
பொதுமக்கள் பஸ் சேவைக்கு அடுத்தபடியாக ரயில் சேவைகளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை சென்டிரலில் இருந்து நாள் தோறும் 158 ரயில்களும், எழும்பூரில் இருந்து 96 ரயில்களும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. சென்டிரல் ரயில் நிலையத்தை நாள் தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரும், எழும்பூர் ரயில் நிலையத்தை ஒரு லட்சம் பேரும் பயன்படுத்துகிறார்கள். தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறு லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் ரயில் சேவைகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகிறது. பெண்களை போதை பொருளாகவே பார்க்கும் ஆண்களால் பெண்கள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சமீப காலமாக குழந்தை முதல் பல்லு போன பாட்டி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். தினமும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நாட்டில் எங்காவது நடந்து கொண்டு இருப்பதை செய்தித்தாள்கள் உறுதி செய்து கொண்டுதான் இருக்கின்றன.
அரசாங்கம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்போதைக்கு நடவடிக்கை எடுப்பதுடன் நின்று விடுகிறது. நிரந்தர தீர்வுக்கு எந்த முடிவும் இது வரை எடுத்ததும் இல்லை, இனிவரும் காலங்களில் எடுக்கப்போவதும் இல்லை.
அந்த வகையில் சமீப காலமாக ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில், குறுகிய தூரத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவாறே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் ரயிலில் ஏறிய கர்ப்பிணி பெண்ணுக்கு, யாரும் இல்லாததை அறிந்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண்ணை தள்ளி விட்டதில் இந்த பெண்ணுக்கு பலந்த காயம் ஏற்பட்டதுடன் கர்ப்பம் கலைந்தது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மட்டுமில்லாமல் அன்றாடம் ரயிலில் பயணிக்கும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் பெட்டிகள் மட்டுமில்லாமல் ரயில் நிலையங்களில் கூட பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. எழும்பூர், சென்டிரல், தாம்பரம், கிண்டி, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா, போலீசார் பாதுகாப்பு உள்ளது. ஆனால், பெரும்பாலான ரயில் நிலையங்களில் கேமரா வேலை செய்யவில்லை என்பதுடன் எந்தவித பாதுகாப்பும் இருப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டாலும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ரயில் பயணிகளுக்கு எதாவது அசம்பாவிதம் நடக்கும்போது மட்டுமே ரயில்வே துறையும், போலீசாரும் பாதுகாப்பை பலப்படுத்துகிறார்கள். அதற்கு பின்னர், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அந்த பெட்டியில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத நிலையே நிலவுகிறது. பெண்கள் பெட்டியில் பாதுகாப்பும் இல்லை, போலீசார் கிடையாது, கண்காணிப்பு கேமரா கிடையாது. உண்மையை சொல்லப்போனால் பெண்கள் பெட்டியை விட பொதுப்பெட்டியில் பயணம் செய்வதே பாதுகாப்பானதாக பெண்கள் உணருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு அப்பயணம் பயத்தையே ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழலில் தான் ரயில்வே நிர்வாகம் உள்ளது.
தனியாக பயணிக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் தவிர்க்க எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், மின்சார ரயில்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமெனவும் பெண் பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு ரயில்வே துறையும், மத்திய அரசும் செவிசாய்க்குமா? எப்போதும் போல் மெத்தனம் காட்டுமா?