டாக்டர் நாச்சியார்
டாக்டர் நாச்சியார்

கண் மருத்துவ சேவைக்குக் கிட்டிய பத்மஸ்ரீ விருது!

ரே மருத்துவமனை நிறுவனத்துக்குக் கிட்டிய மூன்றாவது பத்மஸ்ரீ விருது இது. இரண்டு ஆண் மருத்துவர்கள், ஒரு பெண் மருத்துவர் என ஒரே குடும்பத்தின் மூன்று நபர்களுக்கு வெவ்வேறு ஆண்டுகளில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது தனிச் சிறப்பு. ஆம். இந்த ஆண்டு 2023 – 2024க்கான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கௌரவத் தலைவர் டாக்டர் ஜி. நாச்சியார். அவருக்கு வயது எண்பத்தி மூன்று.

டாக்டர் நாச்சியார் அவர்களுக்கு மங்கையர் மலர் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உரையாடினோம்.

Q

ஒரே மருத்துவமனை நிறுவனத்துக்கு இது மூன்றாவது பத்மஸ்ரீ விருதா?

A

மாம். அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனத் தலைவரும், எனது மூத்த சகோதரருமான டாக்டர் ஜி. வெங்கடசாமிக்கு 1974ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. அதன் பின்னர் 2௦௦6ல் அரவிந்த் கண் மருத்துவமனையின் கௌரவத் தலைவரும், என் கணவருமான டாக்டர் நம்பெருமாள்சாமிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இப்போது நடப்பு 2௦23 - 2024ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது எனக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் பொதுநல கண் மருத்துவ சேவைக்குக் கிட்டியுள்ள மூன்றாவது பத்மஸ்ரீ விருதாகும் இது.

Q

உங்களின் மருத்துவக் கல்வியினை எங்கிருந்து தொடங்கினீர்கள்? கண் மருத்துவம் மீது என்ன அத்தனை ஈர்ப்பு?

A

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1963ல் பொது மருத்துவம் எம்.பி.,பிஎஸ்., தேர்ச்சி பெற்றேன். தூத்துக்குடி மாவட்டம், வடமலாபுரம் கிராமம் எங்கள் பூர்வீகம். அப்போது 196௦களில் எங்கள் கிராமப் பகுதிகளில் கண் பார்வைக் குறைபாடு நிறைய நபர்களிடம் இருந்தது. அது எங்கள் குடும்பத்தினரின் மனதை மிகவும் உறுத்தியது. அதற்காகவே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கண் மருத்துவப் படிப்பில் மிகுந்த ஆர்வமும் தனி அக்கறையும் கொண்டிருந்தோம். அதனால் பொது மருத்துவ தேர்ச்சிக்குப் பின்னர் கண் மருத்துவப் படிப்புகளில் நானும் தனிக் கவனம் செலுத்திப் படிக்கத்  தொடங்கினேன்.

டாக்டர் நாச்சியார்
டாக்டர் நாச்சியார்
Q

 கண் மருத்துவம் சார்ந்து என்னென்ன படித்துத் தேர்ச்சி பெற்றீர்கள்

A

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966ல் கண்ணியல் மருத்துவப் பட்டயப் படிப்பில் தேர்ச்சி அடைந்தேன். மதுரை பல்கலைக்கழகத்தில் 1969ல் கண் மருத்துவத்தில் எம்.எஸ்., தேர்ச்சி பெற்றேன். 1973ல் அமெரிக்காவின் சிக்காகோ நகரம் இலினாய் பல்கலையில் கண்ணியல் நோய் ஆய்வுக்கான ஃபெல்லோஷிப் பயிற்சி பெற்றேன். 1978ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகர் ஹார்வார்ட் பல்கலையில் கண்ணியல் நோய் ஆய்வு, நரம்பியல் கண் மருத்துவ ஃபெல்லோஷிப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றேன். மேற்கண்ட படிப்புகளுக்கு இடையேயும் 1965ல் மதுரை அரசு எர்ஸ்கின் மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினேன்.

இதையும் படியுங்கள்:
உடைந்த உறவை ஒட்ட வைக்கும் 7 வழிகள்! 
டாக்டர் நாச்சியார்
Q

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் எப்போதிருந்து பணியாற்றத் தொடங்கினீர்கள்?

A

ன் மூத்த சகோதரர் டாக்டர் வெங்கிடசாமியும், மேலும் நான்கைந்து மருத்துவர்கள் என மொத்தம் ஏழு பேரால் 1976ல் தொடங்கப்பட்டது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. 1977ல் மருத்துவ அதிகாரியாக நான் இங்கு பணியில் சேர்ந்தேன். அப்போதிலிருந்து படிப்படியாக பணி உயர்வு பெற்று இயக்குனர் பணி வரை செயல்பட்டேன். தற்போது கௌரவத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

Q

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் சேவைகள் குறித்து...

A

நாற்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்னால் பத்துப் பனிரெண்டு படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. இப்போது தினசரி பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் நோய் தொடர்பான சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் நபர்களுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். பரவலாக நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆங்காங்கு கண்ணொளி மையங்கள் நடத்தி வருகிறோம். மதுரை, தேனி, நெல்லை, கோவை, பாண்டி, சென்னை, திருப்பதி உட்பட ஏழு நகரங்களில் எங்களின் முதல் நிலை கண் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும், எட்டு நகரங்களில் எங்களின் இரண்டாம் நிலை கண் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனத்தில் மொத்தம் நாநூற்றைம்பது கண் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றார்கள். அதில் எங்கள் குடும்பத்தின் தலைமுறையில் நாற்பது நபர்கள் கண் மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர். எங்களின் அரவிந்த் கண் மருத்துவமனைகளில் இரண்டாயிரத்து ஐந்நூறு செவிலியர்கள் கண் மருத்துவப் பணிகளில் இயங்கி வருகின்றனர்.

Q

இந்த பத்மஸ்ரீ விருது குறித்து...

A

ங்கள் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு பெரும்பாலும் கட்டணம் ஏதும் இல்லாத சேவையினைத் தொடர்ந்து செய்து வருகிறோம். சராசரியாகக் கணக்கிட்டால் 48  சதவிகித நோயாளிகளுக்கு முழுமையாகக் கட்டணம் இல்லாத மருத்துவ சேவையினைச் செய்து வருகிறோம். சுகாதாரத் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வருவதை முன்னிட்டு இந்த பத்மஸ்ரீ விருது எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தனி ஒரு நபருக்கு வழங்கப்பட்ட விருதாக நான் நினைக்கவில்லை. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைகளின் அனைத்து கண் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் அனைவருக்குமாக வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதாகவே எண்ணி நான் மிகவும் ஆத்ம திருப்தி கொண்டுள்ளேன்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com