அலுவலகம் செல்லும் பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிய…

அலுவலகம் செல்லும் பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிய…
Updated on

ன்றைய தினம் வேலைக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்கிறார்களா? தினமும் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் முன்னேறத் தடைகள் இருந்தால் எப்படி தகர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

தடை 1: திறன்களை மேம்படுத்த தடைகள் இருந்தால், தடைகள் தகர்க்க, முதலில் அந்தத் தடைகள் என்ன நிலையில் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். என்ன செய்தால் அந்தத் தடையைத் தகர்க்க முடியும் என்பது தெரிந்துவிடும். அந்தத் தடையானது, நம் அறியாமையாகக்கூட இருக்கலாம்.

நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும் நாம் வேலை செய்யும் விதத்திற்கும் இடைவெளி உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். அந்த இடைவெளியை நேர்படுத்துவது நம் முன்னேற்றத்திற்கு ஒரு வாய்ப்பு.

பெரும்பாலான நிறுவனங்களில், அவர்கள் எதிர்பார்ப்பதை விட இன்னமும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் நாம் என்ன செய்தால் நிர்வாகம் மகிழ்ச்சி கொள்ளும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். நம் தினசரி வேலைகளில் பிரச்னைகள், இடைவெளிகள், குறைகள் உள்ளன என நமக்கும் தெரிய வரலாம். மற்றவர்களும் சுட்டிக் காட்ட வாய்ப்பு இருக்கு. இதை குறை என்று எடுத்துக்கொள்ளாமல், வளர்வதற்கு ஒரு வாய்ப்பு என எடுத்துக்கொள்ளலாமே?

அறிவைப் பயன்படுத்தி, கவனம் செலுத்தும் பொழுது இந்த தடை என்ன என்பதை அறிந்துவிடுவோம். என்ன தடை என்பதை அறிந்துகொண்டு ஒண்ணும் செய்யாமல் இருக்கலாமா?

“உனக்கு அறிவு இருக்கா?” என எகத்தாளமாக யாராவது கேட்டால், “ஓ,எஸ்! வேண்டிய அளவு இருக்கு” என்று தைரியமாகச் சொல்லுங்கள். ஏனெனில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் நமக்கு வேண்டிய அறிவு, தன்மைகள், குணங்கள் உள்ளன. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அருமருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

தடை 2: “என்ன செய்வது என்று தெரியும், ஆனால் எப்படிச் செய்வது என்று தெரியவில்லை” இது இரண்டாவது தடை. இதை சக ஊழியர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளலாம். மேலதிகாரியிடம் கேட்கலாம். யாருக்கும் சொல்லித்தர நேரம் இல்லையென்றால், காசு செலவில்லாமல் இன்டெர்நெட் மூலமாக ‘கூகுல்’ குருவிடமிருந்து நாமே கற்றுக்கொள்ளலாம். தொழில் நுட்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை நிறைய விஷயங்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கு. என்ன, கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும். நேரம் செலவிட வேண்டும். உங்களாலும் முடியும்.

தடை 3:  எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், ஆனால் அதை செய்வதற்கு பயம். புதிய முறை, எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எங்கேயாவது தப்பாகி விட்டால்? என்ற பயம். இந்த பயத்தை ஒழிக்க ஒரு சின்ன பயிற்சிச் செய்யலாமா?

நீங்கள் இப்பொழுது உட்கார்ந்தபடியே கண்ணைக் மூடி, கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செய்த ஒரு நிகழ்வை/செயலை உங்க நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அப்பொழுது என்ன பார்த்தீர்கள், என்ன கேட்டீர்கள், என்ன உணர்ந்தீர்கள் என்பதை மறுபடியும் இப்பொழுது நடப்பதுபோல் நினைவுபடுத்தி  உணருங்கள். உங்களுடைய மனக் கண்களுக்குள் அந்தத் தன்னம்பிக்கை உள்ள உங்களுடைய உருவம் தெரியட்டும். அந்தக் கம்பீரமான உருவம், எதிர்காலத்தில் ஒரு புது முன்னேற்றத்தைச் செய்வதுபோல் கற்பனை பண்ணுங்கள். உங்களுக்குள் ஒரு புது உற்சாகம் பிறக்கும்.இது வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் அடிக்கடி செய்யும் பயிற்சி. அவர்களது மனச் சித்திரத்தில் வெற்றி அடைவது போல் நினைத்த பிறகு விளையாடுவார்கள். மனதில் நினைத்துவிட்டால், நிஜத்தில் செயலாக்கி விடலாம்.

