

எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக உயரிய நான்கு விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சிவசங்கரி. இலக்கியத்தில் சிவசங்கரியின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் மணிமகுடமாகத் திகழ்கிறது பத்மஸ்ரீ விருது.
1942-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி ஆடிட்டர் சூர்யநாராயணன் – ராஜலட்சுமி தம்பதிக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் சிவசங்கரி. பள்ளிப் பருவத்திலேயே கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம் பயின்றவர். சென்னை எஸ்.ஐ.டி. மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். திருமணத்துக்குப் பிறகுதான் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார் சிவசங்கரி.
150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரை தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 2 வாழ்க்கை சரித்திரங்கள் போன்ற பல படைப்புகளை எழுதியிருக்கிறார். மூன்று தலைமுறையினரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் இவரது `பாலங்கள்’ நாவல், கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் விருதைப் பெற்றது. வார இதழ் ஒன்றில் இவர் எழுதி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற `சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?’ என்ற சுயமுன்னேற்றக் கட்டுரை தொகுப்பு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசைப் பெற்றது. இவரது `வேரில்லா மரங்கள்’ நாவல், கொல்கத்தாவின் பாரதீய பாஷா பரிஷத் அமைப்பின் விருதைப் பெற்றது.
தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இவர் எழுதிய `சூரியவம்சம்’ நூலுக்கு, 2023-ஆம் ஆண்டு சரஸ்வதி சம்மான் விருது கிடைத்தது. இப்படி ஏராளமான விருதுகளுக்கும், பட்டங்களும் சொந்தக்காரர் சிவசங்கரி.
தம் எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளை உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைப்பதில் வல்லவர் இவர். ஒரு மனிதனின் கதை, அவன் போன்ற நாவல்களின் மூலம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், மதுவுக்கு அடிமையானவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். 47 நாட்கள், கருணைக்கொலை, நண்டு, எதற்காக, திரிவேணி சங்கமம், வானத்து நிலா, நான் நானாக, மலையின் அடுத்த பக்கம் போன்ற இவரது நாவல்கள், வாசகர்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேட்டி கண்டது மட்டுமில்லாமல், ராஜீவ் காந்தியுடன் இரண்டு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு அவரை பேட்டி எடுக்கும் வாய்ப்பும் பெற்றவர் சிவசங்கரி. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை நேர்காணல் செய்து எழுதும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகமான லைப்ரரி ஆஃப் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட காலப் பெட்டகத்தில் (டைம் கேப்ஸ்யூல்) சிவசங்கரியின் குரல் இடம்பெற்றிருக்கிறது. அவரது `பாலங்கள்’ நாவலில் இருந்து ஒரு அத்தியாயத்தை அவரது குரலிலேயே படிக்கச்சொல்லி அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐநூறு வருடங்களுக்கு சிவசங்கரியின் குரல் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சிறப்பு எத்தனை எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும்? சிவசங்கரிக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் இது.
தமிழ் வாசகர்களால், குறிப்பாக, பெண்களால் கொண்டாடப்பட்ட எழுத்து சிவசங்கரியுடையது. அவர் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் சரி, எந்த மேடையில் பேசினாலும் சரி, பெண்கள் அவரது பேச்சை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்கள். வெறும் ரசிப்புடன் நின்று விடாமல் அவரது கருத்துக்களை தம் வாழ்வில் கடைப்பிடிக்கவும் செய்தார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சிவசங்கரி பேசிய வாழ்வியல் சார்ந்த கருத்துக்களை இன்றளவுக்கும் ரசிப்பவர்கள் பலர்.
சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகளுடன் தன் எழுத்தை குறுக்கிக் கொள்ள விரும்பாத சிவசங்கரி, `இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற மாபெரும் திட்டத்தை முன்னெடுத்து, 16 வருடங்கள் ஒரு தவம் போல செயல்பட்டு, அந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அந்த லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக, புனைவிலக்கியத்திலிருந்து முற்றிலுமாக விலகி இருந்தார்.
பல மாநில எழுத்தாளர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தியதுடன், அவர்கள் வழியே அந்தந்த மாநில மக்களின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு, பழக்கவழக்கங்கள், இலக்கியங்கள் போன்றவற்றை மற்ற இந்தியர்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சிவசங்கரி முன்னெடுத்து செயல்படுத்திய அந்தத் திட்டம் பலதரப்பிலிருந்தும் அவருக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றுத் தந்தது. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு தொகுதிகளாக வெளிவந்த `இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ நூலை சிவசங்கரியின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
எழுத்துப் பணியுடன் நில்லாமல், சமூகப் பணிகளையும் திறம்பட ஆற்றி வருபவர் சிவசங்கரி. எழுத்தாளர் மாலன், உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் உள்ளிட்டோருடன் இணைந்து அக்னி அறக்கட்டளையைத் துவக்கி, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்காக ஏராளமான நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றினார்.
எழுத்துக்கும், பேச்சுக்கும் நூலிழைகூட வித்தியாசமில்லாமல் வாழ்ந்து வருபவர் சிவசங்கரி என்பது, அவர் செய்து வரும் சமூகப் பணிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் 101 இலவச திருமணங்களை தம் சொந்த செலவில் நடத்தி வைத்திருக்கிறார். அதே ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்கென பிரத்தியேக ஆலயம் எழுப்ப பெருந்தொகையை அளித்திருக்கிறார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்கென தாராளமாக நிதியுதவி செய்து வருகிறார். வறுமை நிலையில் உள்ள பலருக்கு மருத்துவ வசதி கிடைக்க, உதவிக்கரம் நீட்டி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை ஊன்றுகோல்களை வழங்கியிருக்கிறார். மிகுந்த தெய்வ நம்பிக்கை வாய்ந்தவரான சிவசங்கரி, பல்வேறு ஆலயங்களுக்குத் தேவையான பொருட்களை, நிதியுதவியைச் செய்து வருகிறார். இவர் செய்து வரும் நலத் திட்ட உதவிகளைப் பட்டியலிட முடியாது. காரணம், வலது கை கொடுப்பது வலது கைக்கே தெரியக்கூடாது என்பதைப்போல, தாம் செய்யும் உதவிகளைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ள அவர் என்றுமே விரும்புவதில்லை.
`பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இனிய தருணத்தைக்கூட, இயல்பாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அவரிடம் வெளிப்பட்டது.
"83 வயதை எட்டியுள்ள எனக்கு, இது மிகவும் காலந்தாழ்ந்து அளிக்கப்படும் விருது என்று பலர் சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. கடவுளுக்குத் தெரியும், யாருக்கு, எதை, எப்போது கொடுக்கவேண்டும் என்று. இந்தியக் குடிமகனுக்கு வழக்கப்படும் மிக உயரிய விருதை மத்திய அரசு எனக்கு அளிக்க முன்வந்துள்ளதற்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்த்தமுள்ள, முழுமையான வாழ்க்கையை நான் வாழ வழிவகுத்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்" என்கிறார் சிவசங்கரி, தமக்கே உரித்தான அடக்கத்துடன்.
இன்னும் பல சிகரங்களைத் தொடர சிவசங்கரிக்கு வாழ்த்துகள்!