
காலச் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் அனைவருமே சமயத்திற்கு தகுந்தாற்போல் உடை அணிய ஆரம்பித்து விட்டோம். ஆனாலும் சில நேரங்களில் நாம் சௌகரியம் என்று நினைத்து அணிந்திருக்கும் உடையே அசௌகரியமாக எண்ண வைத்து விடும். அதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்கிறோம்? எந்த உடை அணிந்தால் நம் பாதுகாப்பிற்கு வசதி என்பதை இப்பதிவில் காண்போம்.
புடவை :
புடவை என்று கூறினாலே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு', 'முந்தானை பார்த்து 300 கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி', 'காஞ்சிபட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சு தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்' என்ற பாடல் வரிகளை நாம் எந்த நாளும் நினைவில் வைத்திருப்போம். இதிலிருந்து நம் புடவையின் பங்களிப்பை நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் நம் பாரம்பரிய உடை அது என்பதால் அதற்காக நாம் கொடுக்கும் முக்கியத்துவமும் தனிதான். ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்றவாறு அவ்வப்பொழுதிலிருந்து சேலைகளை அணிந்து அழகு சேர்க்கிறோம்.
காட்டன் புடவை அணிந்தாலும் அதில் ஒரு நளினம் மிளிரும் வகையில் பார்த்து அணிவோம். பட்டு அணிந்தாலும் அதற்கேற்ற நகைகளை அணிந்து விசேஷ தினங்களில் அழகு சேர்ப்போம். அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்றுதான் கூற வேண்டும். இன்றும் திருமணம் என்று வந்துவிட்டால் அனைவரும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஷாப்பிங் செய்வது புடவைக்குத்தான்.
இன்றும் திருமணத்தன்று பெண் அணிந்திருக்கும் புடவையைப் பார்த்து ரசிப்பதில் எல்லோருக்கும் ஒரு தனி ஆனந்தம் உண்டு. இப்பொழுதெல்லாம் பெண்ணே வந்து திருமண புடவையை செலக்ட் செய்து விடுவதால் திருமணத்தன்று அணியும் பொழுது யாருக்கும் எந்த பயமும் ஏற்படுவது இல்லை.
ஆனால் முன்பெல்லாம் அப்படியா? பெண்ணிடம் அத்தனை முறை விசாரித்து ஒரு புடவையை எடுத்து, அதற்கான பிளவுஸ் தைப்பதற்கான அளவு ஜாக்கெட்டை அவரிடம் இருந்து வாங்கி தைத்து எடுத்துச் சென்று திருமணத்தன்று தான்அணிவிப்போம். அப்பொழுது ஆளாளுக்கு ஒரு குறை நிறை கூறுவார்கள். அதையெல்லாம் புடவை எடுத்தவர்கள் பொறுத்துக் கொண்டு ஆக வேண்டும்.
பொங்கல், புது வருடப் பிறப்பு, பூஜை போன்ற விசேஷ நாட்களில் பெண்கள் அணிவது புடவையைத்தான். அதற்கு ஏற்றவாறு நம் புடவையைத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பது நம் பாரம்பரிய கலாச்சாரத்தின் சிறப்பு.
மாடர்ன் டிரஸ்:
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது இந்த மாடர்ன் டிரஸ். அணிய அனைவரும் விரும்புவதன் காரணம் அணிவதற்கு மிகவும் எளிமையாக, வேலை செய்வதற்கு மிகவும் ஏற்றதாக, துவைத்து காய வைத்து எடுப்பதற்கும் அதிக சிரமம் இல்லாமல் இருப்பதால்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக பயணங்களுக்கு மிகவும் ஏற்றது சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற துணி வகைகளே. இவற்றை அணிய எடுத்துக் கொள்ளும் நேரமும் மிகக் குறைவே. ஒரு இடத்திற்கு செல்வதற்கு காலதாமதம் ஆகாமல் காப்பாற்றுவது மாடர்ன் டிரஸ்களே. வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தற்பொழுது அதிகமாக செலவு செய்து கவுன் மற்றும் விதவிதமான துணிமணிகளை வாங்குவதற்கு யாரும் தயங்குவது இல்லை. அதை அணிந்து விட்டு அப்படியே வைக்காமல் அடிக்கடி அணிந்தும் அழகு பார்க்கிறார்கள்.
வெளிப்பயணங்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அதிகமாக எடுத்துச் செல்கிறார்கள். காரணம் இதை மடித்து எடுத்துச் செல்வதற்கு அதிக இடம் பெட்டிகளில் தேவை இல்லை. மேலும் துவைத்து உலர்த்தி அணிவதும் எளிது. வெளிப்பயணங்களில் புடவையை போல் தடுக்காமல் இருக்கும். நீண்ட நடைக்கும் அவைதான் வசதி.
'வீட்டு வேலை, கம்ப்யூட்டர் பணி, பயணங்களுக்கு ஏற்றது மாடர்ன் ட்ரெஸ்ஸே; பாரம்பரிய பண்டிகைகளுக்கு ஏற்றது புடவைகளே' என்று சொன்னால் சரியாக இருக்குமோ? என்னங்க நாங்க சொல்லறது?