கண்ணுக்கு இனிய காட்சியினை விண்ணுக்கு முட்டி நிற்கும் மலைத்தொடர்கள் காட்டுகின்றன. புகைவண்டித் தொடர் போலத் தோன்றும் இமயமலை தொடர்கள் நமக்கு இயற்கை அரண்கள். பாறைகளின் குவியல்களே மலைகள் என்றால் அவை ஒவ்வொன்றும் யானையின் வடிவங்களோ என எண்ணத் தோன்றுகின்றன. சிறு பாறைகள் யானை இடும் சாணத்துண்டுகளாய்த் தென்படுகின்றன.
இவ்வரிய காட்சிகளின் நடுவில் வெள்ளியை உருக்கி விட்டார் போல் அருவிகள் மலைகளில் இருந்து வழிவதைக் காணலாம். கீழிறங்கி வரும் வெள்ளருவிகள் வற்றாத நதிகளாய், ஆறுகளாய் நடந்து வரும் விதம் நாட்டை செழிப்பாக்குவதில் சதம்.
கொல்லென்று சிரித்து வேடிக்கை பார்க்கும் நட்சத்திரச் சேடியர்கள்! முக்காடிட்டு முகத்தைக் காட்டும் நிலவரசி எத்தனை இயற்கை எழில் காட்சி!
பசுவின் மடியினை கன்று மூட்டுதல் போல மலை முகட்டில் முட்டுகின்ற முகில்களையும் காணலாம். சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, காவிரி போன்ற நதிப்பெண்கள் நடனமாடுவதற்கு தேவைப்படுவது, மலைகளும், மலைகளில் வாழும் மரங்களும் தான்.
இயற்கை இன்பத்தின் இதயம் என்றால் மரங்கள் இயற்கையின் ஆன்மாக்கள்! மக்களின் ஆன்மாக்களும் மரங்களே. எண்ணிறந்த மரங்கள், செடிகள், கொடிகள்! கண்ணிறைந்த வண்ண வண்ண பூக்கள்! எங்கு நோக்கினும் பூம் பொழில்கள்! நிறைந்த தேசம் இந்திய தேசம்.
தாமரைத் தடாகங்கள், தண் பொய்கைகள்! ஏரிகள்! சாரைப்பாம்பு நெளிந்தாற் போன்று ஓடும் சிற்றோடைகள். பச்சை கம்பளம் விரித்தார் போன்று காட்சி தரும் வயல் வெளிகள்! கம்பளத்தில் நடனமிடும் காரிகையர் போல் சற்று மேலே சிறகடித்து பறந்து செல்லும் பறவையினங்கள்!
வயற் கரையில் பாட்டியின் பாம்படம் போல் தொங்கவிடும் இளநீர் குலை தாங்கிடும் தென்னைகள்! இளநீரை பந்தென எறிந்து விளையாடும் குரங்குகள் இத்தகைய எழில்மிகு காட்சியினை காணும் பொருட்டு இந்தியாவில் வெளிநாட்டார் அலையென திரண்டு வரும் காட்சி! இயற்கை இன்பத்தில் வரும் மாட்சி!
குற்றால அருவியில் குளிக்காதவர் உண்டோ? கொடைக்கானல் போகாத கொம்பன் உண்டோ? குமரி நாட்டுப் பொற்பரப்பு அருவி திற்பரப்பு அருவியேயாம், குளிக்க குளிக்க மகிழ்ச்சி! குளிரக்குளிர மன நெகிழ்ச்சி.
பண்டைக்கால தமிழன் பகுத்து வைத்த நிலங்கள் ஐந்து. அந்த ஐவகை நிலங்களிலும் பாலை நிலம் நீங்கலாக நால் வகையிலும் இயற்கையின் இன்பத்தை நம்மால் உணர முடியும்.
குறிஞ்சியினின்று நெய்தல் வரை மலை வளமும், மண் வளமும் மிக்க நாடு நம் பாரதம். இவற்றிற்கெல்லாம் காரணம் இயற்கை. இயற்கை என்றால் மண், மழை, நீர், காடு, ஆறு, கடல், குளம் என்னும் சூழலியல் ஆகும். சூழலியலைச் சமநிலை படுத்துவது மரங்களும், விலங்குகளும் ஆகும்.
மரங்கள் மனித உயிர் வாழ்க்கைக்கு ஊட்டச்சத்தளிக்கும் ஊசிகள். ஒரு மனிதனின் தேவைக்கான நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம் அனைத்தும் தருவது மரங்களே. அவன் தரும் துன்பங்களை எல்லாம் மரங்கள் தாங்கி கொள்கின்றன.
“உலகம் பலவிதம்; பலவித உலகங்களில் கொலை இல்லாத உலகம் இன்ப உலகம். அதுவே கவியுலகம். கவி என்பது பாட்டு; பாட்டின் உறைவிடம் இயற்கை” என்கிறார் தமிழ் தென்றல் திரு.வி.க. பாட்டு காதுகளுக்கு இனிமை வழங்குகிறது. இயற்கை கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மக்களுடைய மன அமைதிக்கு இயற்கையே இனிய நண்பன் என்பதால் தான் இயற்கையோடு ஒன்றி கவி பாட ஆரம்பிப்போம்.