
அன்று: துரோணரைத் தாக்கிய ஓணான்!
பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணாச்சாரியார் இருந்தார். பாண்டவர்களோ அறிவில் சிறந்து விளங்க , துரியோதனாதியர்களோ மூடர்களாக விளங்கினார்கள்.
தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து வருந்தினான் அரசன் திருதராட்டினன்.
துரோணாச்சாரியாரிடம் வந்த அவன் ,"ஆசிரியரே! நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாகக் கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்குச் சரியாகச் சொல்லி தருவது இல்லை. அதனால்தான் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும் என் மக்கள் மூடர்களாகவும் விளங்குகின்றனர்.
உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டால் உங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவில் ஒரே அளவு உடையவர்களாக அல்லவா இருக்க வேண்டும்? "என்று கோபத்துடன் கேட்டான்.
"அரசே! என்னிடம் வஞ்சகம், சூழ்ச்சி எதுவும் கிடையாது. மாணவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துத்தான் பாடம் சொல்லித் தருகிறேன். அவரவர் இயல்புக்கு ஏற்ப கற்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? " என்றார்.
அவரின் கருத்தை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் அருகிலிருந்த சீடன் ஒருவனை அழைத்தார் துரோணர்". நீ உடனே ஓடிச்சென்று பாண்டவர்களிடமும் துரியோதனாதியர்களிடமும் தம் ஆசிரியரை ஓணான் தூக்கிச் சென்றுவிட்டது என்று சொல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வந்து சொல்" என்றார்.
துரியோதனாதியர்களிடம் சென்ற அவன் ,"நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்றுவிட்டது" என்றான்.
இதைக்கேட்ட துரியோதனன் கோபத்துடன் நம் ஆசிரியரை தூக்கிச் சென்ற ஓணான் இனத்தைச் சும்மா விடக்கூடாது. கண்ணில்படும் ஓணான்களையெல்லாம் கொல்வோம் ",வாருங்கள் என்று தன் தம்பியர்களிடம் சொன்னான்.
"அண்ணா !அப்படியே செய்வோம்" என்று தம்பியர்களும் புறப்பட்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினார்கள். பல ஓணான்கள் கொல்லப்பட்டன.
அங்கிருந்து புறப்பட்ட சீடன் பாண்டவர்களிடம் வந்தான். "நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்றுவிட்டது" என்றான்.
இதைக் கேட்ட தருமன் சிரித்தான். "நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர். அவரை ஓணான் தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?" என்று கேட்டான்.
தம்பிகளும் தருமனுடன் சேர்ந்து சிரித்தார்கள்.
துரோணாச்சாரியாரிடம் திரும்பி வந்த சீடன் நடந்ததை அப்படியே சொன்னான்.
அருகிலிருந்த திருதராட்டினனைப் பார்த்து, " அரசே! நீங்களும் நடந்ததை கேட்டீர்கள் அல்லவா? உங்கள் மக்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் இல்லை. இங்கிருந்தால் என்னை ஓணான் தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா ? ஓணான் வேட்டையில் இறங்குவார்களா? பாண்டவர்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் உடனே புரிந்து கொள்கிறார்கள் சிறந்த அறிவு பெறுகிறார்கள்". என்றார் துரோணாச்சாரியார்.
ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தான் திருதராட்டினன். மூடர்களாக இருக்கும் தன் மக்களை நினைத்து வருத்தத்துடன் அங்கிருந்து சென்றான்.
இன்று: சிறுவனின் விளக்கம்
ஞாபகம்:
சிறுவயதில் நாம் தரையில் விழுந்து விட்டால் அழுவோம். நம்மை சமாதானப்படுத்த அம்மா தரையை அடித்து பார்த்தாயா ?நீ விழுந்த தரையை அடித்துவிட்டேன். இனி உனக்கு வலிக்காது என்று கூறி சமாதானம் செய்வார் .நாமும் அதை சரி என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் இன்றைய குழந்தைகள்.
மாற்று யோசனை:
வாசல் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது சிறுவனை கையில் பிடித்தபடி ஒரு பாட்டி தெருவிலிருந்த பூக்களை எல்லாம் பறித்தபடி வந்து கொண்டிருந்தார். வேடிக்கைப் பார்த்துக் கொண்டுவந்த சிறுவன் கால் இடறி கீழே விழுந்து விட்டான்.
அதைக் கவனித்த பாட்டி ரோட்டை காலால் மிதித்து பார்த்தாயா? நீ விழுந்த இடத்தை அடித்துவிட்டேன் .இனி உனக்கு வலிக்காது. ரோடு தான் மோசம். நீ என் செல்லம் இல்லையா? என்று பேரனுக்கு ஆறுதல் கூறினார்.
அதைக் கவனித்த சிறுவன் "போ பாட்டி இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. ஏன்னா நான் விழுந்த இடத்தை அடிச்சா அந்த மண்ணுக்கு என்ன வலிக்கவா போகுது? மண்ணுக்கெல்லாம் வலிக்காது. அதோ பாருங்க அந்தத் தாத்தா கடப்பாரையால் குழி தோண்டி மரம் நடுகிறார். அப்போ இந்த கடப்பாரை வலியையே தாங்கக்கூடிய பூமிக்கு என் வலியை தாங்க முடியாதா? பூமிக்கு வலிக்குமுன்னு என்னை சமாதானப்படுத்துவதற்காக பொய் சொல்லாதே" என்று திருப்பி சொன்னது. குழந்தையின் அந்தப் பகுத்தறியும் திறன் இந்தக் கதையோடு என்னை பொருத்தி பார்க்க வைத்தது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் இன்றைய சிறுவர்கள். இனி திருந்திக்கொள்ள வேண்டியது பெரியவர்களாகிய நாம்தான்!
- இந்திராணி தங்கவேல்