். மும்மூர்த்திகளின் தியாகத்தையும், பெண் சக்தியையும் போற்றும் விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை முழுவதும் பெண்கள் சம்பந்தப்பட்டது.
இன்றும் நம் நாட்டில் பெண் திருமணமாகிப் புகுந்த வீடு சென்ற பின், நவராத்திரி கொலுவுக்குப் பொம்மைகள் வாங்கித் தருவது வழக்கத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் பெண்களுக்காக என்ற பண்டிகை போலவே, வேறு நாடுகளில் உண்டா என்று தேடியபோது கிடைத்தது ஜப்பானின் பொம்மைத் திருவிழா. ஹினாமத்சூரி என்ற இந்த பொம்மைத் திருவிழா, ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனைப் பெண்களின் தினம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தப் பண்டிகை, தங்களுடைய பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் ஆரோக்கியம், மற்றும் செழிப்பான வாழ்விற்காகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், வீட்டில் பொம்மைகள் வைத்து வழிபட்டு, அரிசியில் தின்பண்டங்கள் செய்து சாப்பிடுவார்கள். கிராமப் புறங்களில் காகிதத்தில் பொம்மைகள் செய்து, அந்த பொம்மைகளை நதியில் விடுவார்கள். அப்படிச் செய்தால், பெண் குழந்தைக்கு வரவிருந்த துரதிருஷ்டம் தடுக்கப்படும் என்பது அவர்களது நம்பிக்கை. மனித பொம்மைகள் செய்து, அந்தப் பொம்மையை தழுவிக் கொள்ளும்போது நம்முடைய துரதிர்ஷ்டம் அந்தப் பொம்மைக்கு மாற்றப்படுவதாக நம்பிக்கை. அந்தப் பொம்மை நதியில் மூழ்கும்போது துரதிர்ஷ்டம் அழிந்து விடுகிறது. பொம்மைத் திருவிழா, சைனாவிலிருந்து, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பானுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். முதலில் உயர் குடும்பத்தினரிடம் ஆரம்பித்த ஹினாமத்சூரி, இன்று ஜப்பான் முழுவதும் பரவியுள்ளது.
ஹினாமத்சூரி பண்டிகைக்கு பொம்மை அடுக்குவதற்கு அதிகபட்சமாக ஏழு படிகள் அமைப்பார்கள். ஏழு என்பது அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுவதால் ஏழு படிகள். முதல் படியில் அரசன், அரசி. அதற்கு அடுத்த படியில், அரசன் மற்றும் அரசிக்குப் பணி புரிவதற்காக மூன்று வேலையாட்கள். வேலை செய்வதற்கு வேண்டிய உபகரணங்களும் பொம்மை வடிவில் இருக்கும். மூன்றாவது படியில் ஐந்து இசைக் கலைஞர்கள், அவர்கள் வாசிக்கும் வாத்தியத்துடன். அடுத்த நிலையில் சாமுராய் எனப்படும் இரண்டு பாதுகாவலர்கள். இளைஞர் ஒருவர், வயதானவர் ஒருவர். ஐந்தாவது படியில் மூன்று வேலையாட்கள். மற்ற இரண்டு படிகளிலும் ஜப்பான் இசைக் கருவிகள், வீட்டுச் சாமான்கள் ஆகியவற்றின் பொம்மை வடிவங்கள்.
பண்டைய காலத்தில் ஹினா பொம்மைகள் காகிதம் மற்றும் வைக்கோலால் வடிவமைக்கப்பட்டன. பின்னர் பொம்மைகளை பீங்கானில் செய்யத் தொடங்கினார்கள். ஐந்து படி ஹினா பொம்மைகள் விலை 1500 முதல் 2500 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும். ஜப்பானிய குடும்பத்தில் பேத்தி பிறந்தவுடன் தாத்தா, பாட்டி குழந்தைக்கு கொடுக்கின்ற முதல் பரிசு இந்த ஹினா பொம்மைகள்.
மார்ச் 3ஆம் தேதி பொம்மைத் திருவிழா முடிந்தவுடன் சிலர் பொம்மைகளை வீட்டிலிருந்து அகற்றிவிடுவார்கள். பெரும்பாலான வீடுகளில், பொம்மைகள் அந்த மாதம் முடிவதற்குள் அகற்றப்பட்டு விடும். அப்படி, பொம்மைகளை அகற்றுவதற்குத் தாமதம் ஏற்பட்டால், அந்தப் பெண்ணின் திருமணத்தில் தாமதம் ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள்.