தடை 4: நீங்கள் செய்துகொண்டிருப்பதையே செய்தீர்கள் என்றால், இப்பொழுது கிடைத்துக்கொண்டிருப்பதுதான் கிடைக்கும். உயர்வதற்கு மேலும் படிக்க வேண்டும், திறனை வளர்க்க வேண்டும். யோசியுங்கள் - கடந்த 5 வருடங்களில் நீங்கள் உங்கள் அறிவு பரப்பை மேம்படுத்துவதற்கு என்ன செய்தீர்கள்? அவ்வளவாக இல்லை என்றால், நீங்கள் விழித்து எழுவதற்கு இது ஒரு வாய்ப்பு. இன்று எதை வேண்டுமானாலும் யாரும் கற்றுக்கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் போதும்.

உதாரணத்திற்கு, தாங்கள் செய்து வரும் பணியின் தரத்தை உயர்த்தும் வகையில், வகுப்புகள் உண்டு என்றால், அந்த  வகுப்பு எங்கு நடக்கின்றது என அறிய முயலுங்கள். என்ன ஃபீஸ், எவ்வளவு வகுப்புகள், எத்தனை நாட்கள், வார நாட்களிலா, வார கடைசியிலா என்றெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.

நீங்கள் வேலையில் இருந்துகொண்டே எப்படி படிக்க முடியும் என்பது குறித்தும் செயலாக்கத் திட்டம் போடுங்கள். இதை எல்லாம் யோசித்து உங்களுக்குத் தோதான வகுப்பில் சேர்ந்து படித்து உயருங்கள்..

முன்னேற்றத்திற்குத் தேவையான இன்னொன்று, நாம் சரியாகச் செயல்படுகிறோமா என்பதை குறித்து மதிப்பீடுவது. இதற்கு நம் மேலதிகாரியுடன் கலந்து பேசி ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.  இந்த இடத்தில் அவர்களுடன் நம் உறவு மிக முக்கியம்.

பெர்ஃபார்மன்ஸ் அப்ரைஸல் - உங்களுடைய வேலையை பற்றிய உங்கள் நிறுவனத்தின் மதிப்பீடு - இது உங்களுக்கு இந்தத் தடையைத் தகர்க்க மிகவும் உபயோகமாக இருக்கும். பெரும்பாலும் மதிப்பீடு என்றாலே நடுங்கிதான் பழக்கம். என்ன சொல்வார்களோ, என்னை குறைவாக எடை போடுவாங்களோ என்றெல்லாம் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.

இதை எப்படிக் கையாளலாம்?

“இந்த குறிப்பிட்ட வேலை செய்தது சரியில்லை” என்று பாஸ் சொன்னால், ‘என்னை எப்பொழுதும் குறை சொல்கிறார்’ என்று எண்ணாமல், அவர் நாம் ‘செய்யும் வேலையை’தான் குறிப்பிடுகிறாரே தவிர ‘நம்மை’ இல்லை; செயலைப் பற்றிதான் மதிப்பீடு, - நம்மைப் பற்றி இல்லை என்று புரிந்துகொண்டு பாசிடிவ் அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். இந்த வித்தியாசத்தை பாஸும், ஊழியரும் புரிந்துகொள்வது மிக்க அவசியம். இதை சரிவர கையாள்வது ஊழியரின் வளர்ச்சிக்கு அவசியம்.

உங்கள் வேலையின் திறன்களையும் தரத்தையும் உயர்த்துவதற்குப் பல வழிகளைக் கண்டோம். இதில் உங்கள் நிலையைப் புரிந்துகொண்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் உங்கள் ஆற்றலை மேம்படுத்துங்கள். தன்னம்பிக்கை ஊற்றாகப் பெருகும்.

logo
Kalki Online
kalkionline.com